ஹஸ்பர் ஏ ஹலீம்
கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகமவின் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் இன்று திங்கட் கிழமை(23) சிங்கப்பூர் நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர் அங்கு 23 தொடக்கம் 26 வரையிலான நான்கு நாட்கள் நடைபெறவிருக்கும் விசேட நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
திருகோணமலை நகர அபிவிருத்தி திட்டம் எனும் தொனிப் பொருளில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேசத்தையும் சேர்த்து உள்ளடக்கியதான திருகோணமலை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பிலும் அங்கிருக்கும் சபானா நிறுவன குழுவினருடனான விசேட திருகோணமலை நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பிலும் கிழக்கு மாகாண விவசாய அபிவிருத்தி,கழிவு முகாமைத்துவம்,நீர்ப்பாசன அபிவிருத்தி தொடர்பிலான பல்வேறு திட்டங்களை நடை முறைப்படுத்தல் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் குழுவினர் இத் திட்டம் தொடர்பில் அண்மையில் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டு கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபயகுணவர்தன ஆகியோர்களுடன் மேற்கொண்ட சந்திப்பினை தொடர்ந்து இத் திட்டம் தொடர்பில் விரிவாக ஆராயவுள்ளதாகவும் சிங்கப்பூர் பயணத்தின் ஆளுனரின் உயர்மட்ட குழுவின் முக்கிய விஜயமெனவும் ஆளுனரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இத் திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக பிரதமர் அலுவலகம்,நகர அபிவிருத்தி அதிகார சபை என்பன இணைந்து முன்னெடுக்கவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இவ் உயர் மட்டக் குழுவின் சிங்கப்பூர் விஜயத்தின் போது கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம உட்பட கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.சரத் அபயகுணவர்தன, கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அஸீஸ், கிழக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன ,ஆளுனரின் இணைப்புச் செயலாளர் நிமால் சோமரட்ன போன்றோர்களும் பங்கேற்கவுள்ளனர்.
Post a Comment