தேசிய அரசாங்கத்தை காப்பாற்ற வேண்டுமெனில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளதுடன் பிரதமரை ஆதரிப்பதா அல்லது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா என்ற தீர்மானம் ஜனாதிபதி தலைமையில் இன்று கூடும் மத்தியகுழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், கட்சியின் இறுதி நிலைப்பாடு குறித்து இன்றைய தினம் தாம் இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் இன்று கூடுகின்ற மத்திய குழுக் கூட்டத்திற்கு பாரளுமன்றத்தில் ஆளும் தரப்பில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சகல பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் கூடுவதுடன் நாளை பாராளுமன்றத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் கூடி ஆராயவுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா என்ற உறுதியான நிலைப்பாடொன்றினை இன்னும் கட்சி எடுக்கவில்லை. கட்சிக்குள் இரு நிலைப்பாடுகளுமே உள்ளன. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் நாளை (இன்று ) நடைபெறுகின்றது. இதில் சகலரது கருத்துக்களையும் ஆராய்ந்து இறுதி நிலைப்பாடு ஒன்றினை நாம் எட்டவுள்ளோம்.
நான்காம் திகதியே பிரேரணை மீதான விவாதமும் அன்றைய தினம் இரவு 9 மணிக்கே வாக்கெடுப்பும் இடம்பெற்றவுள்ளது. ஆகவே அதுவரையில் எமது தீர்மானங்களை ஆராய முடியும். எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியினை துறக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். அவராக பதவியினை துறந்து வேறு ஒரு நபருக்கு வழங்குவார் என்றால் அதன் பின்னர் வாக்கெடுப்பு விவாதம் என எவையும் அவசியமிருக்காது. அவ்வாறு இல்லாத நிலையில் நாமும் ஆரோக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
அத்துடன் மக்களின் நிலைப்பாடு என்னவென்பது குறித்தும் நாம் ஆராய்ந்து வருகின்றோம். மக்களின் நிலைப்பாடு என்னவோ அதனையே நாம் செய்ய வேண்டும். அதைத் தாண்டி சர்வாதிகார போக்கில் எம்மால் தீர்மானங்களை எடுக்க முடியாது. ஜனாதிபதியின் நிலைப்பாடும் அதுவாகவே உள்ளது. அதேபோல் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல தரப்புடனும் நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
தமிழர், முஸ்லிம் தரப்பினர் மற்றும் பிரேரணையினை கொண்டுவந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியினர், ஏனைய சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகளையும் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளையும் நாம் இந்த சில தினங்களில் சந்தித்து கலந்துடையாடவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.