குப்பைமேடு கவிழந்த அந்த அனர்த்தத்தின் பின்னர் அரசாங்கம் அந்த மக்கள் மற்றும் அந்த பகுதி தொடர்பாக தெளிவான நீண்ட காலநோக்குடனான திட்டங்களை முன்னெடுக்காததை பாதிக்கப்பட்ட மக்களின் வலி நிறைந்த வார்த்தைகள் சொல்லி நிற்கின்றன.
அந்த துயர் படிந்த நாளில் நாங்கள் இங்குதான் இருந்தோம் அனர்த்தம் நிகழ்ந்த பின்னர் நிறையப்பேர் வந்தார்கள் இரண்டு மூன்று மாதங்கள் வரை பலர் வந்தார்கள் வாக்குறுதிகளை வழங்கினார்கள் ஆனால் தற்போது எவரும் வருவதில்லை என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான அக்கறையின்மை காரணமாக அந்த பகுதி ஆபத்தான நோய்கள் அபாயத்தை எதிர்கொண்டிருப்பதை திரும்பிய திசையெங்கும் பார்க்க முடிகின்றது.
தேங்கிநிற்கும் அழுக்கு நீர் அகற்றப்படாத குப்பைகள் என அந்த பகுதியில் டெங்குநோய்க்கான அனைத்து ஆபத்துகளையும் காணமுடிகின்றது.
இதுதவிர கைவிடப்பட்ட வீடுகளிற்குள் கோழிகள் வெட்டப்பட்ட கழிவுகள் போன்றவற்றையும் காணமுடிகின்றது.
தாங்கள் டெங்குநோய் ஆபத்தை எதிர்கொள்கின்றோம் என தெரிவிக்கின்றார் கௌதமி, நான் டெங்கினால் பாதிக்கப்பட்டேன் ஒரு மாதகாலம் வரை என்னை ஓய்விலிருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இது தவிர இந்த பகுதியில் வாழும் சிறுவன் ஒருவனும் டெங்கினால் பாதிக்கப்பட்டான் என அவர் குறிப்பிட்டார்.
கைவிடப்பட்ட வீடுகள் காணப்படுவதால் அந்த பகுதி சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
கஞ்சா, குடு பாவனைக்காக இந்த பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடுகளை பயன்படுத்துகின்றனர் என தெரிவித்த அவர், இரவு 10 மணிக்கு பின்னர் இளைஞர்கள் நடமாடுவதை அவதானிக்க முடிகின்றது யார்யாரோ முக்சக்கர வண்டிகளில் வந்து செல்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்
அனர்த்தம் நிகழ்ந்த பின்னர் மக்கள் வெளியேறிய பின்னர் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளின் கூரைகளை கழற்றி எடுத்துக்கொண்டு சென்றுவிற்றுவிட்டனர். வீடுகளில் எஞ்சியிருந்த பொருட்களையும் திருடிச்சென்றுவிட்டனர் எனவும் உமா கௌதமி தெரிவித்தார்.
பலமுறை முறைப்பாடு செய்துவிட்டோம் இன்னமும் எந்த நடவடிக்கைகளையும் யாரும் எடுக்கவில்லை என்ற தனது வேதனையையும் அவர் வெளியிட்டார்.
சேதமடைந்த முற்றாக அழிக்கப்பட்ட வீடுகளிற்கு அரசாங்கம் வழங்கும் நிதி குறித்த முறைப்பாடுகளையும் அப்பகுதியில் செவிமடுக்க முடிந்தது.
அரசாங்கம் வாக்குறுதியளித்த பணத்தை வழங்கவில்லை அதன் காரணமாக விரைவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட எண்ணியுள்ளோம் என தெரிவித்தார் அந்த பகுதியை சேர்ந்த முஸ்லீம் பெண்ணொருவர்.
இவ்வாறானதொரு அனர்த்தம் எவ்வேளையிலும் நிகழக்கூடும் என்ற அச்சம் எங்கள் மத்தியில் பல வருடங்களிற்கு முன்னரே காணப்பட்டது. அதிகாரிகளிற்கு நாங்கள் இதனை தெரிவித்தபோதிலும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
குப்பைமேடு சரிந்து விழுகின்றது எனது கணவர் சத்தமிட்டதையும் அவரின் பின்னால் தாங்கள் தப்பியோடியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
அரசாங்கம் வழங்குவதாக வாக்குறுதியளித்த நிதி உதவி எங்களிற்கு கிடைக்கவில்லை. பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டுவிட்டோம். புதுவருடத்தின் பின்னர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். வாக்குறுதியளித்தபடி அவர்கள் செயற்படாவிட்டால் அருகிலிருக்கும் பஸ் டிப்போவின் முன்னாள் போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டார்.
Post a Comment