முஸ்லிம் மக்களின் வேதனை, சொத்துச் சேதம் என்பவற்றை அரசியல் ரீதியல் இலாபம் பெறும் வகையில் திகன சம்பவத்தை நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கி முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவை பெற எடுத்த முயற்சியை வன்மையாக கண்டிக்கிறோம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க் கட்சியினால் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 14 அம்ச நம்பிக்கையில்லாப் பிரேரணையில் திகன சம்பவமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இது குறித்து நேற்று இடம்பெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதன் மூலம் முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவை பெற எடுத்த முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றோம். ஆளும் தரப்பு முஸ்லிம் எம்.பிக்களை தமது பக்கம் இழுக்க எடுத்த முயற்சியால் அரசாங்கம் மேலும் பலமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுக்காதது தொடர்பில் எமக்கு கவலையிருக்கிறது. முஸ்லிம்களின் சுய கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.