அம்பாறை மாவட்ட, அக்கரைப்பற்று மாநகர சபை கடந்த கால ஆட்சியைப்போல் கொண்டு செல்வதற்கு முனைந்தால், நாங்கள் ஒரு போதும் விடமாட்டோம் என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் எதிர்கட்சித்தலைவருமான சுல்பிகார் நேற்று (18) அக்கரைப்பற்றில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அக்கரைப்பற்று, மாநகர சபையில் நடக்கின்ற அபிவிருத்திகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் ஒப்பந்தம் கோரப்பட்டு, உரிய முறையில் நடைபெற வேண்டுமெனவும், ஆளணிகள் உள்வாங்கப்படுவதென்றால் முறையான விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதனூடாக தெரிவு இடம்பெற வேண்டும்.
அவ்வாறன்றி, ஒரு கட்சியின் ஆதரவாளரோ அல்லது மாநகர சபை மேயரின் ஆதரவாளரோ, கடந்த மாநகர சபையைப் போல் உள்வாங்கப்பட்டால் அதற்கு நாங்கள் உரிய முறையில் எப்.ஆர் ஏ.ஆர் போன்ற கூற்றுக்களினூடாக நடவடிக்கை மேற்கொள்வோம்.
இது போன்றுதான், நீர்நிலை மற்றும் குடியிருப்புக்களை அண்டியிருக்கின்ற மர ஆலைகளை வேறு இடங்களுக்கு மாற்றுகின்ற திட்டங்களை இந்த மாநகர சபை ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவில்லை என்றால் உரிய முறையில் நாங்கள் அதை எதிர்கொள்வதற்கு பின் நிற்கப்போவதில்லை என்றும் கூறினார் .
மேலும் முன்னூறுக்கும் மேற்பட்ட ஊழியர்களை வைத்துக்கொண்டு 5.5 கிலோ மீற்றர் சுற்றளவைக் கொண்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் வடிகான்கள் இன்னும் துப்பரவு செய்யப்படவில்லை மாறாக குப்பைகளும், மண்ணும் நிரம்பிக் காணப்படுகின்றன.
எனவே, அக்கரைப்பற்று மாநகர சபையில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன இதை முறையாக திருத்திக்கொண்டு, மக்களுக்கு சேவை செய்யவில்லையென்றால் எதிர்வரும் காலங்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதனையும் தெரிவித்தார்.
மேலும் இக்கலந்துரையாடலில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment