Top News

மார்க்க அறிவைப் பெற்று தெளிவுடன் வாழ்வோம் - எம். எஸ். எம். தாஸிம் மௌலவி



(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

அறிவை தேடுவது சகல முஸ்லிம்களின் கட்டாயக் கடமை என ஜம்மியதுஷ்- ஷபாப் பிரதிப் பணிப்பாளர் எம். எஸ். எம். தாஸிம் மௌலவி தெரிவித்தார்.

நவமணிப் பத்திரிகை ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து 05 ஆவது முறையாக நடாத்திய ரமழான் பரிசு மழை 2017 இன் பரிசளிப்பு நிகழ்வு கடந்த (19) வியாழக்கிழமை ஜம்மியத்துஷ் - ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில்  தலைமை வகித்துப் பேசுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,



அறிவை தேடுவது சகல முஸ்லிம்களின் கட்டாயக் கடமை. அந்தவகையில் சம காலத்தில் இஸ்லாமிய சமூகம் பல்வேறு சோதனைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. ஒவ்வொரு காலத்திலும் உலகை பல்வேறு படைகள்  அதாவது தரைப்படை, ஆயுதப்படை, வான்படை என ஆட்சி செய்து வந்துள்ளன.



ஆனால் இப்போது உலகை ஊடகங்கள்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டுள்ளது.  அதனோடு போட்டி போடுவதென்பது மிகவும் கடினமானது. இதனால் இஸ்லாமிய சமூகத்துடைய செய்திகளை அவ்வப்போது உலகளாவிய மட்டத்தில் சரியாகச் சொல்லுவதற்கு ஊடகங்கள் மிகமிகக் குறைவு. எமது நாட்டிலும் அதே நிலைதான் காணப்படுகின்றது. அந்தவகைகயில் நவமணிப் பத்திரிகை பாரியதொரு முயற்சியை மேற்கொண்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கது.



அத்தோடு ஜம்மியத்துஷ் - ஷபாப் நவமணிப் பத்திரிகையோடு இணைந்து 5ஆவது முறையாக   இப்போட்டியை நடாத்துவதில் பெருமை கொள்கின்றது.

தற்போதைய காலத்தில் முஸ்லிம்கள் சோதிக்கப்படுவதற்கு பிரதான காரணம் அல் - குர்ஆன் மற்றும் முஹம்மது நபியுடைய சுன்னாவில் இருந்து விலகி இருப்பதுதான் பிரதான காரணம். எனவே ரமழானில் இறக்கப்பட்ட அல் - குர்ஆனில் வழியில் வாழ்வதற்கும், அந்தக் குர்ஆனோடு எமது உள்ளங்கள் இணைந்திருப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும் இந்த ரமழான் பரிசுப் போட்டி ஏற்படுத்துகின்றது.



இப்போட்டியின் மூலமாக பாடசாலை மாணவர்களோடு சேர்த்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பயனடைகின்றனர். எதிர்காலத்திலும் இப்போட்டியை இன்னும் சிறப்பாகத் திட்டமிட்டு செய்வதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.



போட்டி திறம்பட நடைபெறுவதற்கு முழுமூச்சாக நின்று செயற்பட்ட நவமணி செய்தி ஆசிரியர் சிராஜ். எம். சாஜஹான் மற்றும் நவமணி குழாத்துக்கும் எமது ஜம்மியத்துஷ் - ஷபாப் உத்தியோகத்தர்களுக்கும் எமது விசேடமான நன்றிகள் . அத்தோடு இதற்காக பங்களிப்புச் செய்த  அத்தனை உள்ளங்களுக்கும் மற்றும் அனுசரணையாளர்கள் அனைவருக்கும் ஒட்டுமொத்தமாக  எமது நன்றிகள் என்றும் உரித்தாகும். என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தபால் துறை அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம், தேசிய நல்லிணக்க, ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, அல் - குர்ஆன், சுன்னா கற்கைக்கான இளவரசர் ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் - சவூத்தின் தாயார் சங்க பொது அலுவலகத்தின் மேற்பார்வையாளரான முஹம்மத் றியால் அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்), நவமணிப் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம். டி. எம். றிஸ்வி, வட மேல் மாகாண உறுப்பினரும் ஸ்கை வேல்ட் நிறுவன உரிமையாளருமான சஹாப்தீன் ஹாஜியார், அல் - ஜன்னத் இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ். கமால்தீன் (மதனி),  புரவலர் ஹாசிம் உமர்,  சிட்டி கார்டன்ஸ் பணிப்பாளரும் தலைவருமான ஹில்ரூ எம். சித்தீக், மெகா நிறுவன உரிமையாளர் பௌமி, அஷ் - ஷெய்க் முஹம்மத் நிஷாத், Gift Way உரிமையாளர், அல் - ஹசன் அஸ்அத் ஸகரிய்யா, மனித நேயன் இர்ஷாத் ஏ. காதர், நௌபர் மௌலவி, இம்ரான் மௌலவி, மற்றும்  கல்விமான்கள், உலமாக்கள், வர்த்தகப்பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், நவமணி உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.  

Post a Comment

Previous Post Next Post