இன்றைய நாட்டு நடப்பை வட்ஸப் மூலம் அவதானித்துக் கொண்டிருந்த சலீம் நாட்டு நிலைமைகளையும் இனங்களுக்கிடையிலான பிரிவினையை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது பள்ளியில் “அல்லாஹு அக்பர்” என்று இஷா தொழுகைக்கான அதான் ஒலிக்கவே ஸ்மார்ட் போனை வைத்துவிட்டு பள்ளிகுச் செல்ல சலீம் ஆயத்தமாகினான். அதான் கூறி முடித்து சில நிமிடங்களுக்குள் இன்னொரு குரல் ஒலித்தது.
“அஸ்ஸலாமு அலைக்கும் இன்று இஷா தொழுகைக்கு பின்னர் விஷேட கூட்டம் ஒன்று இடம்பெறும் ஊர் ஜமாஅத்தினர் அனைவரும் கலந்துகொள்ளவும்” மனையாளிடம் சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறிப் பள்ளியை நோக்கிச் சென்றான் சலீம். சைக்கிளின் சக்கரம் முன்னோக்கி சுழன்றாலும் சலீமின் நினைவுகளோ பின்னோக்கிச் சுழன்றன.
அஸர் தொழுகைக்கு பள்ளிக்குச் சென்ற சலீமுக்கோ ஒரு அதிர்ச்சி ஏனென்றால் வழமையா பள்ளிக்குப் போனா காணாதவர்கள கண்டதுதான். தொழுது முடிஞ்சி இதப்பத்தி நண்பன்டயே கேட்டான்.
“ஏன்டா வேற நாளக்கி இமாம் ஜமாத்துக்கு உன்ன பள்ளிப் பக்கம் காண்றதே கஷ்டம் இன்டக்கி மட்டும் இகாமத் சொல்ல முன்னே வந்துட்டாய்?”
“எந்நாளும் பாங்கு சொன்னவுடன் வார ஆனால் வந்து பார்த்தால் ஜமாத் முடிந்திருக்கும்.”
“அப நாட்டுல முஸ்லிம்களுக்கு அடிப்பதால குனுத் ஓத பாங்கு சொல்ல முன்னே வந்தா?”
“இல்லட இன்டக்கும் பாங்கு சொன்னவுடந்தான் வந்த ஆனா இன்டகி நமது முஅத்தின் அப்பா பத்து நிமிஷம் முந்தி பாங்கு சொன்ன அதுதான் இகாமத்துக்கு முந்தியே வந்த”
இன்று பத்து நிமிஷம் முந்தி பாங்கு சொன்னதுக்கு தண்டனை வழங்கத்தான் இந்தக் கூட்டம் என சிந்தனை உலகில் இருந்தவனுக்கு எதிரே வந்த முச்சக்கரவண்டியின் வெள்ளை ஒளி முற்றுப்புள்ளி வைத்தது.
இஷாத் தொழுகையை தொடர்ந்து கூட்டம் துவங்கியது. பள்ளி ரெஸ்டி அமீன் ஹாஜியார் பேசத்துவங்கினார். கூட்டத்தின் இறுதியில் பதற்றமான முகத்துடன் முஅத்தினர் அமர்ந்திருந்தார்.
“அஸ்ஸலாமு அழைக்கும்! வீணாக அதிக நேரம் பேச விரும்பவில்லை சுருக்கமாக மீட்டிங் வைப்பதக்கான காரணத்த சொல்றன். அதாவது நமது முஅதினர் அவர்களின் கடந்த சில மாத செயல்பாடுகள் காரணமாக எகட ரெஸ்டி போர்ட்கு பெரும் அவமானமாக உள்ளது. எனவே வந்திருக்கும் சகோதர்களில் புதிதாக ஒருவரை முஅதினரக ஊர் மக்களே நியமிக்கவும்” என சுருக்கமாக கூட்டத்தினை ஏற்பாடு செய்தமைக்கான காரணத்தை கூறிவிட்டு அமர்ந்துகொண்டார்.
சபையில் மயான அமைதி நிலவியது. அதை குழப்பும் விதமாக அபூபக்ர் ஹாஜி..
“யாவர ஸீஸன்ல இன்டக்கி 10 நிமிடம் முந்தி பாங்கு சொல்லி எகட யாவரத்தயும் குழப்பிட்டார். அது மட்டுமா சில நாளக்கி நாங்கதான் வந்து இவர ஸுபஹ் பாங்கு செல்ல எழுப்பாட்டனும்.”
தொடர்ந்தும் பலரும் பலவிதமான குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் இருந்தனர். இதனால் தீர்வுகள் இன்றி கூட்டம் தொடர்ந்த வண்ணம் இருந்தது. அப்போது உரையாடுவதற்காக ஸத்தார் மாஸ்டர் எழும்பினார். அப்போது ஆரவாரமாக இருந்த கூட்டம் அமைதி அடைந்துவிட்டது.
அஸ்ஸலாமு அலைக்கும்! நானும் அஸர் தொழப்போன ஆனால் பொதுவாக மத்த நாட்களில் அஸர் தொழ வாரவங்களவிட அதிகமானோர் இண்டகி அஸர் தொழ பள்ளிக்கு வந்த. அதிலும் எல்லோரும் முதல் ரக்காதிற்கே வந்து சேர்ந்திருந்த. இன்டக்கி முஅதினர் பத்து நிமிஷம் முந்தி பாங்கு சொன்னதலதான் இந்த நிலம. அவர் பத்து நிமிஷம் முந்தி பாங்கு சென்னத்தால அதிகமானோருக்கு இமாம் ஜமதோட தொழ கிடைச்ச ஊர் மக்கள்ட இமாம் ஜமாத்தோட தொழும் வீதத்த கூட்ட அவரு செஞ்ச இந்த முயற்சி சரியானது.
அதுசரி உங்க எல்லார்ட விருப்படி புதிசா ஒத்தர முஅதினர நியமிக்க அவர போல பொருத்தமானவர் வேற யாரு இங்க நிற்கிற. இந்த ஊர்ல எந்த மூல முடுக்கில மய்யத்தொண்டு வந்த ஆண் மய்யத்தண்ட அவரும் பெண் மய்யத்தேண்ட அவர்ட மனைவியும் போய்தான் குளிப்பாட்டுற. அவர்மாரி பாங்கு சொல்றதோட இந்த பர்லான கடமய ஒழுங்க செய்ய முடியுமான ஒராளுக்கு முஅதினர் பதவிய கொடுங்க.
அங்கிருந்த அனைவரது மனங்களும் தான் இதற்கு பொருத்தமட்டவன் என இருந்தது. தொடர்ந்தும் ஸத்தார் மாஸ்டர் உரையை தொடர்ந்தார்.
இன்டகி முஸ்லிம் சமூகத்தில இவர போல பல துறைகளில் சில வாழும் ஆளுமைகள் உள்ளனர். அவங்க ஏதும் தவறு செஞ்ச பட்டி மன்றம் எடுத்து பேசும் எகட சமூகம் அந்த ஆளுமய நாங்க திடிரென இழந்தால் அத பூர்த்தி செய்ய இன்னொரு ஆளுமய உருவாக்க ஒரு கூட்டமும் வைக்கிறல்ல.
ன்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். கூட்டத்தில் மயான அமைதி நிலவியது. சலீமுக்கு பசி வயிற்றை கிள்ளியது. அவனது கைகடிகாரம் பத்து மணியை காட்டியது. மீண்டும் பள்ளி ரெஸ்டி அமீன் ஹாஜியார் உரையாட எழும்பினார்.
“அஸ்ஸலாமு அலைக்கும். நான் முதலாவதாக எமது முஅதினரிடம் மன்னிப்புக் கேக்றன். ஒரு நிர்வாகம் மூலம் தவறன முடிவுகள் எடுக்காமல் சிறந்த முடிவுகள எடுக்க அறிவுற சொன்ன ஸத்தார் மாஸ்டருக்கும் நன்றிகள். ஸத்தார் மாஸ்டர் சொல்ற மாரி எனக்கு கூட மைய்யத் குளிப்பாட்ட தெரிய. இந்த மாறி இருந்து இந்த ஊர்ல மய்யத்தொண்டு ஏற்பட்டு அந்த நேரம் நமது முஅதினரும் நோய் வாய்ப்பட்ட வெளியூரலத்தான் மய்யத் குளிப்பாட்ட ஆள் கொண்டுவரவேண்டி ஏற்படும்.
எனவே அந்த பிரச்சினக்கு தீர்வளிக்கும் விதமாக ஊர்ல குறஞ்சது இருபது பேருக்காவது மய்யத் குளிப்பாட்டுற பற்றி ஒரு செயன்முறை கிளாஸ் ஒன்ற முஅதினரையும் அவர்ட மனைவிய கொண்டும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வைக்கவுள்ளோம்.”
அப்போது சலீம் முஅதினரின் முகத்தை பார்க்கிறார். அவரின் முகம் பௌர்ணமி நிலா போன்று பிரகாசித்தது.
கற்பனைகளுடன் கூடிய நிஜம்
கதாபத்திரங்களை பற்றி ஆராயாமல்
கருத்துக்களை நிறைவேற்றுங்கள்
இப்னு அஸாத்
Post a Comment