வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித கட்சி வேறுபாடுகளுமின்றி அபிவிருத்தி வேலைகள் இடம்பெறும் என வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை நிர்வாகத்திற்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவு இன்று கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை நிர்வாகத்திற்கான தவிசாளரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றுக் கொண்டுள்ளது. எம்மை தெரிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எந்தவித கட்சி வேறுபாடுகளுமின்றி அபிவிருத்தி வேலைகள் இடம்பெறும். எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை மென்மேலும் முன்னெடுத்துச் செல்வதே எங்களுடைய நோக்கமாகும்.
எமக்கு வழங்கப்பட்ட ஆணையின் பிரகாரம் மக்களின் தேவைகளை இணங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வோம். அத்தோடு எமது பிரதேசம் அபிவிருத்தியில் முன்னேற்றும் பெரும் வகையில் எமது சேவை தொடரும் என தெரிவித்துள்ளார்.
மேலும், இதன்போது கருத்து வெளியிட்ட கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் எஸ்.அஸ்மி குறிப்பிடுகையில்,
முஸ்லிம் தலைமைகள் விட்ட தவறினால் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் பதவியை இழந்துள்ளோம்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை ஆட்சி அதிகார விடயத்தில் முஸ்லிம் தலைமைகள் சரியான முறையில் தமிழ் தரப்புடன் பேசி இருந்தால் ஆறு முஸ்லிம் உறுப்பினர்கள் இருக்கும் பட்சத்தில் ஒரு உப தவிசாளர் பதவி பெறும் வாய்ப்பு இருந்தது.
இவ்வாறு முஸ்லிம் பகுதியினருக்கு உப தவிசாளர் பதவி கிடைத்திருந்தால் ஒரு இனபாகுபாடு இல்லாத சபையாக நாங்கள் இதனை கொண்டு சென்றிருக்க முடியும். இது முஸ்லிம் தலைமைகள் விட்ட தவறு என்பதை நான் இந்த இடத்தில் கூறுகின்றேன்.
முஸ்லிம் தலைமைகள் தமிழ் தரப்பினருடன் பேசி இருந்திருந்தால் அவர்கள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருப்பார்கள், முஸ்லிம் தலைமைகள் காலம் செய்யும் அரசியலை ஒரு சாக்கடை அரசியலாக இந்த இடத்தில் காட்டிக்கொண்டது மிகவும் வெட்கப்படக்கூடிய நிலைப்பாடாக இருந்தது.
எனவே எதிர்காலத்தில் சபையை நல்ல முறையில் வழி நடத்திச் செல்வதற்கு அனைவரும் சேர்ந்து செயற்படுவோம் என குறிப்பிட்டுள்ளார்.