Top News

தங்கள் நிலத்துக்கு உரிமை கொண்டாட இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - சவுதி இளவரசர்



இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு தாங்கள் வாழும் பகுதியை தாய்நாடாக சொந்தம் கொண்டாடும் உரிமை உண்டு என சவுதி அரேபியா இளவரசர் முஹம்மது பின் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.

ஷியா இனத்தவர்கள் பெரும்பாலாக வாழும் ஈரானுக்கும் சன்னி இனத்தவர்கள் பெரும்பாலாக வாழும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் நெடுங்காலமாக தீராப்பகை நிலவி வருகிறது.

இருப்பினும், பாலஸ்தீனம் உள்ளிட்ட பிரச்சனைகளில் இருநாடுகளும் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான ஒருமித்த நிலைப்பாட்டை பேணி வருகின்றன. பாலஸ்தீனத்தில் இருந்து உருவாக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டில் இஸ்லாமியர்களின் புனிதத்தலமான அல் அக்ஸா மசூதி அமைந்துள்ளது.

இந்த மசூதியின் பரம்பரை பாதுகாவலராக சவுதி மன்னர் பரம்பரை இருந்து வருகிறது. ஆனால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தூதரக ரீதியிலான எவ்வித உறவுகளும் இல்லை. எனினும், பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவிவரும் பகைமை நீங்கி நல்லுறவை ஏற்படுத்தும் அரபு நாடுகளின் அமைதி முயற்சிக்கு சவுதி அரேபியா கடந்த 2002-ம் ஆண்டிலிருந்து தலைமையேற்று வருகிறது.

ஆனால், ஏமன் நாட்டில் அதிபரின் ஆட்சியை வீழ்த்துவதற்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை மறைமுகமாக தூண்டிவிடுவதுடன் ஆயுத உதவியும் செய்துவரும் ஈரான் அரசை சவுதி அரேபியா கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஏமன் அதிபருக்கு தேவையான விமானப்படை உள்ளிட்ட உதவிகளை சவுதி தலைமையிலான அரபு நேசநாட்டுப் படைகள் செய்து வருகின்றன. இவ்விவகாரத்தில் சவுதிக்கு ஆதரவாக அமெரிக்காவும், இஸ்ரேலும் இருந்து வருகின்றன.

இஸ்ரேல்-லெபனான் எல்லை

இந்நிலையில், பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ள சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான், தங்கள் நிலத்துக்கு உரிமை கொண்டாட இஸ்ரேலுக்கு உரிமை உண்டு என குறிப்பிட்டுள்ளார். 

அவரது இந்த புதிய கருத்து பாலஸ்தீனம் - இஸ்ரேல் விவகாரத்தில் இத்தனை ஆண்டு காலமாக சவுதி அரேபியா கடைபிடித்து வந்த நிலைப்பாட்டில் இருந்து மாறுபாடு கொண்டதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தற்போது கருதுகின்றனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான், அங்கிருந்து வெளியாகும் ‘தி அட்லான்ட்டிக்’ செய்திப் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோட்ல்கெர்க் என்பவர் சமீபத்தில் பேட்டி கண்டார்.

‘தங்களது பூர்வீக தாய் மண்ணில் ஆவது யூத மக்களுக்கு ஒரு தாய் நாட்டை அமைத்துகொள்ளும் உரிமை உண்டா?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான்,’ எங்கு இருந்தாலும், எல்லா மக்களுக்கும் தங்களது அமைதியான நாட்டில் வாழும் பரிபூரண உரிமை உள்ளதாக நான் நம்புகிறேன். இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இந்த உரிமை உள்ளதாகவே நான் நம்புகிறேன்’ என குறிப்பிட்டார்.

ஆனால், அனைவருக்குமான நிரந்தரத்தன்மை மற்றும் சராசரியான உறவு ஏற்படுவதற்கு ஒரு அமைதி ஒப்பந்தத்தை நாம் உருவாக்கியாக வேண்டும்.

ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்ஸா மசூதி விவகாரத்தை பொருத்தவரை பாலஸ்தீன மக்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டிய மதம்சார்ந்த பொறுப்பு சவுதி அரசாங்கத்துக்கு உண்டு. மற்றபடி, எந்த மக்களுக்கு எதிராகவும் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் கிடையாது என்றும் சல்மான் கூறியுள்ளார்.
Previous Post Next Post