பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி விடுத்த மூன்று வரி உத்தரவை மீறி, வாக்கெடுப்பின் போது கலந்து கொள்ளாது புறக்கணித்தன் காரணமாக அத்துரலியே ரதன தேரரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பிரித்தானிய நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவான இந்த மூன்று வரி உத்தரவின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படாது போனால், நடவடிக்கை எடுக்க அந்த உத்தரவு சாட்சியமாக எடுத்துக்கொள்ளப்படும்.
மூன்று வரி உத்தரவை ஐக்கிய தேசிய முன்னணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் கயந்த கருணாதிலக்க, கடந்த 3 ஆம் திகதி அனுப்பி வைத்திருந்தார்.
இதனடிப்படையில், உத்தரவை மீறியமை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை, தமது சட்டப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.