Top News

ஜனாதிபதி அச்சத்தில் உள்ளார் - காரணம் இதுதான் எனக் கூறும் மகிந்த!

Related image

ஜனாதிபதி நாட்டில் இல்லாத காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்துவிடும் என்ற அச்சத்தினாலேயே நாடாளுமன்ற அமர்வு ரத்து செய்யப்பட்டதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மத நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றத்தின் அமர்வுகளை ரத்து செய்து, மே மாதம் 8ம் திகதி, புதிய நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி விடுத்திருந்தார்.

இது அவர் நாட்டில் இல்லாத காலப்பகுதியில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் இடம்பெறும் என்ற அச்சத்தினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் என்று மகிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

அதேநேரம், அவநம்பிக்கை பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பிரதமருக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் கீழ், மேலும் காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த உடன்படிக்கையின் பின்னரே வலிகாமம் வடக்கில் 683 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டிருப்பதாக, செய்தியாளர்கள் சிலர் மகிந்த ராஜபக்ஷவிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் இதோடு திருத்தப்படாது என்றும், இன்னும் பல விடயங்கள் நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post