சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திக் கண்காட்சியானது சிறந்த சந்தை வாய்ப்புக்கு வழிகோலியுள்ள அதேவேளை அதீத வருமானமீட்டும் நல்லதொரு இலகுவான துறையாக விளங்குகிறது.
எமது இளைஞர் யுவதிகள் அரசதொழில்களின் மீதுள்ள மோகத்தை கைவிட்டு பொருத்தமான சிறுதொழில் முயற்சியாண்மையின் பக்கம் கவனம் செலுத்தி வெற்றி காண முடியுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ காதர் மஸ்தான் தெரிவித்தார்.
நேற்று வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சிறுதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களின் அலங்கரிக்கப்பட்ட விற்பனைக் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற்றும் பொழுதே இதனைத் தெரிவித்தார்.
வவுனியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் அபிவித்திப்பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றியதாவது.
இங்கு காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் அனைத்துப் பொருட்களையிடும் பார்வையிடும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. சிறந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தரமான பொருட்களாக இவை விளங்குகின்றன இவற்றுக்கு நிச்சயம் சிறந்த சந்தை வாய்ப்புகள் உள்ளன.
இந்த சிறு முயற்சியாளர்கள் வங்கிக் கடன் பெறுவதற்காக பல அசெளகரியங்களை எதிர்கொள்வதாக இங்கு என்னிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அவற்றை நீக்குவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் வவுனியா மாவட்ட செயலாளர் சோமரட்ன விதான பத்திரண உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.