Top News

முஸ்லிம்களுக்கு தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ.! அப்போது இன உறவில் விரிசல் விழத்தொடங்கியது







ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

முஸ்லிம்களுக்கு தமிழர்களுக்கு என எப்பொழுது பிரிக்கப்பட்டதோ.! அப்போது இன உறவில் விரிசல் விழத்தொடங்கியது.. முஸ்லிம் ஆசிரியைகளது ஆடை தொடர்பான பார்வை… சாஜகான் ஆசிரியர்.
(”வட கிழக்கு வாழ் முஸ்லிம்கள், எங்களுக்கென்று தனித்தனியாக ஒவ்வொன்றும் வேண்டும் என்று சிந்திக்கத் தலைப்பட்டதற்குப் பின்னால் பாரிய வரலாற்றுக் காரணிகள் இருக்கின்றன. அந்தக் காரணிகளை மனதுக்குள் அசைபோட்டுக் கொள்ளுங்கள்.” )

நான் என்ஜி ஓவில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில்தான் கல்குடா கல்வி வலயத்திலிருந்து முஸ்லிம் பாடசாலைகளுக்காகத் தனியான ஒரு கல்வி வலயமாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் துவக்கப்பட்டது. நான் பணியாற்றியது இனங்களுக்கிடையிலான நல்லுறவை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனம் என்பதால், இது தொடர்பான சாதக பாதக அம்சங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டன. அப்போது, நிறுவனத்தின் மாவட்டப் பணிப்பாளர் மறைந்த திரு. சாந்தலிங்கம் ஐயா (அங்கிள்) அவர்கள் ஒரு கருத்துச் சொன்னார்.

“எங்களது காலத்தில் இது தமிழனுக்குரியது இது முஸ்லிமுக்குரியது என்று எந்தப் பாடசாலையோ எந்த அரச நிறுவனமோ பிரித்து வைக்கப்பட்டிருக்கவில்லை. ஒன்றாகப் படித்தோம், ஒன்றாக வேலை செய்தோம். அதனால் எங்கள் தலைமுறையில் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. எப்போது தனித்தனியாகப் பிரித்து வைக்கத் தொடங்கினோமோ அப்போது இன உறவில் விரிசல் விழத்தொடங்கியது.”

வாஸ்தவமான கருத்துத்தான். வட கிழக்கு வாழ் முஸ்லிம்கள், எங்களுக்கென்று தனித்தனியாக ஒவ்வொன்றும் வேண்டும் என்று சிந்திக்கத் தலைப்பட்டதற்குப் பின்னால் பாரிய வரலாற்றுக் காரணிகள் இருக்கின்றன. அந்தக் காரணிகளை மனதுக்குள் அசைபோட்டுக் கொள்ளுங்கள்.

விஷயத்திற்கு வருவோம். திருகோணமலை ஸ்ரீ ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளது ஆடை தொடர்பான விவகாரம்!

முஸ்லிம் பெண் ஆசிரியைகள் ’அபாயா’ ஆடை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்காக முன்கூட்டியே முகநூலில் விடுக்கப்பட்டிருந்த அழைப்பொன்றில் பல்வேறு விடயங்களில் இரண்டு விடயங்கள் (முதலாவதும் மூன்றாவதும்) எனது கவனத்தை ஈர்த்தன.

//நாளை நடைபெற போவது வெறும் கண்டன ஆர்ப்பாட்டம் மட்டுமல்ல....

1)தமிழ் சமூகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான விழிபூணர்வு.

3)தமிழ் பாடசாலைகளிலும் முஸ்லிம் இனத்தவரை ஆசிரியர் பணியில் அமர்த்த முடியும் எனும் எண்ணம் மூலம் எமது தமிழ் வேலையில்லா பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகள் சூறையாடும் நப்பாசைக்கு வைக்க போகும் முற்றுப்புள்ளி.//

இவ்விரு விடயங்களையும் கூர்ந்து அவதானியுங்கள். முதலாவது விடயத்தின் வாயிலாக சொல்லப்படும் கருத்தின் அடிநாதம் என்ன? முஸ்லிம்கள், தமிழ் மக்களது இருப்புக்கு எதிரானவர்கள்.

இரண்டாவது கருத்தின் வாயிலாக சொல்லப்படுவது? முஸ்லிம்கள், தமிழருக்குச் சேரவேண்டிய வேலைவாய்ப்பு முதலியவற்றைத் தட்டிப்பறிக்கின்றார்கள்.

இதே விஷத்தைத் தான், ஆயுதமேந்திய பாசிசக்குழுக்கள் முன்னாளில் செய்தன. சாமான்யத் தமிழ் மக்களின் மனதில் முஸ்லிம்கள் நமக்குச் சொந்தமான அனைத்தையும் கொள்ளையடிப்பவர்கள் எனும் கருத்தை வலிமையாக விதைப்பதில் அந்தப் பாசிசக்குழுக்கள் வெற்றிபெற்றதன் விளைவாகத்தான், இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இனவிகிதாசாரப்படி மொத்த நிலப்பரப்பில் 27% இருபத்தேழு சத வீதத்திற்கும் அதிகமாக இருக்கவேண்டிய நிலப்பரப்பில் வெறும் 2.5% இரண்டு புள்ளி ஐந்து சதவீத நிலப்பரப்பை மாத்திரமே கொண்டிருக்கும் முஸ்லிம்களை நோக்கி ஒவ்வொரு தமிழனும் ‘முஸ்லிம்கள் எங்களது காணிகளை ஆக்கிரமிக்கின்றார்கள்’ என்று நம்பவைத்தது நடந்தது. நிற்க.

இனப்பிரச்சினை இலங்கையில் ஏற்படுத்திய பேரழிவுகள் இனியும் ஏற்படாதிருப்பதற்காக, யுத்தத்திற்குப் பிந்திய திட்டமிடல் மூலமாக அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளில் ஒன்றுதான் யுத்தத்திற்கு முந்திய காலகட்டத்தில் காணப்பட்டது போன்று மூவின மக்களும் கலந்து பணியாற்றுவதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது. இந்த அடிப்படையிலேயே சமீப காலங்களில் வழங்கப்பட்ட அரச நியமனங்கள் கலப்பு முறையில்தான் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது யாவரும் அறிந்த விடயம். தமிழர் பகுதியில் முஸ்லிம்களும் முஸ்லிம் பகுதிகளில் தமிழர்களும் இதேபோல சிங்களப் பிரதேசங்களும் சிங்களவர்களும் என்ற ரீதியில் அமைந்திருந்தது அது.

இந்நிலையில் குறித்த பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியைகள் ‘அபாயா’ அணிவதற்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ஐரோப்பாவிலும் இந்தியாவின் சில பிரதேசங்களிலும் கட்டவிழ்த்து விடப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்புணர்விற்கு எந்த வகையிலும் இது குறைந்ததல்ல.

இதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரபலமான தமிழ்ப்பாடசாலை ஒன்றிலும் சில நாட்களுக்கு முன் இதே பிரேரணை முன்வைக்கப்பட்டபோது முஸ்லிம் ஆசிரியைகள் அதை நிராகரித்திருந்தனர். எனவே பாடசாலை நிர்வாகம் சுமுகமாக அந்தப் பிரேரணையைக் கைவிட்டது என்ற செய்தியையும் நான் பதிவு செய்யத்தான் வேண்டும்.

முஸ்லிம்களுக்கென்று தனியான கல்வி வலயம் அமைக்கப்பட்ட போதும், நாம் அங்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதில்லை. எமது பிரதேசமான கல்குடா வலயத்திலேயே பணிபுரிவோம் என்று சில முஸ்லிம்கள் கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். சிறிது காலத்தின் பின், “முஸ்லிம்களாகிய நீங்கள் உங்களது பிரதேசத்திற்கே சென்றுவிடுங்கள். எங்களது கல்வி அலுவலகத்தில் வேலைக்கு வந்தால் கொல்லப்படுவீர்கள்” என்று புலிச்சின்னம் பதித்த கடிதம் கண்ட பின்னால்தான், அவர்கள் அனைவரும் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு ஓடிச்சென்றனர்.

இறுதியாக, இத்தனை வருட அனுபத்தில் நான் கண்டது, சாமான்ய மக்களிடம் இனத்துவேஷமோ பகையோ இயல்பில் இருப்பதில்லை. அதை விதைப்பது அதிகாரத்திலிருக்கும் கயவர்களே! அவர்கள் பாசிஸ்ட்டுகளே! பல்லினங்கள் வாழும் நாட்டில், ஒரு அரச நிறுவனம் குறித்த ஒரு இனத்துக்கு மட்டுமே சொந்தம் என்று பேசுபவர் யாராக இருப்பினும் அவர்களை, இனவாதத்தைத் தூண்டுபவர்கள் எனக் கருத்திற்கொண்டு உடனடியாகக் கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அல்லது குறித்த நபர்கள் எங்காவது சென்று ஆசிரமம் நடத்திக்கொள்ளட்டும்!

Post a Comment

Previous Post Next Post