எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடி நிகழ்ச்சிநிரல் தயாரிப்பதற்காக எதிர்வரும் 2ஆம் திகதி கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்குமாறு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி கலந்துரையாடலில் மே 8ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வுகள் குறித்து சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதுடன், நிகழ்ச்சிநிரலும் தயாரிக்கப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பொது எதிரணியால் கொண்டுவரப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் ஆதரவாக வாக்களித்ததால் தேசிய அரசுக்குள் பெரும் நெருக்கடிகளும் கருத்து முரண்பாடுகளும் வலுப்பெற்றன.
ஐ.தே.கவின் அழுத்தம் காரணமாக குறித்த 16 பேரில் அமைச்சுப் பதவிகளை வகித்தோர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்தனர்.
இதன் காரணமாக கடந்த 19ஆம் திகதி நடைபெறவிருந்த நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒத்திவைத்ததுடன், எதிர்வரும் 8ஆம் திகதி புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் என்றும் அறிவித்திருந்தார்.
அதன்படி எதிர்வரும் 8ஆம் திகதி 3 கோடி ரூபா செலவில் எட்டாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு பிற்பகல் 2.30 மணிக்கு ஆரபமாகவுள்ளது.
இந்த விடயங்கள்தொடர்பில் கலந்துரையாடவே 2ஆம் திகதி விசேட கட்சித் தலைவர் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
Post a Comment