Top News

கிழக்கு மாகாணத்தில் இனவாதத்தை வளர ஆளுநரும் அதிகார மட்டமும் அனுமதிக்கக் கூடாது

Image result for நஸீர் அஹமத்

கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு மூலையிலும் இனவாதத்தை வளர ஆளுநரும் அதிகார மட்டமும் அனுமதிக்கக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள பாடசாலையொன்றில் முஸ்லிம் பெண் ஆசிரியர்கள் ஹபாயா ஆடை அணிந்து அங்கு கடமைக்குச் செல்வது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை இனவாதத் தீயாகப் பரவுவதற்கிடையில் உடனடியாக அது தணிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவசர அறிக்கையொன்றை புதன்கிழமை இன்று மதியம் வெளியிட்ட அவர் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இனவாத, மதவாதத் தீ எந்த வடிவத்தில் காணப்பட்டாலும் அதனைக் கொளுந்து விட்டு எரிய விடாது அது பற்ற வைக்கப்பட்ட இடத்திலேயே அணைப்பது நாட்டு நலனுக்கு உகந்தது.

இல்லையேல் அநியாயமான முறையில் நாட்டு மக்கள் இழப்புக்களைச் சந்திக்க வேண்டி ஏற்பட்டு விடும்.

எனது தலைமையிலான கிழக்கு ஆட்சியில் முக்கியமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பன சுமார் இரண்டரை வருட காலம் உண்மையான நல்லாட்சியை நடாத்திய போது கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு மூலையிலும் ஒரு சிறு பொறி கூட இனவாத மதவாத தீ பற்றிக் கொள்ள இடமளிக்கவில்லை.

எமது கால நல்லாட்சி உண்மையில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக உறவுக்கு ஒரு பொற்காலமாக இருந்தது.

எமது ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநரின் பொறுப்பில் அது சென்று விட்ட கையோடு முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, அதன் பின்னர் அம்பாறை தற்போது தற்போது திருகோணமலை என்று சமூகங்களுக்கிடையில் இனவாத மதவாதத் தீ சந்தர்ப்பத்தைப் பார்த்து பற்றவைக்கப்படுகின்றது.

இதனை எந்த சமூகமும், அரசியல் மட்டங்களும், அதிகார மட்டங்களும் அனுமதிக்கவே கூடாது.

உடனடியாக நாட்டின் சட்டமும் ஒழுங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும். இனவாத மதவாதத் தீயை ஏற்படுத்துவோர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

Post a Comment

Previous Post Next Post