கண்டி, தெல்தெனிய திகன உள்ளிட்ட பல பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற இனக்கலவரங்களுடன் தொடர்புடைய CCTV காணொளிப் பதிவுகள் இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான வழக்கு இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் நடைபெற்றபோதே குறித்த காணொளிப் பதிவுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த காணொளியில் மஹாசொன் அமைப்பின் பிரதானி அமித் வீரசிங்கவும் காணப்படுகின்றார் என அறியப்பட்டதனை தொடர்ந்து, இன்று நீதிமன்றிற்கு சமூகமளிக்கான அமித் வீரசிங்கவை எதிர்வரும் 10 திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாகத் தெரிவித்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 9 பேரையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில் பொது ஜன முன்னணியிலிருந்து குண்டசாலை பிரதேச சபைக்கு தெரிவான சமந்த பெரேரா என அழைக்கப்படும் அரலிய சமந்தவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஒன்றிற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள தமது கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான ஒன்று கூடலில் பங்கேற்பதற்கான அனுமதியையே அவர் கோரியிருந்தார்.