கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய ஆவேச தாக்குதல் 37 பேர் கொல்லப்பட்டனர்.
1967-ம் ஆண்டுவரை ஜோர்டான் வசமிருந்த கிழக்கு ஜெருசலேம் நகரை கைப்பற்றிய இஸ்ரேல் அரசு கடந்த 1980-ம் ஆண்டில் இந்நகரை தங்கள் நாட்டுடன் இணைத்து கொண்டது. ஜெருசலேம் நகரில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் நிறைந்துள்ளதால் மூன்று மதத்தினரும் இந்நகரை தங்களுக்கே உரிமையாக்கி கொள்ள முயன்று வருகின்றனர்.
கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் யூதர்கள் சொந்தம் கொண்டாடிவரும் ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இஸ்ரேல் அரசு அத்துமீறலாக அமைத்த வசிப்பிடங்களில் சுமார் 2 லட்சம் யூத இனத்தவர்கள் வாழ்கின்றனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான காஸா என்ற பகுதியை கைப்பற்றியுள்ள ஹமாஸ் போராளிகள், ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பிடியில் இருந்து மீட்பதற்காக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2005-ம் ஆண்டுவரை காஸா முனையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இஸ்ரேல் அரசு பின்னர் அங்கிருந்து படைகளை விலக்கி கொண்டாலும், இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டின் தலைநகரான டெல் அவிவ் நகரில் இயங்கிவந்த அமெரிக்க தலைமை தூதரகத்தை கிழக்கு ஜெருசலேம் நகருக்கு மாற்ற உத்தரவிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் நாட்டின் புதிய தலைநகராக கிழக்கு ஜெருசலேம் நகரை அங்கீகரிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொற்றியுள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே உச்சகட்ட மோதல் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, காஸா எல்லைப்பகுதியில் இருந்து ஹமாஸ் போராளிகள் ராக்கெட்களை இஸ்ரேல் நாட்டுக்குள் வீசி தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் விமானப் படைகள் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகள் முகாம்களின்மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இஸ்ரேல் ஆக்கிரமித்து வைத்துள்ள தங்களது தாய்மண்னில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீடுகளில் குடியேற வேண்டும் என்று வலியுறுத்தி காஸா முனையில் தங்கியுள்ள பாலஸ்தீனிய மக்கள் கடந்த ஆறு வாரங்களாக காசா எல்லைப்பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் தாய்மண்ணை இஸ்ரேல் அபகரித்த நாளான 15-5-1948 என்ற தேதியை நினைவுகூரும் வகையில் வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் (நாளை) தங்களுக்கு சொந்தமான இடங்களில் குடியேறும் நோக்கத்தில் இந்த போராட்டத்தை அவர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இவர்களின் போராட்டம் வன்முறையாக மாறும் வேளைகளில் இஸ்ரேல் நாட்டு படைகள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இன்று கிழக்கு ஜெருசலேம் நகரில் இன்று அமெரிக்க தூதரகம் திறக்கப்படும் நிலையில் காஸா எல்லைப்பகுதியில் சுமார் 35 ஆயிரம் பேர் குவிந்து உச்சகட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஸா எல்லைப்பகுதியில் யாரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த கூடாது என இஸ்ரேல் அரசின் சார்பில் நேற்று துண்டு பிரசுரங்கள் வீசப்பட்டன. ஆனால், இதை பொருட்படுத்தாமல் காசா எல்லையோரத்தில் உள்ள தடுப்பு வேலியின் அருகே பல்லாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் இன்று திரண்டனர்.
கம்பி வேலியை வெட்டி இஸ்ரேலுக்குள் ஊடுருவ முயன்றதால் பாலஸ்தீனத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில் குழந்தைகள் உள்பட 37 கொல்லப்பட்டதாகவும் சுமார் ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் பாலஸ்தீனம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இஸ்ரேல் அரசின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாலஸ்தீனம் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, பாலஸ்தீன அரசின் செய்தி தொடர்பாளர் யூசுப் அல்-மஹமூத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் நாட்டு மக்கள் மீது இன அழிப்பு தாக்குதல்களை நடத்திவரும் இஸ்ரேலை விவகாரத்தில் சர்வதேச நாடுகள் உடனடியாக தலையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இவர்களுடன் சேர்ந்து கடந்த ஒருமாதத்துக்குள் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர், பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment