ஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் பலியானதாக செய்தி வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசுப்படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக உள்நாட்டுபோர் நடந்து வருகிறது. இந்த போரில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டு உள்ளனர்.
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் பக்கபலமாக இருந்து வருகிறது. அதே சமயம் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஏமனில் வான்தாக்குதலை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் தலைநகர் சானாவில் இருந்து 120 கி.மீ தொலைவில் உள்ள மேரிப் நகரில், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியை குறிவைத்து, கத்யூஷா என்கிற ஏவுகணையை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வீசினார்கள்.
இந்த ஏவுகணை அந்த பகுதியில் விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர்.
மேலும் 22 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
Post a Comment