
ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பர்யாப் மாகாணத்தில் இன்று நிகழ்ந்த சாலையோர குண்டு வெடிப்பில் வாகனத்தில் சென்ற 7 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க படைகள் திரும்ப பெறப்பட்ட பின்னர், தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை தங்கள் வசம் பிடித்துவைத்துள்ள தலிபான்கள் போட்டி அரசு ஒன்றை நடத்தி வருகின்றனர்.
மேலும், பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கார் குண்டு, மனித வெடிகுண்டு, கழுதைகளின் உடலில் கட்டிய வெடிகுண்டு, சாலையோரம் புதைத்து வைக்கும் வெடி குண்டுகளின் மூலம் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி பொதுமக்களை தலிபான்கள் கொன்று குவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் வடக்கு பர்யாப் மாகாணத்தை சேர்ந்த சில வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இன்று ஒரு வாகனத்தில் பிரபல சந்தைப்பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சாலையோரத்தில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டின் மீது அவர்கள் சென்ற வாகனம் ஏறியதில் குண்டு வெடித்து வாகனம் தூக்கி எறியப்பட்டது. இந்த குண்டு வெடிப்பில் அந்த வாகனத்தில் சென்ற 7 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.