அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழ இருப்பதாக தெரியவருகின்றது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் எமது முஸ்லிம் அமைச்சர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் என்பதுதான் இன்றைய எதிர்பார்ப்பாகும்.
அதாவது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அமைச்சு பதவியினை பெறுவார்களா ? அல்லது தங்களது கட்சி பிரமுகர்களை திருப்திபடுத்தும் வகையில் அமைச்சுப்பதவியை பெற்றுக்கொள்ள போராடுவார்களா ?
அல்லது அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் மாற்று கட்சி பிரமுகர்களை விலைகொடுத்து வாங்குவதற்காக பணம் சம்பாதிக்கும் வகையில் உழைக்க கூடிய அமைச்சு பதவிகளை பெறுவார்களா ? என்ற குழப்பத்தில் முஸ்லிம் மக்கள் இருப்பதனை காணக்கூடியதாக உள்ளது.
எமது நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்களில் ஒவ்வொரு பிரதேசத்தில் உள்ளவர்களினதும் தேவைகளும், பிரச்சினைகளும் வெவ்வேறானது. அந்தவகையில் வடக்கு முஸ்லிம்களின் அடிப்படை பிரச்சினைகளும், அவர்களது உட்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் மீள்குடியேற்றம் என பூரணமாகாத நிலைமை அங்கு காணப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது கிழக்கு மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசங்கள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறிய முஸ்லிம் குக்கிராம மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
1990 இல் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது அவர்கள் விட்டுச்சென்ற காணிகள் முழுவதும் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளது.
அத்துடன் வடக்கிலே மீள்குடியேற்றப்பட்ட பல இடங்களின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளது.
இந்த நிலைமையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் மீள் குடியேற்றப்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்யக்கூடிய அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டால் அம்மக்களின் பிரச்சனைகளை விரைவாக தீர்த்துவைப்பதற்கு இலகுவாக இருக்கும்.
அதைவிடுத்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுடனும், மீள்குடியேற்றப்பட்ட மக்களுடனும் எந்தவித தொடர்பும் இல்லாததும், ஆடம்பரமானதுமான அமைச்சர் பதவிகளை அரச தலைவர்களுடன் போராடி பெற்றுக்கொள்வதன் மூலம் எமது மக்கள் எதனை அடைந்துகொள்ள போகின்றார்கள் என்பதுதான் அனைவரது மனதிலும் எழுகின்ற கேள்விகளாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
Post a Comment