Top News

ரமழான் வழிபடும் மாதமே தவிர வழிகெடுக்கப்படும் மாதமல்ல

Image result for asking dua

இந்த ரமளானும் பிறைச் சண்டையுடன் ஆரம்பிக்கின்றது. இஸ்லாம் ஓர் இலகுவான மார்க்கம். அதை ஏன் நாங்கள் கஷ்டமாக்க வேண்டும். பிறைகண்டு நோன்பு பிடிக்கவும் பிறை கண்டு நோன்பை விடவும்தான் மார்க்கம் நமக்கு கட்டளையிட்டிருக்கின்றது. நாட்டில் எங்கும் பிறை காணப்படவில்லை. அதை உலமாசபை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதற்குமேல் நாம் ஏன் குழம்ப வேண்டும். ஏன் ஒவ்வொருவரும் முப்திகளாக மாறவேண்டும்.

மார்க்கத்தில் குழப்பங்கள் ஏற்படுவதன் பின்னணி என்ன?
—————————————————————-
அண்மையில் Tntj யின் மௌலவி ஒருவரின் உரை கேட்கக் கிடைத்தது. அதில் பி ஜே தொடர்பாக பேசுகின்றார். அவ்வுரையில் பி ஜே யை நாங்கள் பின்பற்றவில்லை; அவர் அபூபக்கரைவிட......( ரலியல்லாஹு அன்ஹு) உயர்ந்தவரா? அபூபக்கரையே.....( ரலியல்லாஹு அன்ஹு) நாங்கள் பின்பற்றவில்லை. ஷாபியைவிட....( கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) உயர்ந்தவரா? அவரையே நாங்கள் தூக்கிப் போட்டுவிட்டோம். இவரை நாங்கள் பின்பற்றுவோமா? இவர் ஒரு ஆய்வாளர்; அவ்வளவுதான். நாங்கள் குர்ஆன், ஹதீசையே பின்பற்றுகிறோம்; எனக்கூறினார். ( இந்த உத்தமர்களின் பெயர்களைக் கூறும்போது அவர்களுக்குரிய கண்ணியம் கொடுக்கப்படாமல் இவர்களெல்லாம் அந்த மௌலவியின் classmate கள் போல் மொட்டையாகவே அவர் பேசியதைக் குறிப்பிடுவதற்காகவே அவர்களது பெயர்களைத் தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளி மேலே விடப்படுகின்றது).

அது ஒரு புறம் இருக்க, அந்த மௌலவியின் பேச்சைக் வெளிப்படையாகப் பார்த்தால் அவர் சொல்வது சரியாகவேபடும். இவ்வாறுதான் அவர்கள் சமூகத்தை வழிகெடுக்கின்றார்கள். ஆனால் அவரது பேச்சின் யதார்த்தம்தான் tntj இனதுமட்டுமல்ல, அனைத்து வழிகெடுக்கும் கூட்டத்தினதும் அடிப்படையாகும்.

ஒரு முஸ்லிம் குர்ஆனையும் ஹதீசையும்தான் பின்பற்ற வேண்டும்; என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்துக்கொள்ள முடியாது. ஆனால் இவர்கள் கூறுவது, குர்ஆன், ஹதீசைத்தான் பின்பற்ற வேண்டும்; இமாம்களை பின்பற்றத் தேவையில்லை; என்பதன் பொருளென்ன?

குர்ஆன், ஹதீசை அடிப்படையாக கொள்ளாமல் கதைப்புத்தங்களை வாசித்து இமாம்கள் கருத்துக்கூறியிருந்தால் இவர்கள் கூறுவது சரி. இமாம்கள் செய்ததென்ன? குர்ஆன், ஹதீசை வியாயக்கினப் படுத்தியிருக்கிறார்கள். குர்ஆன், ஹதீசை ஆராய்ந்து மார்க்க சட்டங்கள்த் தொகுத்திருக்கின்றார்கள்.

சரி, அவர்களின் ஆய்வும் தேவையில்லை. வியாக்கயானமும் தேவையில்லை. குர்ஆன், ஹதீசை மட்டும்தான் பின்பற்ற வேண்டும்; என்றால் பி ஜே எதற்காக இவ்வளவு காலமும் ஆய்வுகள் செய்தார். அந்த ஆய்வின் முடிகளின்படி மார்க்கத்தில் இதுதான் சரி, இது பிழை என்று முடிவுகள் சொன்னார். இதைத்தானே இமாம்களும் செய்தார்கள்.

ஒரு வாதத்திற்கு, இமாம்களின் ஆய்வு முடிவுகள், வியாக்கியானங்கள் பிழை, பி ஜே யின் ஆய்வுகளும் வியாக்கியானங்களும்தான் சரி என வைத்துக்கொள்வோம். இவர்களது பிரச்சாரம் நேர்மையானதென்றால் அவர்கள் சொல்ல வேண்டும்; இமாம்களும் குர்ஆன், ஹதீசைத்தான் சொன்னார்கள், நாங்களும் குர்ஆன், ஹதீசைத்தான் சொல்கின்றோம். இங்கு பிரச்சினை குர்ஆன், ஹதீஸ் அல்ல. மாறாக வியாக்கியானங்களும் சட்டத்தொகுப்புகளும்தான். அவர்களது வியாக்கியானங்களூம் சட்டத்தொகுப்புகளும் பிழை. நாங்கள் கூறுவதுதான் சரி; என்று.

குர்ஆன், ஹதீசைத்தான் பின்பற்ற வேண்டும்; இமாம்களைப் பின்பற்றக்கூடாது; என்று கூறுவதன் மூலம் வஞ்சகத் தனமாக இமாம்களின் வியாக்கியானங்களைப் பின்பற்றாமல் எங்களது வியாக்கியானங்களைப் பின்பற்றுங்கள்; என்கிறார்கள். இதை வெளிப்படையாக நேர்மையாக சொல்லலாமே! ஏன் இந்த வஞ்சகத்தனமான பிரச்சாரம்.

இதை tntj மாத்திரமல்ல. வழிகெடுக்கும் குழப்பவாதிகள் அனைவரும் இதே உத்தியைத்தான் கையாள்கிறார்கள்.

எல்லா இமாம்களும் உலமாக்களும் இந்த குழப்பவாதிகளும் குர்ஆன், ஹதீசைத்தான் கூறுகிறார்கள். முரண்பாடுகள் இருப்பது வியாக்கியானங்களிலேயே. எனவே, முதலாவது நாம் புரிந்துகொள்ள வேண்டியது இமாம்களைப் பின்பற்ற வேண்டாம், மத்தஹபுக்களைப் பின்பற்ற வேண்டாம், அவற்றைப் பின்பற்ற இஸ்லாம் சொல்லவில்லை. குர்ஆன், ஹதீசைத்தான் பின்பற்ற வேண்டும்; என்பது ஒரு நயவஞ்சகத் தனமான பிரச்சாரமாகும். ஏனெனில் மத்ஹபுக்கள், இமாம்களின் கருத்துக்கள் என்பது குர்ஆன், ஹதீசுக்குரிய விளக்கங்களேயன்றி வேறில்லை.

இந்த குழப்பவாதிகள், குர்ஆன் ஹதீசைக் கூறிவிட்டு அதற்குமேல் அவர்களின் ஆய்வின் அடிப்படையில் வியாக்கியானம், பொருள்கோடல் கூற முற்பட்டால் மக்கள் கேட்கவேண்டும்; உங்களுடைய வியாக்கியானங்களை நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்; உங்கள் ஆய்வுகள் உங்களுக்கு, உங்கள் ஆய்வு முடிவுகளை நாங்கள் ஏன் பின்பற்ற வேண்டும்; குர்ஆன், ஹதீசைத்தானே பின்பற்ற வேண்டும்; என்று மக்கள் கேட்க வேண்டும்.

இவர்கள் கூற்றுப்படி, ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீசிற்கு தானே சொந்தமாக பொருள்கோடல் செய்து, சொந்தமாக ஆய்வுசெய்து தொழுகைக்கு எத்தனை பர்ள், வுழுவுக்கு எத்தனை பர்ள், இது ஆகுமா? ஆகாதா? என்று முடிவு செய்யவேண்டும். குர்ஆன், ஹதீசிற்கு இமாம்கள் கொடுத்த பொருள்கோடல் அவசியமில்லை என்றால் இவர்களின் பொருள்கோடலும் அவசியமில்லை. ஒவ்வொருவரும் தனக்குத்தானே பொருள்கோடல் செய்துகொள்ள வேண்டும். இது சாத்தியமா?

குர்ஆனை எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில் இறக்கியதாக கூறுகின்ற அல்லாஹ்வே, கடலெல்லாம் மையானாலும் குர்ஆனின் கருத்துக்களை எழுதி முடிக்க முடியாதென்றும் கூறுகின்றான். அதேபோன்று, குர்ஆனைக் கொண்டு நேர்வழி பெறுகின்றவர்களும் வழிகெடுகின்றவர்களும் இருப்பதைப் பற்றியும் குர்ஆன் கூறுகின்றது.

எனவே, எல்லோரும் இலகுவாகப் புரிந்துகொள்ளக்கூடிய விடயங்களும் குர்ஆனில் இருக்கின்றன. ஆழமான விடயங்களும் இருக்கின்றன. எனவே, குர்ஆன், ஹதீசிற்கு வியாக்கியானம் தேவை. சட்டத்தொகுப்புத் தேவை. அதை நீங்களும் நானும் செய்யமுடியாது. இதனால்தான் உலமாக்களை நபிமாரிசின் வாரிசாக இஸ்லாம் வரித்துக்கொண்டிருக்கின்றது.

எனவே, குர்ஆன், ஹதீசிற்கு இமாம்கள் சொன்ன வியாக்கியானங்களை குர்ஆன், ஹதீசிலிருந்து வேறுபடுத்தி இமாம்களின் வியாக்கியானங்களுக்கும் குர்ஆன், ஹதீசிற்கும் தொடர்பு இல்லை என்பதுபோலவும் தங்களது வியாக்கியானங்களே குர்ஆனும் ஹதீசும் என்பதுபோலவும் இவர்கள் செய்கின்ற பிரச்சாரம் நயவஞ்சகத்தனமானது; என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

வியாக்கியானம் தேவையானவை. தவிர்க்க முடியாதவை. இப்பொழுது கேள்வி இமாம்களின் வியாக்கியானங்கள் சரியா? இவர்களது வியாக்கியனங்கள் சரியா? என்பது மட்டும்தான்.

முஸ்லிம்கள் 73 கூட்டமாக பிரிவார்கள் என்றும் அதில் ஒரு கூட்டமே ஜெயம்பெற்ற கூட்டம் என்றும் இஸ்லாம் கூறுகின்றது.

துறைசார்ந்தவர்கள் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கும்போது அவை தொடர்பாக நேர், எதிர் கருத்துக்களைக் கூறக்கூடியவர்கள் அத்துறைசார் நிபுணர்களேயன்றி பாமரர்கள் அல்ல. அதேபோன்றுதான் ஆழமான விடயங்களில் குர்ஆன், ஹதீசை விரிவாக ஆராய்ந்து வெவ்வேறு தரப்புகள் நிலைப்பாடுகளை முன்வைக்கின்றபோது பாமரர்களாகிய நாம் இத்தரப்புத்தான் சரி, அத்தரப்பைத்தான் நான் பின்பற்றுவேன்; என்று வெவ்வேறு தரப்புகளின் பின்னால் செல்லும்போது அதில் ஒன்றுதான் ஜெயம்பெற்ற தரப்பாக இருக்க முடியும். ஏனையவை வழிகெட்ட நகரத்திற்கு விறகாகின்ற தரப்புகளாகத்தான் இருக்க முடியும்.

ஜெயம்பெற்ற தரப்பை அடையாளம் காணுவதெப்படி?

————————————————
எனது உம்மத்து பிழையானவற்றில் ஒன்றுசேர மாட்டார்கள்; என்பது நபிமணி ( ஸல்) வாக்கு.
இந்த இமாம்கள் என்பவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியவர்கள். பலர் காலங்களில் சிறந்த காலம் என்று நாயகம் (ஸல்) அவர்களால் அடையாளம் காணப்பட்ட காலத்தில் தோன்றியவர்கள். இத்தனை நூற்றாண்டுகளாக கோடானுகோடி முஸ்லிம்களாலும் உலமாக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள். அவர்கள் கூறியவை சரியாக இருக்குமா? இன்று தோன்றியவர்கள் கூறுவது சரியாக இருக்குமா?

( இங்கு, அவ்வாறாயின் குர்ஆன், ஹதீசைப் பார்க்கத் தேவையில்லையா? என்ற ஒரு கேள்வியைக் கொண்டுவராதீர்கள்; ஏனெனில் மேலே கூறியதுபோல் இவர்கள் எல்லோரும் குர்ஆன், ஹதீசைப் பார்த்துத்தான் இந்த ஒன்றுக் கொன்று முரணான கருத்துக்களைக் கூறுகின்றார்கள். நீங்கள் குர்ஆன், ஹதீசைப் பார்க்கத் தேவையில்லையா? என்பதன் பொருள் உங்களுக்கு குர்ஆன், ஹதீஸ் புரிகின்ற வகையில் இவர்களில் யார் சரி என்று தீர்ப்புக் கொடுக்க முற்படுகிறீர்கள்; என்பதாகும். அந்தத் தகுதி உங்களுக்கும் எனக்கும் இருக்கின்றதா? சற்றுச் சறுக்கினாலுல் வழிகெட்ட 72 இல் ஒரு கூட்டத்தைச் சார்ந்துவிட மாட்டோமா? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்)

எனவே, இன்று தோன்றி இந்த இமாம்களைப் பிழைகாண்பவர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக இந்த இமாம்களின் வியாக்கியானங்களை, சட்டத்தொகுப்புகளைப் பின்பற்றியவர்கள் எல்லாம் ஜெயம்பெற்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. வழிகெட்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இன்று தோன்றியவர்களை ( பி ஜே போன்ற) பின்பற்றுபவர்கள்தான் ஜெயம்பெற்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், சொர்க்கம் செல்லக் கூடியவர்கள் என்ற முடிவுக்கு வரப்போகின்றோமா?

உதாரணமாக, இந்த பி ஜே ( மட்டுமல்ல, சகல குழப்பவாதிகளுமே) இமாம்களை மறுக்கின்றவர்கள். இமாம்களைப் பின்பற்றியது தவறு. குர்ஆன், ஹதீசைத்தான் பின்பற்ற வேண்டும்; என்று தம் வியாக்கியானத்தைச் சந்தைப் படுத்துபவர்கள். அதாவது, இமாம்களைப் பின்பற்றியவர்கள் குர்ஆன், ஹதீசைப் பின்பற்றாதவர்கள்; என்று மறைமுகமாக கூறுகின்றவர்கள்.

எனவே, பி ஜே யும் tntj யும் ஏனைய குழப்பவாதிகளும் பிறக்கும்வரை வாழ்ந்தவர்கள் எல்லாம் நரகவாதிகள், அந்த 72 கூட்டத்தில் அடங்குகின்றவர்கள் என்கிறார்களா? அவர்களைப் பின்பற்றியவர்கள் வழிகெடவில்லை; என்றால் இன்று அவர்களைப் பின்பற்றவேண்டாம்; எங்களைப் பின்பற்றுங்கள் என்பதுதான் வழிகேடாக இருக்க வேண்டும். எனவே, யார் வழிகேடு?

இறுதியாக, இமாம்களைப் பின்பற்ற வேண்டாம், எங்களைப் பின்பற்றுங்கள் என்பவர்களிடத்திலாவது ஒருமித்த கருத்து இருக்கின்றதா? இமாம்களை மறுக்கின்றவர்களிலேயே ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற பல பிரிவுகள் இருக்கின்றார்கள். இதில் யார் ஜெயம்பெற்ற கூட்டம். இதில் ஒன்றுதானே ஜெயம்பெற்ற கூட்டமாக இருக்க முடியும். யார் அந்த ஜெயம் பெற்ற ஜமாஅத்?

சரி இமாம்களைப் பின்பற்ற வேண்டாம். இவர்களுள் ஜெயம்பெறுகின்ற ஜமாஅத் யார்? என்பதையாவது அடையாளம் காட்டுவீர்களா?

இன்னும் சிலர் 72 கூட்டம் என்றது இவர்களை இல்லையாம்; என்று சிலர் கூறுகின்றார்கள். அவ்வாறாயின் அவர்கள் யார்? எங்கே இருக்கின்றார்கள்? என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க, அந்த 72 கூட்டமும் எங்கேயோ இருக்க, இங்கிருப்பது 73 வது கூட்டம் மட்டும்தான் என்றால் எல்லோரும் ஜெயம் பெற்றவர் கள்தானே! பிறகென்ன சரி, பிழை?

எனவே, இந்த வழிகெட்ட கூட்டங்கள் தாமும் குழம்பி அடுத்தவர்களையும் வழிகெடுக்கிறார்கள். இந்தக் குழப்பவாதிகள் பிறக்காமல் இருந்திருந்தால், பி ஜே பிறக்காமல் இருந்திருந்தால், இமாம்களின் குர்ஆன், ஹதீசிற்கான வியாக்கியானங்களை ஏற்றுக்கொண்ட அல்லது பின்பற்றிய குற்றத்திற்காக உலக முஸ்லிம்களெல்லாம் நரகம் சென்றிருப்பார்களா?

இந்தக் குழப்பங்களின் வரிசையில்தான் இந்த பிறைக் குழப்பமும் வருகிறது. மட்டுமல்ல, ரமளானில் விலங்கிடப்பட்ட சைத்தானின் வேலையைச் செய்வதற்காக மௌலவி என்றொரு கூட்டம் லப்டொப்பையும் தூக்கிக்கொண்டு வலம் வருவார்கள். அந்த 72 இல் ஒரு கூட்டத்தில் இணைந்து வழிகெட்டுவிடாமல் ஜெயம்பெற்ற கூட்டத்தில் வாழ நமக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

வை எல் எஸ் ஹமீட்

Post a Comment

Previous Post Next Post