இலங்கையில் வாழும் பல்லின சமூகங்களுக்கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்காக பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் செயலணிகள் உருவாக்கப்படவுள்ளதாக அகில இலங்கை உலமா சபையின் பிரதிநிதி அஷ்ஷெய்ஹ் ஏ.எச்.எம். மின்ஹாஜ் முப்தி தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் உருவாக்கப்பட உத்தேசித்தள்ள செயலணியின் சகவாழ்வுக்கான பணியாளர்கள் மே 05ஆம் திகதிக்குள் தெரிவு செய்யப்பட்டு விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு உட்பட நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல் பரிபாலன சபையுடன் இணைந்து அனைத்து மார்க்க அறிஞர்கள் மார்க்க அறிஞர்கள் அல்லாதோர் ஆகிய இரசாராரையும் கொண்டு இந்த சகவாழ்வுச் செயலணி 24 மணிநேரமும் இயங்கும் என்றும் அவர் கூறினார்.
சகவாழ்வின் முக்கியத்துவம் பற்றித் தெளிவுபடுத்திய அவர் மேலும் கூறியதாவது,
இந்த நாட்டில் பௌத்த இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய சமூகங்கள் உட்பட இன்னும் பல சமுதாய மக்கள் மற்றும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையினரான நாஸ்திகர்கள் எல்லோருடனும் ஒன்று சேர்ந்து வாழும்போது சகவாழ்வு என்பது மிக முக்கியமாகின்றது.
ஆகவே, இந்த நாட்டில் ஐக்கியம், சுபீட்சம், நல்லிணக்கம், சகவாழ்வு என்பன நீடித்து நிலைத்த சமாதானத்திற்கு மிக அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன.
சகவாழ்வுக்காக அடுத்தவருக்கு எந்தளவுக்கு விட்டுக்கொடுக்க முடியுமோ அந்தளவுக்கு விட்டுக் கொடுக்க வேண்டும்.
நம்முன்னோர்கள் சிறப்பான சகவாழ்வுடன் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பி அமைதியாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.
அக்காலப்பகுதியில் வாழ்ந்து வந்த பௌத்தர்களுக்கோ, இந்துக்களுக்கோ, கிறிஸ்தவர்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ இப்படித்தான் சகவாழ்வு வாழ வேண்டும் என்று யாருமே போதிக்கவிலை.
அவர்கள் இயல்பாகவே சகவாழ்வுடனும் சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்தார்கள்.
ஆனால் பின்னாட்களில் வந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு கிராம, பிரதேச, தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சகவாழ்வைக் குலைப்பதற்கான சதித்திட்டங்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment