துருக்கி அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயர்தர கற்கைகளுக்கான வருடாந்த புலமைப்பரிசில் திட்டத்திற்கு இலங்கையர்கள் குறைந்தளவிலேயே விண்ணப்பிப்பதாக வெளிநாடுகளில் வசிக்கும் துருக்கியர்கள் மற்றும் தொர்டபுடைய சமூகங்களுக்கான தலைமையகத்தின் (YTB) ஆய்வாளர் அஹ்மத் அலெம்தார் தெரிவித்தார்.
துருக்கி அனடோலு ஏஜன்சி ஊடக நிறுவனம் மற்றும் துருக்கியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனம் (TIKA) இணைந்து நடாத்திய இராஜதந்திர ஊடகவியல் பயிற்சி நெறியில் பங்குபற்றிய ஊடகவியலாளர்கள் துருக்கி வெளிவிவகார அமைச்சின் கீழ் இயங்கும் வெளிநாடுகளில் வசிக்கும் துருக்கியர்கள் மற்றும் தொர்டபுடைய சமூகங்களுக்கான தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.
இதன்போது குறித்த புலமைப்பரிசில் திட்டங்களுக்கு இலங்கையர்கள் விண்ணப்பிப்பது தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெளிநாட்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் சந்தர்ப்பங்கள் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஆய்வாளர் அஹ்மத் அலெம்தார், துருக்கி நாட்டின் மூலம் வருடாந்தம் 5,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் YTB நிறுவனத்தின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சுமார் 160 நாடுகளில் இருந்து 16,000 மாணவர்கள் தற்பொழுது இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் துருக்கியில் உள்ள துருக்கியின் 55 மாகாணங்களில் உள்ள 105 பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்றுவருகின்றனர்.
பொறியியல், தொழிநுட்பம், கலை மற்றும் மனிதவியல் கற்கைகள், சமூக விஞ்ஞானம், விவசாயம், மருத்துவம் மற்றும் நிர்வாக விஞ்ஞானம் போன்ற பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பு, பட்டபின் படிப்பு, கலாநிதி கற்கை, ஆய்வு கற்கைகளுக்கும் புலமைப்பரிசில் வழங்கப்படுவதுடன் குறுகிய கால புலமைப்பரிசில் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.
இணையத்தின் மூலம் மாத்திரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் மேற்படி புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பங்களை www.turkiyeburslari.gov.tr எனும் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்க முடியும்
Post a Comment