சமுர்த்தி வங்கிகளையும் மத்திய வங்கியின் கீழ் கொண்டுசென்று மக்களின் பணத்தை கொள்ளையடிக்க ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிக்கின்றது என கெபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள சமுர்த்தி வங்கிகள் அனைத்தையும் மத்திய வங்கியின் கீழ் நிருவகிக்கும் முறைமையினை கொண்டுவரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பிரதமர் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி இப்போது சமுர்த்தி வங்கிகளின் பணத்தையும் இலக்கு வைத்து அதையும் சூறையாடும் சதித் திட்டத்தை வகுத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுவரை காலமாக ஐக்கிய தேசியக் கட்சியிடம் சமுர்த்தி வங்கியுடன் சம்பந்தப்பட்ட அமைச்சு இருக்கவில்லை. இப்போது புதிய அமைச்சரவையில் சமூக வலுவூட்டல் அமைச்சினை பெற்றுக்கொண்ட ஒரு வாரத்திலேயே சமுர்த்தி வங்கிகளை இலக்கு வைத்துவிட்டனர்.
இன்று நாடு பூராகவும் 1074 சமுர்த்தி வங்கிகள் இயங்குகின்றன. இவை 331 மஹா சங்கங்களுக்கு கீழ் இயங்குகின்றன. இவை அனைத்திலுமாக சுமார் 1200 பில்லியன் ரூபா பணம் சேமிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே அரசாங்க பணம் அல்ல, முதலீட்டாளர்களின் பணமும் அல்ல. வெறுமனே தினக் கூலியாகவும், நாளாந்தம் 300 ரூபாய்க்கும் கீழ் வருமானம் பெரும் மக்கள் சேகரித்து வைத்துள்ள பணமாகும் எனவும் அவர் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
Post a Comment