Top News

நோன்பை பாதியில் முடித்து இந்து சிறுவனுக்கு ரத்த தானம் செய்த முஸ்லிம் ஊழியர்


பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் பூபேந்திரகுமார். இவரது மகன் புனித்குமார் (8). இவன் ‘தெலாஸ்மியா’ என்ற ரத்த சோகை நோயினால் கடந்த 7 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறான். எனவே 15 நாட்களுக்கு ஒரு முறை அவனுக்கு புதிதாக ரத்தம் ஏற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அவனுக்கு திடீரென ரத்தத்தில் சிவப்பணுக்களின்  எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் அவனது உடல் நிலை மோசம் அடைந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவனுக்கு உடனடியாக ‘ஏ பாசிடிவ்’ ரத்தம் தேவைப்பட்டது.

ஆனால் அந்த வகை ரத்தம் சிறுவன் புனித்குமாரின் குடும்பத்தினரிடம் இல்லை. ஆஸ்பத்திரியிலும் வேறு இடத்திலும் கிடைக்கவில்லை. எனவே மாவட்ட ரத்த தான குழுவின் நிறுவனர் அன்வர் உசேனை தொடர்பு கொண்டனர்.

உடனே அவர் ‘ஏ பாசிடிவ்’ ரத்த வகையை சேர்ந்த ஆலம் ஜாவீத் என்பவரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அவர் மாவட்ட கல்வித்துறை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார். ஆஸ்பத்திரி வந்த அவர் ரத்த தானம் வழங்க தயாரானார்.

அவர் ரம்ஜான் நோன்பு இருந்தார். எனவே அவர் ரத்தம் கொடுக்க முடியாது என்று ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர். உடனே அவர் நோன்பை பாதியில் முடித்துக் கொண்டு சிறுவன் புனித்குமாருக்கு ரத்த தானம் வழங்கி அவனது உயிரை காப்பாற்றினார்.

அதற்காக ஆலம் ஜாவீத்துக்கு சிறுவன் புனித்குமாரின் தந்தை பூபேந்திர குமார் நன்றி தெரிவித்தார். ரம்ஜான் நோன்பை பாதியில் முடித்துக் கொண்டு ரத்த தானம் செய்து எனது மகனின் உயிரை காப்பாற்றிய ஆலம் ஜாவீத்துக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அவரது செயல் போற்றுதற்குரியது என்றார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆலம் ஜாவீத் “சிறுவன் புனித்குமாரின் உடல்நிலை பற்றி அறிந்ததும் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்றேன். மனிதாபிமானத்துடன் ரத்த தானம் வழங்கினேன்” என்றார். #FastingMuslimMan #BloodDonate

Post a Comment

Previous Post Next Post