Top News

விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான நியமனம் மிக விரைவில் - இம்ரான் எம்.பி



நேர்முகப்பரீட்சையை முடித்த விளையாட்டு பயிற்சியாளர்களுக்கான நியமனம் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். இந்நியமனம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக இன்று கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தை சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

விளையாட்டில் திறமைகாட்டும் பல மாணவர்களுக்கு அரச தொழில் பெறுவதில் காணப்பட்ட சிக்கல்களை உணர்ந்த எமது கல்வி அமைச்சர் அத்தகைய மாணவர்களுக்கு அவர்கள் துறைசார்ந்த அரச தொழில் ஒன்றை ஏற்படுத்தி கொடுத்து பாடசாலை மட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டதே இந்த விளையாட்டு பயிற்ச்சியாளர் நியமனமாகும்.

நேர்முகத்தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்தும் நாட்டில் ஏற்பட்ட அரசியல் அசாதாரண சூழ்நிலைகளால் இந்த நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதுதொடர்பில் இன்று அமைச்சருடன் கலந்துரையாடி நியமனத்தை விரைவாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தேன்.

அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக  219 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளன. இதில் தமிழ் மொழிமூலம் 111 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளன. இதில் 24 பேருக்கு மத்திய அரசுக்குட்பட்ட பாடசாலையிலும் 87 பேருக்கு மாகாண படாசாலையிலும் நியமனம் வழங்கப்படவுள்ளன. அதேபோல் சிங்கள மொழிமூலம் 108 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளன. இதில் 06 பேருக்கு மத்திய அரசுக்குட்பட்ட பாடசாலையிலும் 102 பேருக்கு மாகாண படாசாலையிலும் நியமனம் வழங்கப்படவுள்ளன.

இந்தநியமனங்கள் வழங்கப்பட உள்ளோரின் இறுதி பெயர் பட்டியலை தயாரித்து முடித்து விட்டதாகவும் மிக விரைவில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.

ஊடகப்பிரிவு

Post a Comment

Previous Post Next Post