அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இறுதி தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொடக்கவெல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தன்னை கைது செய்வதன் மூலம் தான் செல்லும் பயணத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச நிறுத்தப்பட வேண்டும் என விமல் வீரவங்ச, உதய கம்மன்பில உட்பட சிங்கள தேசியவாத தரப்பினர் கூறி வருகின்றனர்.
இடதுசாரிகளான வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன , திஸ்ஸ வித்தாரண, டியூ. குணசேகர போன்றோர் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
அதேவேளை கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவதை மகிந்த ராஜபக்ச, அவரது குடும்பத்தினர் மற்றும் பசில் ராஜபக்ச தரப்பினர் விரும்பவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாகவே தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மகிந்த ராஜபக்சவே தீர்மானிக்க வேண்டும் என கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment