( ஐ. ஏ. காதிர் கான் )
விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இயங்கும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.பீ.பி. ஹேரத், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, அமைச்சின் செயலாளருக்கு இது தொடர்பிலான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
விளையாட்டுத்துறை தொடர்பிலான சட்ட திட்டங்களை மதிக்காது, அவைகளை உதாசீனம் செய்த குற்றத்திற்காகவே, இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அமைச்சு அறிவித்துள்ளது.
தெற்காசிய கனிஷ்ட மெய் வல்லுநர் போட்டி நிகழ்வுகள், கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் மே 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இலங்கையைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு ஏற்பட்ட அசெளகரியங்களைக் கருத்திற்கொண்டே, அமைச்சர் பைஸர் முஸ்தபா இந்தப் பணி நீக்கத்தை, அமைச்சின் செயலாளரின் ஊடாக மேற்கொண்டுள்ளார்.
இலங்கை சார்பில் கலந்துகொள்ளும் 84 வீர வீராங்கனைகளுக்கும், 15 ஆலோசகர்களுக்கும் தேவையான தங்குமிட வசதிகளை உரிய முறையில் செய்து கொடுக்கத் தவறியமை, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களத்தின் ரொரிங்டனில் அமைந்துள்ள தங்குமிட இல்லத்தில் 4 ஆம் திகதி காலை முதல் மாலை வேளை வரை தடைப்பட்டிருந்த மின்சாரம் தொடர்பில் எதுவித தகுந்த நடவடிக்கைகளையும் எடுக்கத்தவறியமை, நீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தபோதும் இது தொடர்பிலும் தேவையான ஒழுங்குகளைச் செய்து கொடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ளத் தவறியமை போன்ற காரணிகளை முன்வைத்தே, விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பணிப்பாளர் உள்ளிட்ட திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் எவரும் இறுதிக்கட்டம் வரை அவ்விடத்திற்கு சமூகமளிக்காமல் இருந்துள்ளனர். இவ்விடயமும் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, குறித்த பணிப்பாளர் அமைச்சு செயலாளரின் ஊடாகப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த விளையாட்டு வீர வீராங்கனைகள் மற்றும் விளையாட்டு ஆலோசகர்களுக்கு, கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட ஏனைய அனைத்து வசதிகளுடனான ஏற்பாடுகளையும் உடனடியாகச் செய்துகொடுக்குமாறு, அமைச்சர் பைஸர் முஸ்தபா அமைச்சு அதிகாரிகளையும் ஊழியர்களையும் பணித்திருந்த நிலையில், அமைச்சரும் அவ்விடத்திற்கு நேரடியாகச் சென்று விளையாட்டு வீரர்களின் ஏனைய வசதிகள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment