அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்த அநுருத்த பொல்கம்பலவின் நியமனத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ரத்துச் செய்துள்ளார்.
அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக இருந்த பீ. திசாநாயக்க இந்திய வர்த்தகர் ஒருவருக்கு கந்தளாய் சீனிக்கூட்டுத்தாபனத்தை குத்தகைக்கு வழங்கும் விடயம் தொடர்பாக இலஞ்சம் பெற முயன்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்டு தற்போதைக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுருத்த பொல்கம்பலவை நியமித்திருந்தார்.
ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் ஜப்பானுக்கு நபர் ஒருவரை சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற குற்றச்சாட்டில் அக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளித்த அநுருத்த பொல்கம்பல சுதந்திரக்கட்சியிலும் இணைந்து கொண்டிருந்தார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அவருக்கு எதிரான முன்னைய ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தற்போது மீண்டும் கிளறப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதைக் காரணமாகக் கொண்டு அநுருத்தவுக்கு வழங்கப்பட்ட நியமனத்தை ஜனாதிபதி ரத்துச் செய்துள்ளார்.
அநுருத்த பொல்கம்பலவின் நியமனத்துக்கு எதிராக அமைச்சர் ராஜின சேனாரத்னவும் பகிரங்கமாக கருத்து வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment