வை எல் எஸ் ஹமீட்
ஜே வி பி ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்காக அரசியலமைப்பிற்கான இருபதாவது திருத்தத்தை முன்வைத்திருக்கின்றது. இத்திருத்தத்தை எதிர்க்கின்ற தரப்புகள் இது நிறைவேற்றப்பட்டால் நாடு துண்டாடப்படும்; என்ற ஒரு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. இவர்கள் கூறுவதில் உண்மை இருக்கின்றதா? என்பதை அரசியலமைப்புச் சட்டத்தின் பின்னணியில் இக்கட்டுரை ஆராய்கின்றது.
மக்களிடம் இறைமை
—————————-
அரசியலமைப்பு சரத்து மூன்றின் பிரகாரம் “இறைமை” மக்களிடம் இருக்கின்றது. அது பிரிக்கப்பட முடியாதது. இவ்விறைமை அரச அதிகாரம், அடிப்படை உரிமைகள் மற்றும் வாக்குரிமையை உள்ளடக்குகின்றது.
“ இறைமை” என்பது கட்டுப்படுத்த முடியாத, முழுமையான அதிகாரமாகும். மேற்சொன்ன சரத்தின்படி அந்த அதிகாரம் மக்களுடையது. அது பிரிக்கப்பட முடியாதது; என்பதனால் அந்த அதிகாரத்தைப் பிரித்து யாருக்கும் வழங்க முடியாது. மட்டுமல்லாமல் அது அரச அதிகாரத்தையும் உள்ளடக்குவதால் அதுவும் அவர்களுக்குரியது.
இதன்பொருள் அரசுக்கென்று எந்த அதிகாரமும் கிடையாது. மக்களிடம் இருந்து எடுத்து அதனை அரசுக்கு வழங்கவும் முடியாது; ஏனெனில் அது பிரிக்கப்பட முடியாதது.
அரசு மக்களின் நம்பிக்கையாளர் சபையாகத்தான் அந்த அதிகாரத்தை செயற்படுத்துகிறது. (The Government is exercising the power of the People in trust for the People). எனவே, அரச அதிகாரத்தை எவ்வாறு பாவிக்கவேண்டுமென்று மக்கள் விதந்துரைத்திருக்கின்றார்களோ அவ்வாறு மாத்திரம்தான் அந்த அதிகாரத்தை அரசு பாவிக்கலாம்.
மக்கள் இந்த அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டத்தினூடாக அரசுக்கு வழங்கி, அதனை எவ்வாறு பாவிக்க வேண்டுமென்று விதந்துரைத்திருப்பதோடு சில கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கின்றார்கள்.
அரச அதிகாரம்
——————-
அரச அதிகாரத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். ஒன்று) சட்டவாக்க அதிகாரம் இரண்டு) நிறைவேற்று அதிகாரம் மூன்று) நீதித்துறை அதிகாரம்.
சட்டவாக்க அதிகாரம்
—————————-
அரசியலமைப்பின் சரத்து 4(a) இன் பிரகாரம் சட்டவாக்க அதிகாரத்தை பாரளுமன்றமும் மக்களும் ( சர்வஜனவாக்கெடுப்பு) செயற்படுத்துவார்கள்.
சரத்து 76(1) பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தை யாருக்கும் கையளிக்கக் கூடாது; என்று கட்டுப்பாடு விதித்திருக்கின்றது. அதேநேரம் பாராளுமன்றம் உப சட்டங்களை ஆக்கும் அதிகாரங்களை இன்னுமொரு கட்டமைப்பிற்கு வழங்குவது தடையில்லை; என்று மேற்படி சரத்தின்
உப பிரிவு மூன்றில் குறிப்பிட்டுள்ளது.
13வது திருத்தத்தின் சட்டவாக்க அதிகாரம் சவாலுக்குட்படுத்தப்பட்டமை
————————————————————
13 வது திருத்தம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரத்தை இத்திருத்தம் மாகாணசபைகளுக்கு வழங்குகின்றது; என்று உயர்நீதி மன்றத்தில் வாதிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த உயர்நீதிமன்றம் மாகாண சபைகளின் சட்டங்களை பாராளுமன்றம் மேவ முடியுமென்றும் அதன் சட்டவாக்க அதிகாரத்தைத் திருத்தவோ இல்லாமலாக்கவோ முடியும்; என்றும் பாராளுமன்றத்திற்கு கீழான சட்டவாக்க அதிகாரமே மாகாண சபைகளுக்கு வழங்கப்படுகின்றது; என்றும் தெரிவித்திருந்தது. 13 வது திருத்தத்தின் சரத்து 154G(2) மற்றும் 154G(3) ஆகியவற்றை இது தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தது.
எனவே, ஒற்றையாட்சி நாடான இலங்கையில் மாகாண சபைகள் பாராளுமன்றத்திற்கு கீழானதே தவிர சமஷ்டி நாடுகளில் இருப்பதுபோல் பாராளுமன்றத்திற்கு சமாந்தரமானதல்ல.
நிறைவேற்று அதிகாரம்
——————————
அரசியலமைப்பின் சரத்து 4(b) நிறைவேற்று அதிகாரத்தை மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கின்றது. 13 வது திருத்தத்தில் நிறைவேற்றதிகாரம் மாகாண ஆளுநருக்கு வழங்கப்படுகிறது. எனவே, மக்கள் நிறைவேற்றதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கியிருக்கும்போது, அந்த மக்களின் அனுமதியில்லாமல் 13வது திருத்தம் அந்த அதிகாரத்தின் ஒரு பகுதியை ஆளுநருக்கு வழங்குகின்றது; என்ற வாதத்திற்கு பதிலாக, 13 வது திருத்தத்தின் சரத்து 154B(2) ஐச் சுட்டிக்காட்டி, ஜனாதிபதியின் பிரதிநிதியாகவே ஆளுநர் செயற்படுவதாக உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.
மேற்குறித்த 154B(2) , ஆளுநர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவேண்டும்; என்றும் ( ஜனாதிபதிக்கு நிறைவேற்றதிகாரம் வழங்குகின்ற) சரத்து 4(b) இற்கு அமைவாக ஜனாதிபதி விரும்பும்வரை பதவி வகிக்கலாம்; என்றும் கூறுகிறது. ( பதவிக்காலம் ஐந்து வருடங்கள், சரத்து 154B(5))
இதனைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், “ ஆளுநர் ஜனாதிபதியிடம் இருந்தே அதிகாரத்தைப் பெறுகின்றார் அவரது பிரதிநிதியாக “ என்றும் “ சரத்து 4(b) யின் பிரகாரம் ஜனாதிபதி ஆளுநரின் நிறைவேற்றதிகார செயற்படுத்துகையை கண்காணிக்கவும் தேவையான கட்டளைகளை ஆளுநரின் செயற்பாடு தொடர்பாக பிறப்பிக்கவும் ஜனாதிபதிக்கு முடியும்; என்றும் தெரிவித்தது. ( பிந்திய வழக்குத் தீர்ப்புகளின்படி மேற்படி நிலைப்பாட்டில் சில விதிவிலக்குகள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. விரிவு கருதி அவற்றிற்குள் செல்லவில்லை ).
ஏன் நாடு துண்டாடப்படும் என்கிறது எதிரணி?
———————————————————-
இரண்டு பிரதான காரணிகள் நாடு துண்டாடப்படும்; என்ற கருத்தை வழங்குகின்றது. அதில் மேற்படி சரத்து ஒன்றாகும். நாம் மேற்கூறிய தகவல்களின்படி, நிறைவேற்றதிகாரம் ஜனாதிபதிக்குரியது. ஜனாதிபதி மக்களிடம் இருந்து நேரடியாக நிறைவேற்றதிகாரத்தை பெற்றதுபோலல்லாமல், ஆளுநர் ஜனாதிபதியிடம் இருந்து மாகாணத்திற்குரிய நிறைவேற்றதிகாரத்தைப் பெற்று அவரது பிரதிநிதியாகவே அவற்றைச் செயற்படுத்துகின்றார். ஜனதிபதிப் பதவி ஒழிக்கப்படின் ஆளநருக்கு சுயமாக நிறைவேற்றதிகாரம் வந்துவிடும். அது ஆபத்தானது; என்பதாகும்.
மேற்குறிப்பிட்ட சரத்து 154B(2) வில் சரத்து 4(b) இன் பிரகாரம் எனக்குறிப்பிடப்பட்டிருப்பது ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும்போது ஒரு சட்டப்பிரச்சினையை உருவாக்கவே செய்யும். ஆனால் அச்சரத்து பொருத்தமான விதத்தில் சமகாலத்தில் திருத்தப்பட்டால் அச்சட்டப்பிரச்சினை தீர்ந்துவிடும். மட்டுமல்லாமல் இங்கு ஒழிக்கப்பட முற்படுவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையையே தவிர ஜனாதிபதிப் பதவியை அல்ல.
1972ம் ஆண்டு யாப்பும் ஜனாதிபதி பதவியும்
———————————————————
1972ம் ஆண்டு யாப்பின்கீழ் பிரதமர் ஆட்சிதான் இருந்ததென்பது எல்லோருக்கும் தெரியும். அந்தயாப்பின் பிரகாரமும் “இறைமை” பிரிக்கப்பட முடியாததாக மக்களிடம்தான் இருந்தது (சரத்து 3), ஆனாலும் அந்த மொத்த இறையமையையும் செயற்படுத்தும் அதிகாரம் தேசிய அரசுப் பேரவை ( பாராளுமன்றம்) இடம் இருந்தது. (சரத்து 4). தற்போது சட்டவாக்க அதிகாரத்தின் ஒரு பகுதி மட்டும்தான் இருக்கின்றது. அப்பொழுது சர்வஜனவாக்கெடுப்பு இருக்கவில்லை.
அதேநேரம் நிறைவேற்று அதிகாரத்தையும் அப்பொழுது பாராளுமன்றமே ஜனாதிபதியினூடாகவும் அமைச்சரவையினூடாகவும் செயற்படுத்தியது. எனவே அப்பொழுதும் ஜனாதிபதிப் பதவி இருந்தது. (சரத்து 5(b)); ஆனால் அரசியலமைப்பில் விதிவிலக்களிக்கப்பட்ட விடயங்கள் தவிர அனைத்து விடயங்களிலும் பிரதமரின் ஆலோசனையின் பிரகாரமே இயங்க வேண்டும் ( சரத்து 27). எனவே நடைமுறையில் இங்கு பிரதமரிடம் நிறைவேற்று அதிகாரம் வந்து விடுகிறது.
இந்திய யாப்பு
——————-
இந்தியாவிலும் பிரதமர் ஆட்சியே நடைபெறுகிறது. அங்கும் ஜனாதிபதி இருக்கின்றார். அவரும் அமைச்சரவையின் ஆலோசனைக்கமைவாகவே செயற்பட வேண்டும். ( இந்தி அரசியல் யாப்பு, சரத்து 74).
இந்திய மாநில ஆட்சி
—————————-
அங்கும் மாநிலங்களுக்கு ஆளுநர் இருக்கின்றார். (சரத்து 153). மாநிலங்களின் நிறைவேற்றதிகாரம் அவரிடமே இருக்கின்றது, (சரத்து 154).( இன்னும் சொல்லப்போனால் நிறைவேற்றதிகாரம் தொடர்பாக இந்த சரத்தே இலங்கையில் 13 வது திருத்தத்தில் உள்வாங்கப்பட்டது).
அதனை அவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரமே செயற்படுத்தவேண்டும் சில விதிவிலக்குகள் தவிர, ( சரத்து 163).
இலங்கையிலும் மாகாண அமைச்சரவையின் ஆலோசனையின் பிரகாரமே ஆளுநர் நிறைவேற்றதிகாரத்தைச் செயற்படுத்த வேண்டும் சில விதிவிலக்குகள் தவிர ( 13வது திருத்தம் சரத்துக்கள் 154C, 154F)
இந்தியாவினதும் இலங்கையினதும் இச்சரத்துக்கள் ஒரே மாதிரியானவை. ஆனால் மேற்குறிப்பிட்ட நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகவும் “மாகாணசபைகள் சட்டம் இல. 42, 1987” காரணமாகவும் நிறைவேற்று அதிகாரம் இந்தியாவில் இருப்பதற்கு மாற்றமாக ஆளுநரின் கைகளுக்கு சென்றுவிட்டது ( அதாவத அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் செயற்படுதன்மை) எனவே, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுகின்றபோது பிரச்சினை எழும்; என அவர்கள் அபிப்பிராயப் படுகிறார்கள்.
இந்த அபிப்பிராயத்தில் சில நியாயமிருந்தாலும் 13 வது திருத்தம் அதற்கேற்றாற்போல் திருத்தப்பட முடியாததல்ல.
அவர்கள் அஞ்சுகின்ற மிகப்பெரிய ஆபத்து
——————————————————
13 வது திருத்தம் சரத்து 154L இன் பிரகாரம் ஜனாதிபதி ஆளுநரிடமிருந்து கிடைக்கின்ற அறிக்கையின்படி அல்லது அவரது சொந்தத் தகவல்கள் மூலமோ ஒரு மாகாணத்தின் நிர்வாகத்தை அரசியலமைப்பிற்கு இசைவாக முன்கொண்டுசெல்ல முடியாத ஒரு சூழ்நிலை எழுந்ததாக கருதினால் ஒரு பிடகடனத்தின் மூலம் அம்மாகாண அதிகாரத்தை தம்வசப்படுத்த முடியும்.
இந்த அதிகாரத்தைப் பாவித்துத்தான் அன்றைய ஜனாதிபதி திரு பிரேமதாச அவர்கள் வரதராஜப் பெருமாள் தமிழீழம் பிரகடனப்படுத்தியபோது மாகாணசபையின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். இதுவும் அர்த்தமற்ற ஓர் அச்சமாகும். ஏனெனில் இதே அதிகாரத்தை பிரதமர் ஆட்சியிலும் ஜனாதிபதிக்கு வழங்கலாம். அதை அவர் ஆளுநரின் அறிக்கையின் பேரிலோ அல்லது பிரதமரின் சிபாரிசின் பேரிலோ செயற்படுத்தலாம்.
இந்திய யாப்பின் நிலைப்பாடு:
—————————————
மாநில அரசைக் கலைக்கின்ற விடயம் தொடர்பாக, இந்திய யாப்பின் சரத்து 356 இன் பிரதான அம்சங்கள்தான் 13 வது திருத்தத்தின் 154L இலும் உள்வாங்கப் பட்டிருக்கின்றன. இந்தியாவில் பிரதமர் ஆட்சியின்கீழ் செயற்படுகின்ற சரத்துத்தான் இலங்கையில் ஜனாதிபதி ஆட்சியின்கீழ் செயற்படுகின்றது. எனவே, இலங்கையில் மீண்டும் பிரதமர் ஆட்சி வருகின்றபோது இதே சரத்துக்கள் செயற்படுவதில் பிரச்சினை ஏதும் ஏற்படப்போவதில்லை.
எனவே, ஜனாதிபதி ஆட்சி முறைமை ஒழிக்கப்படும்போது நாடு துண்டாடப்படும்; என்ற கூற்று அர்த்தமற்றதாகும்.
குறிப்பு: நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி ஒழிப்பின்காரணமாக சிறுபான்மைகளுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதக விளைவுகளை இக்கட்டுரை ஆராயவில்லை; என்பதைக் கவனத்திற்கொள்க.
Post a Comment