காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும் உறுதியளித்தார். அவரது அறிவிப்புக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையே, கிழக்கு ஜெருசலேம் நகரில் கட்டப்பட்டுள்ள அமெரிக்க தூதரகம் நேற்று திறக்கப்பட்டது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்ப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அமெரிக்க தூதரகம் திறப்பதை கண்டித்து காஸா மற்றும் மேற்குக்கரை எல்லையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது வன்முறையாக மாறியதால், இஸ்ரேல் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் 37 பேர் பலியாகினர்.
இந்நிலையில், காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஸா வன்முறை தாக்குதலுக்கு பிரான்ஸ் தனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறது. இதுதொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் அடுத்த சில தினங்களில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment