கண்டி திகன பகுதியில் முஸ்லிம்கள் மீது முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி இறுதியில் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இந்த வன்முறைகள் ஏன் இடம்பெற்றன?, யார் இதனை தூண்டினார்கள்?, அரச அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் இதுவரையில் சுமார் 100 பேர் தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள்ளனர்.
கண்டி வன்முறைச் சம்பவங்கள் குறித்த சி.சி.டி.வி. வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது.
எங்களிற்கு 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் 100 பேரிடம் நேரில் பார்த்த சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம்.
கண்டி வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.
அனைத்து தகவல்களையும், தரவுகளையும் ஆராய்ந்த பின்னர் நாங்கள் அறிக்கையொன்றை தயாரிப்போம். எங்கள் அறிக்கையில் பரிந்துரைகளும் காணப்படும். இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்போம் எனவும் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியுள்ளார்.
Post a Comment