நாடகங்களின் ஊடாக இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் சமஅந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிதாக ஆளுநர்கள் பலரை நியமித்தார். எனினும் முஸ்லிம் ஒருவரை கூட ஆளுநராக ஜனாதிபதி நியமிக்கவில்லை. ஏன் ஜனாதிபதியினால் ஒரு முஸ்லிமையாவது ஆளுநராக நியமிக்கமுடியதுபோனது?
இவ்வாறான செயற்பாடுகளின் ஊடாக எப்படி ஜனாதிபதியினால் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சபையில் கேள்வி எழுப்பினார்.
அத்துடன் வெறுப்புனர்வுக்கு பேச்சு சட்டம் தற்போது அமைச்சரவை கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே குறித்த சட்டத்தை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ய இடமளிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி கொள்கை விளக்கவுரை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டில் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கினார்கள். அத்துடன் இனவாதத்தை ஒன்றிணைந்து முறியடித்தனர். தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டில் சுதந்திரமான சூழல் ஒன்று உருவானது. ஆனால் ஜனாதிபதி குறிப்பிட்டதுபோல் அரசாங்கத்தின்மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலான தேசிய ஐக்கியம் ஏற்படுத்தப்படவில்லை.
இந்த அரசாங்கமானது மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது. எனினும் கடந்த காலங்களில் கூட்டு எதிரணியினர் நாட்டில் அமைதியை குழப்ப அரசியல் இலாபத்திற்காக இனக்குரோதத்தை ஏற்படுத்தினர். இதனால் பல அழிவுகளையும் மோசமான நிலைமைகளையும் சந்திக்க நேரிட்டது.
இனவாதத்தையும் குடும்ப ஆட்சியையும் நிராகரித்தே மக்கள் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கினர். எனினும் கடந்த மூன்று வருட காலங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் சந்தோஷமடையக்கூடியதாக இல்லை. இனவாத செயற்பாடுகளை இந்த அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியவில்லை. இனவாதத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே கடந்த மார்ச்சில் கண்டி, திகன பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாது போனது. இதனால் நாடு பற்றி எரிந்தது. அசாதாரணமானதொரு சூழ்நிலை ஏற்பட்டது.
அரசாங்கத்தில் இருக்கும் உறுப்பினர் என்றவகையில் இவ்விடயம் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தி, இதனை கட்டுப்படுத்துமாறு கோரினோம். 'இனவாத, மதவாத பிசாசுகள் மீண்டும் தலைதூக்கியிருக்கின்றன. அவர்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம். இதனால் நாடு படுபாதாளத்திற்கு செல்லும்' என்ற விடயத்தை கூறியிருந்தோம். அதனை கணக்கில் கூட எடுக்கவில்லை. கண்டுகொள்ளாமையினால்தான் குறித்த சிறுகுழுவினரால் சட்டத்தை மீறி குழப்பநிலையை தோற்றுவிக்க முடிந்தது.
ரஞ்சித் மத்தும பண்டார சட்டம் ஒழுங்கு அமைச்சை பொறுப்பேற்ற பின்னர் ஓரளவு நிலைமைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமைக்கு அவருக்கு நன்றியை தெரிவிக்க வேண்டும்.
ஆகவே இதனை தடுத்து நிறுத்த சட்டம் கொண்டுவருமாறு நாம் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்தோம். வெறுப்பு பேச்சை கட்டுப்படுத்த சட்டத்தை கொண்டுவருமாறு வலியுறுத்தினோம். ஏற்கனவே அமைச்சரவை அனுமதிக்காக முன்வைக்கப்பட்ட குறித்த சட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆகவே குறித்த சட்டத்தை தொடர்ந்து இழுத்தடிப்பு செய்ய இடமளிக்க முடியாது.
சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளை நாம் முன்மாதிரியாக எடுக்க வேண்டும். பல் கலாசாரத்தை பின்பற்றும், பல மொழிகளை பேசும், பல சமயங்களை பின்பற்றும் மக்களை ஒன்றிணைத்து முன்னேறிச்செல்ல முடியவில்லையென்றால் அந்நாடுகளை எம்மால் நெருங்கவும் முடியாதுபோகும்.
இந்நாடு முப்பது வருட யுத்தத்திற்கு முகம்கொடுத்துள்ளது. யுத்தத்தால் நாட்டிலுள்ள அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். வடக்கு, கிழக்கு இளைஞர்களாக இருக்கட்டும். தெற்கிலுள்ள இளைய தலைமுறையினராக இருக்கட்டும் எல்லா இடங்களிலும் இருப்போர் இலங்கையர்களே. எனவே, இலங்கையர்கள் அனைவரையும் மிகப்பரிதாபமான நிலைமைக்கு யுத்தம் கொண்டு சென்றுள்ளது. 2009 இல் யுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து புதிய நாட்டை கட்டியெழுப்ப சந்தர்ப்பமொன்று கிடைத்தது. இது தொடர்பில் பல கற்பனைகளை மட்டுமே எங்களால் பண்ண முடிந்தது. அவை இன்னும் சிந்தனை வடிவிலேயே இருக்கின்றது.
படங்களை தயாரித்து நாடகங்களை நடித்து இந்த நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது. சமாதானத்தை ஏற்படுத்தும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். எங்களுக்கு தெரியும் ஜனாதிபதியினால் அண்மையில் மாகாண ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். முஸ்லிம்கள் எவரையும் அதில் உள்ளடக்கவில்லை. இதற்கு முன்னர் இந்நாட்டில் பாக்கிர் மாக்காரும் அலவி மௌலானாவும் குறித்த பதவியில் இருந்ததில்லையா? ஏன் ஜனாதிபதியினால் ஒரு முஸ்லிம் ஆளுநரை நியமிக்க முடியாதுபோனது?
எனவே, இங்கு வலியுறுத்தி கூறவிரும்புவதென்னவென்றால், வெறும் வார்த்தைகளினாலும் சிந்தனைகளினாலும் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது. மக்களின் கீழ்மட்ட பிரச்சினைகளை இனங்கண்டு அதற்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்துடன் அனைவருக்கும் சம அந்தஸ்தை வழங்க வேண்டும். இதன்மூலமே நாட்டில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் நிலைநாட்ட முடியும்.
Vidivelli
Post a Comment