Top News

வன்முறை தவிர்ப்போம் - போதையை ஒழிப்போம் ஒன்றுகூடலில் யாழ் மாவட்ட முஸ்லிம்களும் பங்கேற்பு






பாறுக் ஷிஹான்


வடகிழக்கு சமூக நல்லிணக்கத்திற்கான அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற வன்முறை தவிர்ப்போம் - போதை ஒழிப்போம் என்ற மகுடவாசகத்துடன் கூடிய மக்கள் விளிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் யாழ் மாவட்ட முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர்.

நேற்று (6) யாழ் பஸ்தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வைரவர் ஆலய முன்றலில் நடைபெற்ற மேற்படி விழிப்புணர்வு நிகழ்வில் கட்சி பேதங்களுக்கு அப்பால் எல்லா கட்சியினருக்கும் குறித்த ஏற்பாட்டாளர்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இதன் போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  எம். ஏ. சுமந்திரன் வடக்குமாகாணசபை உறுப்பினர்களான கேசவன் ,சயந்தன், சுகிர்தன்  ,அய்யூப் அஸ்மின்  யாழ் மாநகரசபை முதல்வர்  இம்மானுவேல் ஆர்னோல்ட், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதி தவிசாளர்கள், கௌரவ உறுப்பினர்கள், மகளிர் அமைப்புக்களின் உறுப்பினர்கள், சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர் - யுவதிகள் - பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

மேற்படி ஒன்றுகூடலில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் போது அங்கு உரையாறிறிய வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் போதைக்கும் வன்முறைக்கும் இஸ்லாம் இடமளிப்பதில்லை என தனது உரையில் தெளிவு படுத்தினார்.

மேலும் தனது உரையில் யாழ்ப்பாணத்தில் இப்போது உருவாகியிருக்கின்ற போதைப் பொருள் பாவனை மற்றும் வன்முறைக் கலாச்சாரம் இந்த மண்ணுக்கே உரித்தான விடயங்கள் அல்ல அது செயற்கையாக இங்கே திணிக்கப்பட்டிருக்கின்றது. 

குறிப்பாக யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில் எமது மக்களின் வாழ்வியல் ஒழுங்கை சிதைக்கின்ற வகையில் இவை அந்நியரால் திட்டமிட்டு இங்கே உட்புகுத்தப்பட்டிருக்கின்றது சிங்கள அரசியல்வாதிகள் இராணுவம் பொலிஸார் எனப் பலரும் இதனோடு தொடர்புபடுகின்றார்கள். ஒரு சில முஸ்லிம்களும் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவது மனவேதனையளிக்கின்றது.

எந்த மதமும் போதைப் பொருள் பாவனையினை வன்முறைக் கலாசாரத்தை அனுமதிப்பதில்லை அதிலும் விஷேடமாக இஸ்லாத்தில் போதைக்கும் வன்முறைக்கும் ஒரு அணுவளவேனும் இடமில்லை யாழ்ப்பாண முஸ்லிம் மக்களாகிய நாங்கள் போதைக்கு எதிரானவர்கள் வடக்குக் கிழக்குத் தழுவிய ரீதியில் போதைக்கு எதிராக இந்த அமைப்பு முன்னெடுக்கவிருக்கின்ற செயற்பாடுகளுக்கு நாம் முழுமையாகத் துணை நிற்போம். உங்கள் பயணத்தில் முஸ்லிம்களும் இணைந்திருப்பார்கள் என கூறினார்.

Post a Comment

Previous Post Next Post