கார் விபத்தில் இளைஞர் பலியான சம்பவத்தில் தொடர்புடைய அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு அதிரடி தடை விதித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் தற்போது சுமூகமான உறவு இல்லை. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக கூறி அந்நாட்டுக்கு வழங்க இருந்த நிதியை டிரம்ப் நிறுத்தி வைத்தார். கடந்த சில மாதம் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜோசப் இம்மானுவேல் ஹால் சென்ற கார் மோதியதில் இளைஞர் பலியானார்.
ஜோசப் குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக புகார் எழுந்த நிலையில், அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதன் பின்னர், பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் கராச்சியில் உள்ள பழங்குடிகள் பகுதிக்கு செல்லக்கூடாது என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு பல்வேறு பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்தது. தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 40 கி.மீ தொலைவுக்கு மேல் பயணம் செய்ய வேண்டுமானால் முன் அனுமதி பெற வேண்டும் என புதிய விதிமுறைகள் விதிக்கப்பட்டன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் கொதிப்படைந்த பாகிஸ்தான் அரசு, இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க உயர் தூதரகம் மற்றும் மற்ற பகுதிகளில் உள்ள நான்கு துணை தூதரகம் ஆகியவற்றில் பணியாற்றும் அமெரிக்கர்கள் முன் அனுமதி இல்லாமல் வெளியே சுற்றக்கூடாது என கட்டுப்பாடு விதித்தது.
இந்நிலையில், ஜோசப் ஹால் நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. தூதரக அதிகாரி என்பதால் அவரை கைது செய்ய முடியாது. எனினும், சர்வதேச விதிமுறைகளின் படி அவர் மீதான விசாரணை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நடத்தப்படும் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
Post a Comment