அஸ்ரப் அலி
நீதிமன்றத்தினுள் வைத்து நபரொருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.
ஹோமாகம மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க சற்று முன்னர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் கடத்தப்பட்டு காணாமல்போகச் செய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட தொடர்பான வழக்கொன்று ஹோமாகம நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த வழக்கின் விசாரணைக்காக பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட நீதிமன்றத்துக்கு சமூகம் அளித்திருந்த சந்தர்ப்மொன்றில் அவர் புலிகளின் ஆதரவாளர் என்று குற்றம் சாட்டிய ஞானசார தேரர் , நீதிமன்ற வளாகத்தில் வைத்தே சந்தியாவை கடுமையாக அச்சுறுத்தியிருந்தார்.
இந்தச் சம்பவம் கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி ஹோமாகம நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து நீதிமன்ற பொலிசார் தொடுத்த வழக்கில் வழக்கில் ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த அச்சுறுத்தல் விவகாரம் தொடர்பில் ஞானசார தேரருக்கு இலங்கை தண்டனைக் கோவை சட்டத்தின் 386 மற்றும் 486 பிரிவுகளின் கீழ் எதிராக பொலிசார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் நீண்ட விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதன்போது தண்டனைக் கோவையின் பாரதூரமான அச்சுறுத்தல் மற்றும் அநாவசிய துன்புறுத்தல் சட்டப் பிரிவுகளின் கீழ் ஞானசார தேரரைக் குற்றவாளியாக ஹோமாகம நீதவான் நீதிமன்ற நீதிபதி உதேஷ் ரணதுங்க தீர்ப்பளித்துள்ளார்.
அவருக்கான தண்டனை ஜூன் மாதம் 14ம் திகதி விதிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையொன்றின் போது நீதிமன்றத்தில் அநாகரீமாக நடந்து கொண்டதன் காரணமாக ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றும் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment