மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியால் தேர்தலுக்குத் தேர்தல் புதிய அமைப்பாளர்கள் நியமிப்பது வழக்கமான ஒரு நிகழ்வாகும்.
எப்போது அக்கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ அப்போதிருந்து புதிய,புதிய அமைப்பாளர்கள் பலர் கல்குடா தொகுதிக்கு தேர்தல் செய்ய வந்து, தான் தோல்வி அடைந்த கையோடு அக்கட்சியையும் நம்பி இருந்த போராளிகளையும் நடுத்தெருவில் விட்டுச் சென்ற வரலாறுகள் ஏராளம்.
மறைந்த முகைதீன் அப்துல் காதருக்குப் பிறகு வந்த அமைப்பாளர்கள் பலர் இந்த செயற்பாடுகளில் ஒன்றிப் போயிருந்தனர். இது கல்குடா முஸ்லிம் காங்கிரஸின் எழுதப்படாத சட்டம் போன்றே காட்சியளித்தது.
இந்த வரலாற்றை பின் நோக்கிச் சென்று பார்த்தால் மறைந்த முகைதீன் அப்துல் காதருக்குப் பிறகு வந்த அனேக அமைப்பாளர்கள் தங்களது தடம் தெரியாமலேயே தடமாறிச் சென்றிருந்தனர். தான் நினைத்து வந்ததை கட்சி பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து இவர்கள் விலகிச் சென்றது மாத்திரமல்லாமல் வேற்றுக் கட்சிகளோடு சேர்ந்து கட்சியை காட்டிக் கொடுக்கும் கைங்கரியங்களில் கூட ஈடுபட்டனர்.
இதனால் கட்சியின் வளர்ச்சி,அதன் செயற்பாடுகள் யாவுமே அதளபாதாளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வாரான சந்தர்ப்பத்தில் கட்சியை கைகொடுத்து துாக்கி நிமிர்த்தி விடுவதற்கு தகுதியான யாருமே முன்வரவில்லை.
இந்த சந்தர்ப்பத்தில்
தான் தற்போதைய அமைப்பாளராக கட்சியின் தலைவரால் கணக்கறிஞர் ரியாழ் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
ரியாழ் அவர்கள் அமைப்பாளராக நியமிக்கப்பட்ட சந்தர்ப்பமானது கல்குடாத் தொகுதியிலே கட்சி வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு இருண்ட காலமாகும்.
கட்சியின் அமைப்பாளர்கள் தொடங்கி, முன்னனிப் போராளிகள் சகிதம் மாற்றுக் கட்சியிலே சேர்ந்து கொண்டு கட்சியின் வளர்ச்சிக்கு சவால் விட்டுக் கொன்டிருந்தனர்.இந்த சவால்களை புதிய அமைப்பாளர் எவ்வாறு முகம் கொடுக்கப் போகிறார் என்று எல்லோரும் ஆச்சரியத்தோடு எதிர்பார்த்திருந்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில்தான் கடந்த பொதுத் தேர்தல் வந்தது. அந்தத் தேர்தலிலே போட்டியிட எல்லோரும் ஒழிந்து ஓடிய போது தைரியத்தோடு அந்தத் தேர்தலை அமைப்பாளர் ரியாழ் அவர்களே முகங்கொடுத்தார்கள். சுமார் பத்தாயிரம் வாக்குகளைப் பெற்றதோடு மட்டக்களப்பு மாவட்டத்திலே கட்சி அமோக வெற்றி பெருவதற்கு காரணமாகவும் இருந்தார்.
தான் தோல்வி அடைந்தாலும் மாவட்டத்திலே கட்சியின் ஆசனம் பாதுகாக்கப்பட்டதை என்னி ஆனந்தம் அடைந்தார்.
தேர்தல் முடிந்த கையோடு ஏற்கனவே இருந்த அமைப்பாளர்கள் காணாமல் போனதைப் போன்று ரியாழ் அவர்களும் காணாமல் போவார் என்று பலரும் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் நிலைமை வேறுமாதிரி ஆகியது.
ரியாழ் அவர்கள் தேர்தல் காலத்தில் தன்னால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் திடமாக இருந்தார். அதிலே முதன்மையாக சுத்தமான குடிநீர் கல்குடா மக்களுக்கு கிடைக்கும் என்ற தேர்தல் கால வாக்குறுதி உண்மைப்படுத்தப்பட்டது.
மேலும் பல வீதிகள் கொங்றீட் இடப்பட்டதோடு மற்றுமொரு வீதி காபட் இடப்பட்டது. அத்தோடு வெள்ளத்தடுப்புச் சுவர்கள் அணைக்கட்டுகள்,சிறுவர் பூங்காக்கள் என கல்குடா அபிவிருத்தி மழையில் நனைந்தது.
சுமார் ஆயிரத்து முந்நுாறு கோடிக்கு மாத்திரம் சுத்தமான குடிநீர் திட்டம் கொண்டுவரப்பபட்ட தென்பது கல்குடா முஸ்லிம்களின் வரமாகவே பார்க்கப்பட்டது.
இவ்வாரான பல்லாயிர மில்லியன் கணக்கான ரூபா அபிவிருத்திகளை எமது தேசிய தலைவர் ரவுப் ஹக்கிம் அவர்களின் ஒத்துழைப்போடு செய்து முடித்து கல்குடா அரசியல் வரலாற்றில் தனக்கென தனியான ஒரு இடத்தினை அமைப்பாளர் ரியாழ் அவர்கள் பெற்றிருந்த போதுதான் அண்மைய உள்ளுராட்சி மன்ற தேர்தல் வந்தது.
இந்தத் தேர்தலிலே போட்டியிட முன்வந்த அனைத்து வேட்பாளர்களுக்க
ும் தன்னால் முடிந்த அத்துனை உதவிகளையும் ரியாழ் அவர்கள் செய்து கொடுத்தார்கள். அவரது உதவியில்லாமல் எந்த ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றிருக்க முடியாது எனும் அளவுக்கு அவரது பங்களிப்பு இருந்தது.
தேர்தலிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைத்தது.கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு எட்டு உறுப்பினர்களும், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்கு மூன்று உறுப்பினர்களும் தெரிவாகியது சாதனையாக பார்க்கப்பட்டது.
ஏனெனில் ஓட்டமாவடி பிரதேச சபையிலே ரியாழ் அவர்களின் வருகைக்கு முன் ஒரே ஒரு உறுப்பினர் மாத்திரமே கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலிலே கல்குடாவில் மொத்தமாக 12500 வாக்குகள் கட்சிக்கு பெறப்பட்டதென்பது கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
இது ரியாழ் அவர்களுக்குக் கிடைத்த சமுக அங்கீகாரமாகவும் பார்க்க முடியும்.ஏனெனில் ஏற்கனவே நடைபெற்ற தேர்தல்களிலே சுமார் 6000 வாக்குகள் மட்டுமே கட்சிக்காக கிடைத்துக் கொண்டிருந்தது. அது கட்சியின் நிலையான வாக்குகளாகும்.
ரியாழ் அவர்களின் அரசியல் நகர்வுகளால் உந்தப்பட்ட மக்கள் தங்களது ஆதரவினை இத்தேர்தல் ஊடாக தெரியப்படுத்தி இருந்தனர் என்றே கூற வேண்டும். இவ்வாறு கட்சியின் வளர்ச்சி வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கின்ற வேளையில்தான் புதிய அமைப்பாளருக்கான கோசம் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகிறது.
யாருக்கு புதிய அமைப்பாளர் தேவை?
தற்போது அமைப்பாளர் ரியாழ் அவர்கள் மாற்றப்பட்டு புதிய அமைப்பாளர் ஒருவர் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோசம் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகிறது. இக் கோசத்தை முன் வைப்பவர்கள் யார் என்று அலசி ஆராய்ந்து பார்த்தால் ஒரு சில உண்மைகள் வெளிவரத் தொடங்குகிறது.
அதாவது “அரசியல் மாமாக்கள்” என்று கல்குடாவிலே வர்ணிக்கப்படுகின்ற ஒரு சிலர்தான் இந்த கோசத்தை கையில் ஏந்திப்பிடித்துள்ளனர். இதற்கான காரணம் யாதெனில் ரியாழ் அவர்களின் வருகைக்கு முன்னர் கல்குடா முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளால் கட்சிக்கு இடப்படுகின்ற வாக்குகளை அயலுார் அரசியல் வாதிகளுக்கு விற்று வயிற்றுப் பிழைப்பு நடாத்துபவர்கள்.
இந்த வியாபாரம் தற்போது ரியாழ் அவர்களின் வருகைக்குப் பிறகு சோகை இழந்து விட்டது. எனவேதான் மீண்டும் இந்த வியாபாரத்தை எப்படியாவது தொடங்க வேண்டும் என்பதற்காக நொண்டிக் குற்றச் சாட்டுக்களை முன்வைத்து கதை அளக்கின்றனர்.
இதற்கு முட்டுக் கொடுப்பது போல் அரசியலில் பின் கதவால் வர நினைத்துச் செயற்படும் ஒரு சில படித்த மேதாவிகளும் இதற்கு உடந்தையாக செயற்பட்டுவருவது இப்போது வெளிப்படையாகவே தெரிகிறது.
உண்மையில் ரியாழ் அவர்களுக்கு அரசியல் செய்துதான் தனது காலத்தை ஓட்டவேண்டும் என்ற தேவை இம்மியளவும் கிடையாது.
இது தேசிய தலைவர் அவர்களுக்கு நன்கு தெரியும். அரசியலை ஆதாயத்திற்காக செய்பவர்களுக்கு மத்தியிலே அரசியலை வணக்கமாக செய்யும் ஒருவரை வீழ்த்த நினைப்ப தென்பது ஒட்டு மொத்த சமுகத்தின் சாபத்தையும் சுமக்க வேண்டிய நிலை அவர்ளுக்கு ஏற்படும்.
அதே வேளை மக்கள் மத்தியில் இது வரை சேவை நாயகனாக இருக்கும் ரியாழ் அவர்களை அவ்வளவு எளிதாக வீழ்த்தலாம் என்பது “அரசியல் மாமா”க்களின் எட்டாக்கனியாகும். எனவேதான் அரசியலில் சூழ்ச்சி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி அந்த சூழ்ச்சிகளைக் கண்டு ஒழிந்து ஓடுபவன் சமுக தலைவனாக முடியாது. அந்த வகையில் ரியாழ் அவர்களையும் கல்குடா முஸ்லிம் சமுகம் தலைவனாகவே பார்க்கிறது.
எஸ்.ஐ. முஹாஜிரீன்,
ஓட்டமாவடி.
Post a Comment