மாகாண மட்டத்திலும், மத்திய அரச நிறுவனங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு வெற்றிடங்களுக்கு வேலையற்ற பட்டதாரிகளை உடனடியாக நியமிக்க நடவடிக்கை வேண்டும் என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொழிலாளர் தின நிகழ்வு நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு, செங்கலடி, மாவடிவேம்பு மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கட்சியின் தொழிலாளர் தின மும்மொழிவாக வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை மும்மொழிந்து வலியுறுத்தினார்.
இதன்போது அவர் அங்கு மேலும் கூறியதாவது:-
'ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்று சிறப்பு மிக்க இந்த தொழிலாளர் தின நிகழ்வினை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேசத்தில் நடத்த தீர்மானித்தமைக்காக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுக்கு கிழக்கு மாகாண மக்கள் சார்பிலும், மட்டக்களப்பு மக்கள் சார்பிலும எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டும் சிறுபான்மை சமூகம் ஒதுங்கியிருந்த ஒரு காலம் இருந்தது. ஆனால், கட்சியின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்ற பின்னர் அந்நிலை மாறியுள்ளது. இந்த நாட்டில் வாழ்கின்ற சகல இனமக்களுக்குமான ஒரு கட்சியாக இதனை மாற்றியமைத்ததோடு மாத்திரமல்லாது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொழிலாளர் தினத்தை இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் நடத்தவும் தீர்மானித்தார்.
ஒரு தேசிய கட்சி தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வொன்றினை வடகிழக்கில் ஏற்பாடு செய்வது இதுவே முதல் தடவை.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்புக்கு வருகைத்தந்த அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த மாவட்டத்தின் நிலைமைகள் தொடர்பில் புரிந்து கொள்வதற்கு சிறந்த வாய்ப்பும் -வசதியும் ஏற்பட்டது.
குறிப்பாக தொழிலாளர்களது நலன்களுக்காக போராடுகின்ற இந்த தினத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொழிலாளர் வர்க்கத்துக்காக போராடி வருகின்ற ஒரு கட்சி. அதனடிப்படையில் எதிர்காலத்திலும் இக்கட்சி பயனிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம் பெற்ற ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் இன்று வேலையின்றி இருக்கிறார்கள். அந்த பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல தீர்மானங்களை எடுத்து தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
அத்திட்டம் மாகாண மட்டத்திலும், மத்திய அரச நிறுவனங்களிலும் உள்ள வெற்றிடங்களுக்கு கால தாமதமின்றி, கட்சி பேதங்களுக்கு அப்பால் உடனடியாக வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும். அவர்களது தரங்களை மாத்திரம் அடிப்படையாக வைத்தே இந்த நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என இந்த மே தின நிகழ்வில் இந்த மண்ணில் இருந்து மும்மொழிகின்றேன்." - என்றார்.
Post a Comment