எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் பிரதமர் வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவையும் அறிவித்து அதனை கட்சியினர் மத்தியில் பிரச்சாரப்படுத்த வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் சபைக் கூட்டத்தில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் எதிர்கால பயணம், முன்னேற்றம், கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, கட்சியின் வெற்றிக்காக ஊடகத்தை கையாளளும் திட்டம் ஒன்றையும் கையளித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் மங்கள சமரவீர, ஒருவருக்கு ஒருவர் விவாதித்து கொண்டிருப்பதில் பயனில்லை எனவும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவையும் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவையும் அறிவித்து பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தான் கூறியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் மங்கள, கிராம மட்டத்திலும் கீழ் மட்டத்திலும் கட்சியினர் மத்தியில் சஜித் பிரேமதாசவிற்கு பெரும் ஆதரவு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை வகிக்க தகுதியானவர் என கட்சியினர் கருத்துகின்றனர் என்பதால், தமது யோசனையை துரிதமாக செயற்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment