Top News

சந்திரிக்காவை நிராகரித்த மைத்திரி!

Related image

தன்னைக் கொலைசெய்ய முயன்ற குற்றத்துக்காக நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு வெசாக்கை முன்னிட்டு மன்னிப்பு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்த வேண்டுகோள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நிராகரிக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில்,

ஜனாதிபதியாக சந்திரிகா அம்மையார் பதவி வகித்தபோது, அவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட உதவிய குற்றத்துக்காக தமிழ் அரசியல் கைதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களாக மிக நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்திருந்த நிலையிலேயே அவர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையில், வெசாக்கை முன்னிட்டு அவர்களை மன்னிப்பில் விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அவர் தெரியப்படுத்தியிருந்தார்.

இதுவரையில் அவரது கோரிக்கைக்கமைவாக அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படவில்லை. ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதியின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமையாலேயே அவர்களை விடுவிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

இதேவேளை, கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதியான ஆனந்தசுதாகரது பிள்ளைகளை ஜனாதிபதி மைத்திரிபால நேரில் சந்தித்திருந்தார்.
ஆனந்தசுதாகரை மன்னிப்பில் தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கு முன்னர் விடுவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால், இன்றுவரையில் ஆனந்தசுதாகர் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றுள்ளது.

Post a Comment

Previous Post Next Post