கடந்த பெப்ரவரி மாதம் அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களினால் முழுமையாக சேதங்களுக்குள்ளான அம்பாறை ஜும் ஆ பள்ளிவாசலின் நஷ்டஈடு மதிப்பீட்டுத் தொகையான 27 மில்லியன் ரூபாவையும் தாமதியாது வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் புனர்வாழ்வு அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்தோடு கடந்த வருடம் நவம்பர் மாதம் கிந்தோட்டையில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு ஏன் இதுவரை நஷ்டஈடுகள் வழங்கப்படவில்லை எனவும் புனர்வாழ்வு அதிகாரசபை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிந்தோட்டை நஷ்டஈடுகளையும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்
நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் பிரதமர் தலைமையில் கண்டி வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கான நஷ்ட ஈடுகள் வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், கபீர் ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் மலிக் சமரவிக்ரம உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர். புனர்வாழ்வு அமைச்சு மற்றும் புனர்வாழ்வு அதிகாரசபையின் அதிகாரிகளும் பங்கு கொண்டிருந்தனர்.
இக்கூட்டத்தின் போது அம்பாறையில் இடம் பெற்ற வன் செயல்களினால் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல் மற்றும் சொத்துக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது தாமதமாகின்றமை தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார்.
இச்சந்தர்ப்பத்தில் அம்பாறை ஜும் ஆ பள்ளிவாசலின் நஷ்டஈடு மதிப்பீடு 27 மில்லியன் ரூபாய்கள் என தெரிவிக்கப்பட்டது. இந்த நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினைத் தயாரித்து தாமதமின்றி சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் பிரதமர் புனர்வாழ்வு அதிகார சபை அதிகாரிகளை வேண்டிக்கொண்டார்.
இதுதொடர்பில் புனர்வாழ்வு அமைச்சின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம்.பதுர்தீனைத் தொடர்பு கொண்டு வினவியபோது, கண்டி வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு பிரதமரினால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அம்பாறை மற்றும் கிந்தோட்டை வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களுக்கு நஷ்ட ஈடு எவ்வாறு வழங்கப்பட வேண்டுமென தெரிவிக்கப்படவில்லை.
1987 ஆம் ஆண்டின் சுற்று நிருபத்தின்படி வன் செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் நஷ்ட மதிப்பீட்டில் 20 வீதமே நஷ்ட ஈடாக வழங்க முடியும். அத்தோடு பள்ளிவாசல்களுக்கு நஷ்ட ஈடாக ஒரு மில்லியன் ரூபாவுக்கு உட்பட்ட தொகையே வழங்க முடியும். இவ்வாறே சுற்று நிருபம் தெரிவிக்கிறது. இதன் காரணமாகவே அம்பாறை, கிந்தோட்டை நஷ்ட ஈடுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அம்பாறை வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட ஜும்ஆ பள்ளிவாசல் உட்பட மற்றும் சொத்துக்களுக்கு நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவைப் பத்திரத்தை தயார் செய்யும்படி பிரதமர் பணித்திருக்கிறார். தற்போது அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அடுத்த வாரமளவில் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க முடியும் என்றார்.
கிந்தோட்டையில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற வன்செயல்களினால் 142 சொத்துக்கள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2018 பெப்ரவரி மாதம் அம்பாறையில் இடம் பெற்ற வன் செயல்களினால் ஜும் ஆ பள்ளிவாசல் ஒன்று உட்பட 13 சொத்துகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli
-Vidivelli
Post a Comment