Top News

இலங்கைத் தீவின் அனைத்து இடங்களிலும் புத்தர் சிலைகள் அமைக்கப்படும் - சஜித்


வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கைத் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் பெரியளவிலான புத்தர் சிலைகளை அமைக்கவுள்ளதாக இலங்கை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினத்தை முன்னிட்டு, புத்தர் சிலைகளை அமைக்கவுள்ளதாகவும், எதிர்வரும் 23 ஆம் திகதி பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். அதேவேளை கடந்த ஒன்பது ஆண்டுகளில் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் தமிழர் தாயக பிரதேசங்களில் 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்திருந்தார். 

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 94 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இலங்கைத் தீவு முழுவதிலும் மாபெரும் புத்தர் சிலைகளை நிர்மாணிப்பத்ற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் அதிகாரிகள் இந்த வேலைத் திட்டம் தொடர்பான ஏற்பாடுகளை செய்து வருவருகின்றனர் எனவும், இலங்கை பௌத்த நாடு என்ற அடையாளத்துடன் இருப்பதற்கான செயற்திட்டங்களில் ஈடுபட வேண்டும் என்பதுதான் தமது நோக்கம் என்றும் இலங்கை அமைச்சர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.
இலங்கை முன்னாள் ஜனாதிபதியின் மகனான அமைச்சர் சஜித் பிரேமதாச, விடுதலைப் புலிகளை போரில் அழித்தது மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் அல்ல. ஐக்கியதேசியக் கட்சிதான் என்று இலங்கை நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் முன்னர் கூறியிருந்தார்.
சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். இவருடைய தந்தையார் ரணசிங்க பிரேமதாச 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார்.
அதேவேளை, ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு வரும் புத்தர் சிலைகள், பௌத்த விகாரைகளை, இலங்கைத் தீவில் பதவிக்கு வரும் எந்தவொரு அரசாங்கமும் அகற்றுவதற்கு முன்வரவில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் துவிகரன் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று விகாரைகளும் எந்தவிதமான அனுமதிகளும் இன்றி கடந்த ஒன்பது ஆண்டுகளில் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இராணுவத்தின் பயன்பாட்டுக்காகவும், தமிழர் தாயக பிரதேசங்களை பிரிப்பதற்கும் ஏதுவான முறையில் புத்தர் சிலைகளை நிறுவி தமிழர்களை கொதி நிலையில் வைத்திருக்கவே இலங்கை அரசாங்கம் விரும்புகின்றதா என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இர.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் தாயக பிரதேசங்களில் சட்டத்திற்கு முரணாக புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றமை தொடர்பாக சம்பந்தன், ஐரோப்பிய நாடாளுமன்ற பிரதிநிதிகளிடமும் முறையிட்டிருந்தார்.
பௌத்த சமயத்துக்கும் புத்த பிக்குமாருக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அரச கொள்கைத் தத்துவத்தின் முக்கிய சரத்தாக அமைந்துள்ளது.
1978 ஆண்டு இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில், இலங்கைத் தீவில் உள்ள சகல மதங்களுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட்டிருந்தாலும், பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை என்ற வாசகம் முக்கியமானதாகும்.
அத்துடன் அரச மதம் என்ற அங்கீகாரமும் பௌத்த சமயத்துக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. அந்த முக்கியத்துவத்தின் ஊடாகவும் ஒற்றை ஆட்சி அரசு என்பது நிறுவப்படுகின்றது.
புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கையில் கூட இந்த சரத்து எந்த மாறுதல்களும் இன்றி இணைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம் ஒன்றில், இலங்கை நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பௌத்த சமயத்துக்கான முன்னுரிமையை உறுதிப்படுத்தியிருந்தார்.

Post a Comment

Previous Post Next Post