இவ்வருடம் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ள ஒரு சில ஹஜ் முகவர்களே ஹஜ் ஏற்பாடுகள் குறித்து உண்மைக்குப் புறம்பான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். புதிய கோட்டா பகிர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்பு ஹஜ் கட்டணத்தில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. முகவர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஹஜ் யாத்திரிகர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்டுள்ள ஒரு சில ஹஜ் முகவர்களின் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம் என அரச ஹஜ் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஐக்கிய ஹஜ் ஏஜன்சிஸ் ஸ்ரீலங்கா என்ற அமைப்பு கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த ஊடக மாநாட்டில் அரச ஹஜ் குழுவுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கும் எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கும் பதிலளிக்கும் வகையில் அரச ஹஜ் குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
"கடந்த வருடம் இலங்கைக்கு இறுதிச் சந்தர்ப்பத்தில் கிடைக்கப்பெற்ற 600 மேலதிக ஹஜ் கோட்டா தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 8 கோடி 64 இலட்சம் பணம் அறவிட்டு அப்பணத்திற்கு பற்றுச்சீட்டு வழங்கப்படவில்லையெனவும் அப்பணம் சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பொய்யானதாகும். இதற்கும் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை.
600 மேலதிக கோட்டாவுக்குமான கட்டணத்தை ஹஜ் விண்ணப்பதாரிகளிடமிருந்து சம்பந்தப்பட்ட முகவர்களே அறவிட்டார்கள். ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகளை 4 முகவர் சவூதி மக்காவிலிருந்து மேற்கொண்டார்கள். ஹஜ் முகவர்களால் அறவிடப்பட்ட பணம் சவூதியில் தங்கியிருந்த 4 ஹஜ் முகவர்களுக்கும் அனுப்பப்பட்டது. நான்கு முகவர்களுமே ஹோட்டல் ஏற்பாடு, தங்குமிட வசதி மற்றும் போக்குவரத்து வசதிக்கான ஏற்பாடுகளைக் கவனித்தார்கள்.
சவூதி அரேபியாவில் 600 ஹஜ் யாத்திரிகர்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்பட்டுள்ளன என்பதை திணைக்களம் அறியும். அவற்றுக்கான பற்றுச்சீட்டுக்கள் சம்பந்தப்பட்ட ஹஜ் முகவர்களிடமே உள்ளன.
பின்வருமாறு கட்டணங்கள் தலா ஒருவருக்கு என்ற ரீதியில் 600 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.
முஅல்லிம் கட்டணம் 1500 சவூதி ரியால்கள், அஸீஸியா தங்குமிட கட்டணம் 750 ரியால்கள்.
போக்குவரத்து கட்டணம் 1029 ரியால்கள், தாமீன் கட்டணம் 22.5 ரியால்கள் ஆகும்.
கடந்த 2013 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகள் (Guide Lines) கடந்த மூன்று வருடங்களாக மீறப்படவில்லை. ஹஜ் யாத்திரிகர்கள் தெரிவு, ஹஜ் முகவர்கள் தெரிவு என்பன பற்றி உயர்நீதிமன்றம் வழங்கிய வழிமுறை பேணப்பட்டுள்ளது. ஹஜ் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற வழிமுறையும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. முகவர்கள் நேர்முகப் பரீட்சையின் பின்பே தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்கள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையிலே கோட்டா வழங்கப்படுகிறது. முகவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கோட்டா எண்ணிக்கை தொடர்பில் உயர் நீதிமன்ற ஹஜ் வழிமுறையில் குறிப்பிடப்பட்டில்லை.
ஹஜ் விண்ணப்பதாரிகளிடமிருந்து பதிவுக்கட்டணமாக 25 ஆயிரம் ரூபா அறவிடப்படுகிறது. அக்கட்டணம் அவர்கள் பயணிக்கும்போது மீளக் கையளிக்கப்படுகிறது. அதற்கான பற்றுச்சீட்டு வழங்கப்படுகிறது.
ஹஜ்ஜுக்காக 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துவிட்டு காத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிப்பதில் எந்த உண்மையுமில்லை. இவ்வருடம் 340 பேரே ஹஜ் பயணத்தை 25 ஆயிரம் ரூபா செலுத்தி உறுதி செய்துள்ளார்கள். அதனால் 400 பேரே மேலதிகமாக ஹஜ்ஜுக்காக காத்திருக்கிறார்கள். இவ்வருடம் 3000 கோட்டா கிடைத்துள்ளது.
சேவைக் கட்டணமாக ஒரு ஹஜ் யாத்திரிகருக்கு 2000 ரூபாவே அறவிடப்பட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் தற்போதைய நிர்வாக செலவு, பண வீக்கம் காரணமாகவே இக்கட்டணம் 2000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் கோட்டா பகிர்வு முறைக்கெதிராக நீதிமன்றில் வழக்கொன்று விசாரணையின் கீழ் உள்ளது. இதேவேளை நீதிமன்றம் புதிய கோட்டா பகிர்வு முறைக்கு எவ்விதத் தடையும் விதிக்கவில்லை. ஏனென்றால் இம்முறையினால் ஹஜ் பயணிகளின் நலன் பேணப்படுகிறது. ஹஜ் கட்டணத்தில் பாரிய வீழ்ச்சியேற்பட்டுள்ளது. கடந்த வருடங்களில 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக இருந்த கட்டணம் தற்போது 5 இலட்சம் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment