( ஏ.எச்.எம்.பூமுதீன்)
ஈரான் - இலங்கை - கட்டார் நாடுகளுக்கிடையிலான உறவு குறித்து நாட்டு முஸ்லிம்களுக்கு அரசு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் மசூர் மௌலானா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் எந்த விதத்திலும் பிரயோசனமற்ற ஈரானோடும் கட்டாரோடும் - நல்லாட்சி அரசு உறவு கொண்டாடுவதன் மர்மம்தான் என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆலோசகரான மசூர் மௌலானா இது தொடர்பில் மேலும் தெரிவித்தவை வருமாறு;
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாட்டிற்கு மாற்றுக் கருத்தை கொண்ட ஈரானுடன் இலங்கை அரசு கொண்டுள்ள உறவு தொடர்பில் முஸ்லிம் சமூகம் பெரும் வேதனை கொண்டுள்ளது. ஏனைய முஸ்லிம் நாடுகளும் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளன.
முஸ்லிம்களால் வெறுக்கப்படுகின்ற ஷீயா கோட்பாட்டை இலங்கைக்குள் புகுத்த ஈரானுக்கு அநுமதியளிப்பதன் பின்னனியில் இஸ்லாத்துக்கு எதிரான சக்திகள் உள்ளனவா ? அல்லது அவ்வாறான சக்திகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றனவா என்ற கேள்வி இன்று முஸ்லிம் சமூகத்தினரால் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது.
முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் இன்று நாட்டில் பரவலாக நடந்தேறிக் கொண்டுவரும் நிலையில் இவ்வாறான சந்தேகங்களும் கேள்விகளும் எழுவதை தவிர்க்க முடியாது.
ஈரான் மற்றும் கட்டார் நாடுகளை விட இலங்கைக்கு அதிகளவு உதவிகளை செய்த நாடு , செய்து கொண்டிருக்கின்ற நாடு சவூதி அரேபியா என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அப்படிப்பட்ட அந்த சவூதி நாட்டை அழிக்கத் துடிக்கும் ஈரானுடனும் அதற்கு துனை நிற்கும் கட்டாருடனும் இலங்கை உறவு கொண்டாடுவது எம் நாட்டுக்கு உகந்ததல்ல.
நல்லாட்சி அரசு அண்மைக்காலமாக சவூதியை புறக்கணிக்கும் பொறி முறையை கையான்ட போதிலும் சில நல்லுள்ளம் கொண்ட முஸ்லிம்களின் வேண்டுகோளிற்கு சவூதி அரசு பொறுமை காத்து தொடர்ச்சியான உதவிகளை செய்த வண்ணமே உள்ளன. அதேநேரம் இலங்கை அரசின் புறக்கணிப்பும் சமாந்தரமாக இடம்பெற்றுக் கொண்டே வருகின்றன.
அண்மையில் பல பில்லியன் டொலர் செலவில் அதி நவீன வசதிகளைக் கொண்ட வைத்தியசாலையை நிர்மாணித்துக் கொடுத்த சவூதியின் முக்கிய அரசியல் மற்றும் முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து வைத்தியசாலையை திறந்து வைத்த போதிலும் அவர்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படவில்லை.
அதுமாத்திரமன்றி அன்றைய தினமே இலங்கை ஜனாதிபதி தனது பரிவாரங்களுடன் கட்டார் நாட்டிற்கு பயனமானார். இது, சவூதியை புறக்கனிக்கும் தன்மையின் உச்சக்கட்டமாகும். இதனால் சவூதியிலிருந்து வருகை தந்தோர் பெரும் ஏமாற்றமும் அவமானமும் அடைந்தார்கள்.
இலங்கை பணியாளர்களை அதிகமாக உள்ளீர்க்கும் நாடுகளாக சவூதி , ஓமான் ,பஹ்ரைன் , குவைத் போன்ற நாடுகளே இருக்கின்றன. இன்று கட்டார் - எமது இலங்கைப் பணியாளர்களை திருப்பியனுப்பும் நிலைப்பாட்டை கையிலெடுத்துள்ளன. சவூதியின் நட்புறவு நாடுகள் அவை.
இதன் மூலம் தொழில் வாய்ப்பை - இலங்கைக்கு வழங்காதிருக்கும் நிலைப்பாட்டிற்கு மேற்படி நாடுகள் உந்தப்படுமாயின் பெரும் அந்நிய செலாவனி இழப்பை இலங்கை எதிர்கொள்வதோடு தொழிலற்றோர் வீதமும் அதிகரிக்கும் ஆபத்தும் ஏற்பட்டு வளர்ச்சியடையாத நாடாக இலங்கை தாழ்த்தப்படும் அபாயம் ஏற்படும்.
இவ்வாறான பின்னனியில்தான் இம்முறை சவூதி அரசு வழமையாக புனித ரமழானை முன்னிட்டு வழங்கும் ஈச்சம் பழத்தைக் கூட வழங்கவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகின்றது.
அதனால்தான் 8கோடி ரூபாவை செலவு செய்து இந்த அரசு ஈச்சம் பழங்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஈரான் மற்றும் கட்டார் நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என எனக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்ட போதிலும் அதனையும் தாண்டி இந்த நாடுகளுக்கு சென்றேன் என ஜனாதிபதி மைத்திரி அண்மையில் கூறியிருந்தார். உண்மையில் அந்த அழுத்தத்தை அல்லது வேண்டுகோளை அவர் செவி மடுத்திருப்பாராயின் சில, பல அநூகூலங்களை இந்த நாடு அடைந்திருக்கும்.
இந்த நாடுகளுக்கு ஜனாதிபதி சென்றதால் நாட்டுக்கு கிடைத்த நண்மைதான் என்ன? ஒன்றுமே இல்லை. வெறுங்கையுடன் திரும்பி வந்தது மட்டுமன்றி அதிக உதவிகளை புரியும் சவூதியின் நட்பையே இழக்க வேண்டி ஏற்பட்டது.
எனவே முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கும் ஷீயாக்களின் ஊடுருவலீல் இருந்து எமது சமூகத்தையும் எதிர்கால சந்ததியையும் பாதுக்க வேண்டியுள்ளது மட்டுமன்றி எமது நாடு அபிவிருத்தி அடைவதிலிருந்து பின்னோக்கிச் செல்வதை தடுப்பதற்கும் நாம் தயாராக வேண்டிய அவசியத்திற்கும் அவசரத்திற்கும் தள்ளப்பட்டுள்ளோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகர் மசூர் மௌலானா மேலும் தெரிவித்தார்
Post a Comment