ஏ.எல்.எம்.சத்தார்
1800 களின் இறுதியிலும் 1900 களின் முதல் தசாப்தத்திலும் அநகாரிக தர்மபால சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்குக்கெதிராக விதைத்த வெறுப்பு பிரசாரத்தின் விளைவாகவே 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் மீதான இனக்கலவரம் மூண்டது.
அதுவே இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்குக்கெதிராக சிங்களவர்களால் தொடுக்கப்பட்ட முதலாவது இன நாசகார நடவடிக்கையாக பதிவாகியுள்ளது.
இக்கலவரம் கண்டி மாவட்டத்தில் கம்பளையில் ஆரம்பிக்கப்பட்டு அது நாடு முழுவதுமாக வேகமாகப் பரவியது. இதனால் முஸ்லிம்களின் உயிர் உடைமைகளுக்கு பாரிய நாசம் ஏற்படுத்தப்பட்டது. வரலாற்றுப் பதிவுகளின்படி 4075 முஸ்லிம் கடைகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. 350 முஸ்லிம் கடைகள் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். 189 பேர் காயத்திற்குள்ளாக்கப்பட்டனர். இவ்வாறு அந்தப் பதிவுகள் கூறுகின்றன.
அன்றைய காலகட்டத்தில் இலங்கை ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இக்கலவரம் ஆங்கிலேயருக்கு புது அனுபவமாகவும் அமைந்தது. இதனால் இதனை உடனடியாக அடக்கவும், பரவாது தடுக்கவும் முடியாது போனது. ஆனாலும் இன்று நடப்பது போன்றல்லாமல் காவல்துறையினர் நடுநிலையில் நின்று கலகத்தை அடக்க முயன்றனர். வன்செயல்கள் நாடு முழுவதிலும் வியாபித்துள்ளதால் பாதுகாப்புக்குப் போதிய துருப்பினர் இல்லாத நிலையில் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமர்த்தப்பட்டிருந்த இராணுவம் இங்கு உடனடியாக வரவழைக்கப்பட்டது. இவர்களின் ஒத்துழைப்புடன் கலகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட இராணுவத்தில் பெரும்பாலானோர் முஸ்லிம் வீரர்களாக இருந்தனர். இதன் காரணமாக இங்கு பாதிக்கப்பட்டு குற்றுயிராக இருந்த முஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்புக் கிடைக்கப்பெற்றது. அத்துடன் முஸ்லிம்களுக்கெதிராக வன்செயலில் ஈடுபட்டோர் பாரபட்சமோ தகுதி தராதரமோ பாராது கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
கலகத்தை தலைமைதாங்கி நடத்தியவர் இனம் காணப்பட்டார். கொழும்பு காலி முகத்திடலில் வைத்து பகிரங்கமாக துப்பாக்கியால் சுட்டு அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இவர் சிங்கள மக்களின் முக்கிய அரசியல் புள்ளியொருவரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னர் இனப்பூசல் என்ற வகையில் 1956 ஆம் ஆண்டு மொழிப் பிரச்சினையால் தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள மக்களால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் 1983 ஆம் ஆண்டு இனப்பிரச்சினையின் எதிரொலியாக தமிழ் மக்களுக்கெதிராக பாரியளவிலான கலவரம் வெடித்தது. இவற்றைத் தவிர ஆங்காங்கே அவ்வப்போது சிறு சிறு கலவரங்களும் மூண்டுள்ளன. இக்கலவரங்களின் போதெல்லாம் பாதுகாப்பு துறையும் அரசும் சிங்களப் பேரினப் பக்கம் சார்ந்தே நின்றமை ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும்.
1915 கலவரம் முதல் இன்று வரையும் முஸ்லிம்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் பாய்ச்சல் நாட்டின் பல பகுதிகளிலும் பல சந்தர்ப்பங்களிலும் பலவாறாகவும் நடந்தேறியுள்ளன. இச்சந்தர்ப்பங்களிலெல்லாம் அவ்வப்போது நாட்டில் ஆட்சியிலிருந்த அரசும் காவல் துறையினரும் சிங்கள மக்களுக்குத் துணைபோகும் வகையில் நடந்து கொண்டமையால் முஸ்லிம்கள் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர். முறையான நீதி நிலை நாட்டப்படுவதிலும் முஸ்லிம்கள் பின்தள்ளப்பட்டே வந்துள்ளனர். நஷ்டஈடு வழங்குவதிலும் பாரபட்சமும் கண்துடைப்புமே நிகழ்ந்துள்ளன.
எவ்வளவோ உதாரணங்களை முன்வைக்க முடியுமான போதிலும் அண்மையில் இடம்பெற்ற குருநாகல் பள்ளிவாசலுக்கு கைக்குண்டு வீசி தாக்கப்பட்ட, எரிக்கப்பட்ட மற்றும் ஹார்கோர்ட் மருந்தகம் உள்ளிட்ட கடைகளுக்கு பெற்றோல் குண்டு எறியப்பட்ட சீ.சீ.ரீ.வீ. காணொளிகள் இருந்தும் கைது செய்யப்பட்டோர் விடயத்தில் நிலவும் அசமந்தப் போக்கைக் குறிப்பிடலாம். இதே போன்று ஞானசார தேரர் விடயத்தில் அவர் பாரதூரமான குற்றவாளியாகக் காணப்பட வேண்டிய நிலையில் அவருக்கு எதிராக பொலிஸார் ஏற்கனவே தயாரித்த பீ பத்திரம் மாற்றியமைக்கப்பட்-டு அவரது குற்றச்செயல் நலினமாக்கப்பட்டமை பரம இரகசியமல்ல. இதுவும் இங்கு முஸ்லிம்களுக்கு பாதுகாப்புத் துறையினராலே அநீதி இழைக்கப்பட்டுள்ளதென்பதைக் குறிப்பிடலாம்.
அண்மையில் கண்டி திகனயில் இடம்பெற்ற அடாவடித் தனங்களின் போதும் காவல் துறையினர் நடத்திய அட்டூழியங்கள் குறித்தும் நாம் அறிவோம். கலவரத்தின் போதும் காவல் துறையின் அநீதி, அதில் காயப்பட்டு வைத்தியசாலையை நாடினாலும் அங்கும் ஒரு சில பேரின வைத்தியர், தாதியர்களால் நச்சரிப்பு– பாரபட்சம் என்று அவலங்களைத்தான் சிறுபான்மைச் சமூகங்கள் முகம் கொடுத்து வருகின்றன.
ஆனால் கண்டி கலவரத்தின் பின்னராக சட்ட நடவடிக்கைகள் ஓரளவு திருப்தியைத் தருகின்றன. ஆனால் அவற்றின் தீர்ப்பு எப்படி அமையுமோ என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அன்று அநகாரிக தர்மபாலவினால் அநாகரிகமாக நட்டி வளர்க்கப்பட்ட நச்சு மரத்திலிருந்து விஷ விளைச்சல்கள் அவ்வப்போது தோன்றி சிங்கள மக்களை உசுப்பேற்றி வருகின்றன. அவை சிங்கள– முஸ்லிம் கலவரமாக முடுக்கிவிடப்படுகின்றன. அதனை முடக்க வேண்டிய பாதுகாப்புத் துறையினரும் சிங்களவர் என்பதால் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதில் பாரபட்சமே காட்டப்பட்டு வருகிறது.
தர்மபாலவிற்குப் பின்னர் 1990 களில் இயங்கிய வீரவிதான என்ற அமைப்பு பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் மூலம் முஸ்லிம்கள் மீதான விஷமப் பிரசாரங்களை முன்னெடுத்தது.
தொடர்ந்து கங்கொடவில சோம தேரர் தன் சிந்தனை, பேச்சு வன்மையால் முஸ்லிம்களை வெறுப்பூட்டும் விஷக் கருத்துக்களைக் கக்கினார். இவரின் இனவாத சிந்தனைக்கு கணிசமான சிங்கள மக்கள் பலியாகவே செய்தனர். குறுகிய காலத்திற்குள் அவரும் மரணத்தைத் தழுவினார். ஆனால் அவரால் விதைக்கப்பட்ட விஷமத்தனம் விளைச்சல் தரத் தவறவில்லை. இந்த வரிசையில் சிஹல உருமய உருவாகி, வெறுப்புப் பிரசாரத்தை முன்னெடுத்தது. பின்னர் ஹெல உருமயவாக பெயர் மாறியபோதிலும் அதே செயற்பாட்டுடனே முஸ்லிம் விரோதப்போக்குடன் இயங்கியது. இந்த சந்தர்ப்பத்தில் தான் ஞானசாரதேரர் தலையெடுத்து முஸ்லிம் விரோதப் பிரசாரத்தைக் காரசாரமான முறையில் கையிலெடுத்தார். இத்தகைய நடவடிக்கைகளின் போதெல்லாம், பின்னணியில் அரசியலும் உறுதுணை புரியவே செய்தது. அரசியல் ஆதாயமும் இனவாதமும் இரண்டறக் கலந்து இனவாத சக்திகளுக்கு துணைபோகவே செய்தன.
ஞானசாரவின் பொதுபலசேனா, சிஹலராவய, சிங்ஹலே அபி, ராவண பலய, மஹசொன் பலகாய உள்ளிட்ட பௌத்த தீவிரவாத அமைப்புக்கள் இங்கு எழுந்துவரும் முஸ்லிம் எழுச்சியை முடக்க, வெறுப்புப் பிரசாரத்திலும் தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
இவ்வாறு அவ்வப்போது தோன்றிய இனவாத அமைப்புக்கள் பௌத்த சிங்கள மக்களை முஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்திலேயே பௌத்த விகாரைகள், பௌத்த கிராமங்களில் விஷமப்பிரசார செயற்திட்டங்களை முன்னெடுத்தே வந்துள்ளன. துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டு வந்துள்ளன. இவை முஸ்லிம்களின் கரங்களுக்கு எட்டும் போது முஸ்லிம்களிடையே பரபரப்பு ஏற்படுவதோடு சோடா போத்தல் கேஸ் போல் அது தணிந்தும் விடுகின்றது. இத்தகைய வெறுப்புப் பிரசார நடவடிக்கைகளால் இன மோதல்கள் தூண்டப்படும் என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையிலும் பாதுகாப்பு தரப்பும் அரசும் இது விடயத்தில் அசட்டை காட்டியே வருகின்றன. முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகளால் இவற்றுக்குப் பலமான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்குமானால் இவற்றுக்கெதிராக அரசும் பாதுகாப்புத் தரப்பும் செயலில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கலாம். அப்போது அசம்பாவிதங்கள் தலை தூக்காது தடுத்துமிருக்கலாம். இவை எதுவும் கையாலாகாத நிலையிலே இன வெறுப்புணர்வின் கையே மேலோங்கி முஸ்லிம்களுக்கு உயிர், பொருளாதார அழிவுகளை ஏற்படுத்தி வருகின்றன.
இனவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஊடக பிரசாரம், உரைகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகிய அத்தனை விஷமப் பிரசார உத்திகளும் சிங்கள –பௌத்த மக்கள் அனைவராலும் ஏற்கப்படவில்லை. ஏற்கப்பட்ட அற்ப தொகையினரின் அட்டகாசத்தாலேதான் அவ்வப்போது பள்ளிவாசல்கள் தாக்குதல், முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் உடைத்து தீக்கிரையாக்கல், முஸ்லிம் குடியிருப்புகள் எரித்து சூறையாடல் போன்ற அடாவடித்தனங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
வெறுப்பூட்டும் துண்டுப்பிரசுரங்கள் வரிசையில், ‘கெமுனு சந்ததிகளின் பிள்ளைகள்’ என்ற பெயரில், ஏ–4 அளவில் 11 பக்கங்கள் கொண்ட துண்டுப்பிரசுரமொன்று விகாரைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. வெலிகம பகுதியில் விநியோகிக்கப்பட்ட மேற்படி பிரசுரத்தின் பிரதியொன்று அங்குள்ள நண்பர் ஒருவர் மூலம் எமக்கும் கிடைக்கப் பெற்றது.
அதன் முன் பக்கத்தில் கௌரவத்திற்குரிய சாதுவுக்கு என்று விளிக்கப்பட்டு, கடந்த காலங்களில் தாங்கள் காட்டிய அர்ப்பணிப்புக்கள் மேலானதாகும். இப்போதும் அவ்வாறே அமைய வேண்டும். இப்போது எதிர்நோக்கியுள்ள பயங்கரமான சூழ்நிலையிலிருந்து அப்பாவி சிங்கள பௌத்தர்களைப் பாதுகாக்க சங்கைக்குரிய பிக்குகளால்தான் முடியும். அதனால் இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கடிதத்தைப் படித்து பொருத்தமான முறையில் உங்கள் போதனைகளின்போது எங்கள் மக்களுக்குத் தெளிவூட்டுங்கள். எமது சமய பாடசாலை ஆசிரியர்களுக்கும் இயன்றவரையில் அறிவூட்டுங்கள் என்று புனித பூர்வமாகக் கேட்டுக் கொள்கிறோம் என்று பிரசுரத்தின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கத்தை சுருக்கமாகத் தருகிறேன்.
முஸ்லிம் நாடுகள் முஸ்லிம் தனவந்தர்களின் உதவிகளைப் பெற்று முஸ்லிம்கள் பள்ளிவாசல்களின் ஊடாகவே இந்நாட்டில் சிங்கள பௌத்தர்களை விடவும் மேலோங்க முயற்சிக்கிறார்கள்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாத்தாள்களை முன்கூட்டியே முஸ்லிம் மாணவர்களுக்கு வெளியாக்கி அவர்களை வைத்தியத்துறைப் படிப்புக்கு நுழையச்செய்து வைத்தியர்களாக்கி விடுகிறார்கள். இவ்வைத்தியர்கள் சிங்களப் பெண்களைக் குடும்பக்கட்டுப்பாடு செய்து சிங்கள இனம் பெருகுவதைத் தடுத்து விடுகிறார்கள். முஸ்லிம் பெண்கள் 8– 10 குழந்தைகள் பெற பலவாறு உதவுகிறார்கள்.
முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் அதிகளவில் சிங்களப் பெண்களை உள்வாங்கி முஸ்லிம் வாலிபர்களுடன் தொடர்புகளை உருவாக்கி எமது பெண்களை மதம் மாற்றச்செய்து மணமுடித்து வைக்கிறார்கள். 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் இவ்வாறு 3000 சிங்களப் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.
சிங்களப் பெண்களை முஸ்லிம் நாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி இங்குள்ள அவர்களது கணவன்மார் மதுபோதையிலும் பிள்ளைகள் சீரழிந்து சீர்கெடவும் வழி செய்கிறார்கள். அரபு நாட்டிலும் அடிமைகளாகி சித்திரவதையோடு சம்பளமும் இன்றி நாடு திரும்புகின்றனர். இவ்வாறு சிங்களக் குடும்பங்களை சிதைத்து வருகின்றனர்.
பௌத்த விகாரைகளுக்கு அருகேயுள்ள காணிகளை வாங்கி அங்கெல்லாம் முஸ்லிம் குடியேற்றங்களை உண்டு பண்ணுகிறார்கள். பின்னர் பௌத்த விகாரையையும் குட்டிச்சுவராக்கி அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள். கண்டி தலதா மாளிகையைச் சூழ இப்பேது 16 பள்ளிவாசல்கள் உள்ளன. பொத்துவில், தீகவாபி, சோமாவதி புனித பூமிகளில் எல்லாம் இதே ஆக்கிரமிப்பு நிலையைக் காணமுடிகிறது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் பதவிக்கு வரும் அரசுடன் இணைந்து பள்ளிவாசல் ஊடாக முஸ்லிம்களுக்கு மட்டும் அபிவிருத்திப் பணிகளைச் செய்து கொள்கிறார்கள்.
முஸ்லிம்கள் வியாபாரக் கடைகள் நடத்தவும், பள்ளிவாசல்கள் துணைபுரிகின்றன. இதனால் சிங்கள வர்த்தகர்கள் நஷ்டமடையச் செய்து அக்கடைகளையும் முஸ்லிம்கள் வாங்கிக் கொள்கிறார்கள். 99 வீதமான சிங்கள பௌத்தர்கள் முஸ்லிம் கடைகளில் தான் கொள்முதல் செய்கிறார்கள். இதன்மூலம் பெருவாரியான சிங்கள பௌத்தர்களது பணம் முஸ்லிம்களின் பள்ளிகளைச் சென்றடைகின்றன.
இப்படி சிங்கள தேசத்தை முஸ்லிம் ராஜ்ஜியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சிங்கள இனம் 2 x 2 x 2 x 2= என்று நான்கு பரம்பரையில் 16 ஆகும். போது முஸ்லிம்களோ 6 x 6 x 6 x 6 என்று 1296 ஆகி பன்மடங்காகப் பெருகுவதாகப் புள்ளிவிபரம் ஒன்றையும் அப்பிரசுரத்தில் காட்டியுள்ளனர். இந்த வகையிலேதான் பல முஸ்லிம் நாடுகள் உருவாகியுள்னள. இன்னும் 30 ஆண்டுகளில் பிரான்ஸ், ஜேர்மன் முஸ்லிம் நாடுகளாகிவிடும். 2025 இல் ஐரோப்பாவில் மூன்றில் ஒரு மடங்கு முஸ்லிம்களாகிவிடுவர். இன்னும் பத்தாண்டுகளில் ரஷ்ய இராணுவத்தில் 14 வீதம் முஸ்லிம்களாகிவிடுவர். இவ்வாறு கிறிஸ்தவ ராஜ்ஜியங்களின் தலைவிதியும் மாறி வருகிறது. சிங்கள மாணவர்களை சிறு வயதிலிருந்தே போதைக்கு அடிமையாக்கும் வேலையும் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருகிறது.
முஸ்லிம்களால் இழைக்கப்படும் மிகவும் சொற்ப விடயங்களே இத்துடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. எனவே நாம் தொடர்ந்தும் ஏமாறக்கூடாது. விழிப்படைய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் ஷிஆ கோட்பாட்டிலுள்ள ‘அல் தக்கியா’ தொடர்பான ஒரு நூலிலுள்ள பல விடயங்களை மேற்கோள்காட்டி இஸ்லாம் மட்ட ரகமாக விமர்சிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்களவர்களுக்கும் இஸ்லாம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை வாசித்துவிட்டு அதில் பல அத்தியாயங்களில் இருந்தும் நுனிப்புல் மேய்ந்து 25 வசனங்களை இப்பிரசுரத்தில் இணைப்பொன்றில் எடுத்துக்காட்டியுள்ளது. அவ்வசனங்கள் அருளப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகள் தெரியாது. சிங்கள மக்களுக்கு இஸ்லாம் மிகவும் பயங்கரவாதமுள்ள மதம் என்பதைக் காட்ட பகீரதப் பிரயத்தனம் எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி சந்தேகங்களுக்கு ஏற்கனவே அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவால் தகுந்த தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் சிங்கள மக்களைத் திசை திருப்ப இப்பிரசுரத்திலும் அவை எடுத்தாளப்பட்டிருக்கின்றன.
அப்பிரசுரத்தில் இடம்பெற்றுள்ள இரண்டொரு குர்ஆன் வசனங்களை இங்கு தருகிறேன்.
“ஆகவே சிறப்புற்ற மாதங்கள் சென்றுவிட்டால் இணை வைத்துக் கொண்டிருப்போரை அவர்களைக் கண்டவிடமெல்லாம் கொன்று விடுங்கள். இன்னும் அவர்களைப் பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள்” (அல்குர்ஆன்: 9:5)
“….நிகராகரிப்போரின் இதயங்களில் பயத்தை நான் போட்டுவிடுவேன். ஆகவே நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள். அவர்களின் (உடலிலுள்ள உறுப்புகளின்) இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள்” (அல்குர்ஆன் 8: 12)
“மேலும் (உங்களுடன் எதிர்த்துப் போரிட்ட அவர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள்….” (அல்குர்ஆன் 2: 191)
“அன்றியும் குழப்பம் நீங்கி மார்க்கம் அல்லாஹ்விற்கே ஆகும் வரை அவர்களுடன் போர் புரியுங்கள்….” (அல்குர்ஆன் 2: 193)
இவ்வாறு அப்பிரசுரத்தின் மூலம் முஸ்லிம்களைத் தப்பாகப் புரியவைக்கும் வகையில் தலை, கால் புரியாமல் குர்ஆன் வசனங்கள் பல எடுத்தாளப்பட்டுள்ளன.இந்த வகையில் பிரசுரங்கள், பிரசாரங்கள் தொடரவிடாது முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், அரச உயர் மட்டங்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும். சிங்கள ஊடகங்கள் ஊடாக தகுந்த தெளிவுரைகள் ஊட்டப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் எழக்கூடிய வன்முறைகளை ஓரளவுக்கேனும் அல்லது முற்றாகவும் தடுத்து நிறுத்தமுடியும்.
Post a Comment