எஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)
அரபு வசந்தம் அல்லது அரபு மக்கள் எழுச்சி ஆரம்பித்த முதல் நாடான டியுனிஸியாவில் 2011 ஆண்டின் பின்னர் முதல் முறையாக இம்மாதம் மே 6 ஆம் திகதி உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்றது இந்த தேர்தலில் ரஷீத் கானூசி தலைமையிலான இஸ்லாமிய பின்புலம் கொண்ட அந்-நஹ்ழா வெற்றிபெற்று 350 உள்ளூராச்சி சபைகளின் பெரும்பாலான சபைகளை அது கைப்பற்றியுள்ளது. அந்-நஹ்ழா இத்-தேர்தலில் 27.5 வீதமான வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ள இதேவேளை மற்றுமொரு பிரதான கட்சியான மதசார்பற்ற அந்நிதா டியுனிஸ் கட்சியை பின்னுக்கு தள்ளியுள்ளது இத்தேர்தலில் மதசார்பற்ற அந்நிதா கட்சி 22.5 வீதமான வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது . இந்த இரு கட்சிகளும் டியுனிஸிய தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்கும் பிரதான இரு கட்சிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அரபு மக்கள் எழுச்சி இடம்பெற்ற நாடுகளில் இஸ்லாமிய புன்புலம் கொண்ட அரசியல் கட்சிகள் அதிகாரத்தை கைப்பற்றினாலும் அதை தக்கவைத்துகொள்ள முடியாத வகையில் பல்வேறு சூழ்சிகளை ,அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு இறுதியில் மக்கள் எழுச்சி முடக்கப்பட்டமையும் இன்னும் அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருவதுதையும் பார்த்து வருகிறோம் .
அரபு வசந்தம் என்று அழைக்கப்படும் அரபு ,முஸ்லிம் மக்கள் எழுச்சி இடம்பெற்ற டியுனிஸியா தவிர்ந்த அனைத்து நாடுகளிலும் அந்த எழுச்சி நேரடியாகவே முறியடிக்கப்பட்டு முன்பிருந்ததை விடவும் மோசமான நிலையை மக்கள் எதிர் கொண்டுவருகிறார்கள் , எழுச்சி இடம்பெற்ற நாடுகளான எகிப்து ,சிரியா ,லிபிய இதற்கு சிறந்த உதாரனங்களாகும்
டியுனிஸியாவில் அந்நஹ்ழா கட்சி அரபுலக மக்கள் எழுச்சியை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நாட்டில் வெற்றிபெற்ற பின்னர் ஏட்பட்ட பல்வேறு சவால்களை எதிர்கொள்ள அரசியல் தலத்தில் பல்வேறு விட்டுகொடுப்புக்களை செய்துள்ளது செக்குலரிஷ கொள்கைகொண்ட அதேவேளை முன்னாள் டியுனிஸிய சர்வாதிகாரி ஆபிதீன் பின் அலியின் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ,ஆதரவாளர்கள் அங்கம் வகிக்கும் அந்நிதா டியுனிஸ் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள அளவுக்கு அதன் விட்டுக்கொடுப்புக்கள் இடம்பெற்றுள்ளது .
சர்வாதிகாரிகளுக்கு எதிராக மக்களின் விருப்பு ,தெரிவு என்ற ஜனநாயக கோணத்தில் அரபு வசந்தம் என்ற மக்கள் எழுச்சி வெற்றிபெற்ற நாடாக டியுனிஸியா கருதப்பட்டாலும்,அந்த வெற்றிக்கு சவால்விடும் பல்வேறு எதிர்ப்புக்களை டியுனிஸியா எதிர்கொண்டு வருகின்றது.
டியுனிஸிய இன்று எதிர்கொள்ளும் பிரதான முதல் பெரும் பிரச்சினையாக பொருளாதாக நெருக்கடி அடையாளப்படுத்தப்படுகின்றது , அரபு மக்கள் எழுச்சி ஆரம்பித்த முதல் நாடான டியுனிஸியாவில் 2011 ஆண்டின் பின்னர் இதுவரை ஒன்பது அரசாங்கங்கள் பதவியேற்றுள்ளன அவை அனைத்தும் பாரிய பொருளாதார நெருக்கடிகளையே எதிர்கொண்டுள்ளன .
இன்று விலைவாசி அதிகரிப்பு, வேலையில்லா பிரச்சினை என்பன பெரும் சவாலாக உள்ளன, பொருளாதார காரணங்களை முன்வைத்து மக்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டுள்ளார்கள், குறிப்பாக இளைஞர்களின் வேலையில்லா பிரச்சினை பூதாகரமாக மாறியுள்ளது .
டியுனிஸிய பொருளாதார அரசியல் நிலைபற்றி கூறும் ராஷித் கானுஷியின் மகளும் அரசியல் செயல்பாட்டாளரும் ,அந் நஹ்தா கட்சியின் முக்கியஸ்தருமான சுமையா கானுஷி இப்படி குறிப்பிடுகின்றார் .”மந்தமான பொருளாதார முன்னேற்றம் என்பதன் பொருள் துனிசிய ஜனநாயகம், அது சுவாரஸ்யமான அரசியல் சாதனைகளை ஈட்டியபோதும் , தவிர்க்கமுடியாது பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது , அது தொடர்ந்தும் சமநிலை பேணுவதற்கு போராடிவருவதுடன் , தொடர்ந்தும் ஒரு காலிலேயே நிற்கின்றது ”.என குறிப்பிடுகிறார் .
இதேவேளை டியுனிஸிய பொருளாதார கொள்கையில் உடனடியாக மாற்றத்தை அரசாங்கம் செய்யவேண்டும், சர்வதேச நாணய நிதியம் ,உலக வங்கி மற்றும் சர்வதேச நீதி நிறுவங்களில் முழுமையாக தங்கியிருக்காமல் அரசாங்கம் தனக்கான சுதந்திரமான பொருளாதார கொள்கையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என அரசியல் ,பொருளாதார நிபுணர்கள் மற்றும் இடது சாரிகள் கோரிவருகின்றனர் . இவர்கள் கொம்பனிகள் அதிகமான சுதந்திரத்தையும் , வரி விடுதலையையும் அனுபவித்து வரும் நிலையில் மக்கள் வேலையில்லா பிரச்சினை, விலைவாசி அதிகரிப்பு , நாணய பெறுமதி வீழ்ச்சி , போன்ற பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகின்றனர் .
இது பற்றி குறிப்பிடும் அரசியல் ,பொருளாதார ஆய்வாளர்கள் சிலர் , சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து பெறப்படும் கடனுக்காக உருவாக்கப்படும் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் சர்வதேச நாணய நிதியம் நாட்டை பிணைக்கைதியாக வைத்துள்ளது என குற்றம் சாட்டுகின்றனர் . மேற்கு நாடுகளும் , அமெரிக்காவும் சர்வதேச நீதி நிறுவனங்களும் டியுனிஸியாவின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பதை அலட்சியம் செய்கின்றன எனவும் இவர்கள் விமர்சங்களை முன்வைக்கின்றனர் .
இன்னும் சில அரசியல் பொருளாதார ஆர்வலர்கள் இது பற்றி குறிப்பிடும்போது இப்போது இருக்கும் அரசாங்கம் பின் அலியுடன் தொடர்புபடும் கொம்பனிகளுக்கும் அவரின் உறவினரின் கொம்பனிகளுக்கும் தேவையான வகையில் பொருளாதார கொள்கைகளை உருவாக்குவதுதான் இன்றைய நெருக்கடிக்கு பிரதான காரணமாகம் எனகுற்றம் சாட்டுகின்றனர் ,
அந்நஹ்ழா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த நெருக்கடிகள் பற்றி குறிப்பிடும்போது நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சவால்கள் ,நெருக்கடிகள் மத்தியில் சரியான திசையில் பயணிப்பதாக தெரிவிக்கின்றார் , 18.5 ஆக இருந்த வேலையில்லா பிரச்சினை தற்போது 15.2 ஆக குறைக்கப்பட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணம் என அவர் சுட்டிக்காட்டுகிறார். .
இவற்றின் ஊடாக டியுனிஸியா அரசியல் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருப்பதையும் , டியுனிஸியாவின் மக்கள் அரசு மிகவும் இளமையாகவும் ,அரசியில் ரீதியில் பலவீனமாகவும் இருப்பதுடன் சர்வதேச முதலாளித்துவ நீதி நிறுவங்களின் பாதகமான நிபந்தைக்ளுக்கு உட்பட்டிருப்பதையும் விளங்கிக்கொள்ள முடிகிறது . இந்த சவால்களில் இருந்து நாட்டை பாதுகாக்க இஸ்லாமிய அடித்தளத்தை கொண்ட அந்நஹ்ழா கட்சி பல்வேறு விட்டுக்கொடுப்புக்களுடன் தாம் நகர்வுகளை மேற்கொள்வதாக சில அவதானிகள் குறிப்பிடுகின்றனர்
அந்நஹ்ழா கட்சியின் தலைவர் ரஷீத் கானூசி அந்நஹ்ழா கட்சியை வரைவிளக்கணப்படுத்தும் புதிய முறையின் ஊடாகவும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தீவிரத்தையும் அதை சமாளிக்க அவர்கள் மேற்கொள்ளும் விட்டுக்கொடுப்புக்களையும் விளங்கிக்கொள்ள சில அவதானிகள் முற்படுகின்றனர் , ” அந் நஹ்ழா என்பது முஸ்லிம் கலாசார மற்றும் நவீனத்துவ பெருமான குறிப்புகள் கொண்ட ஒரு சிவில் ,ஜனநாயக அரசியல் கட்சி ,நாங்கள் அரசியல் நடவடிக்கைகளை மட்டுமே விசேடமாக கொண்ட ஒரு அரசியல் கட்சி நோக்கி பயணிக்கிறோம் , முஸ்லிம் ஜனநாயகத்தில் நுழைவதற்காக அரசியல் இஸ்லாதில் இருந்து வெளியேறுகிறோம் ,நாங்கள் முஸ்லிம் ஜனநாயகவாதிகள் , நாங்கள் எம்மை அரசியல் இஸ்லாத்தில் அங்கமாக அடையாளப்படுத்த வில்லை” என தெரிவிப்பதன் மூலம் இதை விளங்கிக் கொள்ள முடியும் என குறிப்பிடுகின்றனர் .
ஒரு முறை அரபு வசந்தம் மற்றநாடுகளில் தோல்வியை சந்தித்துள்ளமை பற்றி குறிப்பிட்ட ரஷீத் கானூசி ” அந்த நாடுகளின் உள்நாட்டு சக்திகள் ஒன்றிணைவதில் வெற்றி பெறவில்லை. அவர்களிடையே விட்டுக் கொடுப்புகள் இல்லை. இது வெளிப்புற சக்திகளின் தலையீட்டிற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. லிபியாவில் பெட்ரோலிய வளம் உள்ளது. துனீசியாவில் எண்ணெய் இல்லாதது எங்களின் அதிர்ஷ்டம்தான். இங்கு ஒலிவ் எண்ணெய் மட்டும்தான் உள்ளது”.மற்றும் நாம் வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சிறிய நாடு , இஸ்ரேலின் -மத்திய கிழக்கு பிரச்சினையின் கூறுகள் மீது நேரடி தாக்கங்களை கொண்டிராத நாடு”” என குறிப்பிட்டிருந்தார் உண்மையில் மேற்சொன்ன காரணிகளும் அரபு வசந்தம் இன்னும் அந்நாட்டில் நிலைத்திருக்க ஏதுவான காரணிகளாக உள்ளது ஆனாலும் தற்போது அந்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் அவதானிக்கும்போது சர்வதேச நிதி நிறுவங்களின் கையில் அந்நாடு பலமாக சிக்கிக்கொண்டுள்ளது என்ற வாதத்தை மறுக்க முடியாது இந்த பின்னணியில் அரசாங்கமும் , அந்-நஹ்ழா கட்சியும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தன்னை காத்துக்கொள்ள ”இல்லாது போதல் என்பதை விடவும் பலவீனமாக இருத்தல் ” என்ற தெரிவை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது என்ற புரிதலை பலப்படுத்தும் விதமாகத்தான் கிடைக்கும் தரவுகள் அமைத்துள்ளது .
இந்த சவால்களுக்கு மத்தியிலும் அந்-நஹ்ழா நாட்டு மக்கள் மத்தியில் செல்வாக்கை தக்கவைக்க போராடிவருவதுடன் அதில் கணிசமான வெற்றியையும் பெற்றுவருகின்றது என்பது முக்கிய செய்தி, இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாகத்தான் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் அந்-நஹ்ழாவுக்கு சாதகமாக வெளிவந்துள்ளது , பல்வேறு சவால்கள் மத்தியிலும் அந்-நஹ்ழா கட்சி, மதசார்பற்ற அந்நிதா கட்சியை பின்னுக்கு தள்ளி வெற்றிபெற்றுள்ளமைக்கு பல்வேறு காரணங்கள் முவைக்கப்படுகின்றது அதில் அந்-நஹ்ழா , இயக்கமாகவும் ,கட்சியாகவும் செயல்பட்டு தனக்கு எதிரான அண்மைக்கால விமர்சங்களுக்கு ஐய்யங்களுக்கு மக்கள் மத்தியில் தெளிவை முன்வைத்து வந்தமை மற்றும் 350 உள்ளுராட்சி சபைகளுக்கும் 50 வீதமான வேட்பாளர்களை மக்களிடம் இருந்து தெரிவு செய்யவும் மற்றைய 50 வீதமான வேட்பாளர்களை கட்சி உறுப்பினர்களிடம் இருந்து எடுத்துக்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருந்தமை என்பன சுட்டிக்காட்டப்படுகின்றது
அந்-நஹ்ழாவின் நகர்வுகள் பற்றி அதன் தலைமைத்துவத்தின் சில முடிவுகள் பற்றி இஸ்லாமிய புன்புலத்திலான பல நியாயமான மற்றும் நியாயமற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன அவை மற்றுமொருபுறத்தில் இருந்து அணுகப்படவேண்டிய விடயம் என்பதால் அவை இங்கு தவிர்க்கப்பட்டுள்ளது.
இது ஒரு இணையத்தளத்துக்கான பதிப்பு இந்த கட்டுரை எஸ்.எம்.மஸாஹிம்- ((இஸ்லாஹி)-BA.Hons (special in political science)) னால் இரு வாரங்களுக்கு முன்னர் எழுதப்பட்டு எங்கள் தேசம் பத்திரிகையில் வெளியான கட்டுரையாகும்
Post a Comment