Top News

புரொபிட் செயாரிங் நிறுவனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்? முஜீபுர் றஹ்மான்



2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட செலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனம் 8000 அதிகமான முதலீட்டாளர்களை பங்காளிகளாக இணைத்திருந்தது. குறித்த செலிங்கோ நிதி நிறுவனத்தின் கிளைகள் இலங்கையின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்டன.. விஷேடமாக கொழும்பு, காத்தான்குடி, ஓட்டமாவடி, அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை, அக்குரணை, பேருவளை, புத்தளம் போன்ற பிரதேசங்களில் இந்த நிதி நிறுவனத்தின் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதில் முதலீடு செய்த பொதுமக்கள் இன்று தமது பணத்தை இழந்து அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் தெரிவித்தார். 

நாட்டில் உள்ள நிதி நிறுவனங்களின் இன்றைய பிரச்சினைகள் தொடர்பாக ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்டு பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே முஜிபுர் றஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தனதுரையில் கூறியதாவது,
சமீபத்தில் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்ட ஈரிஐ ETI நிதி நிறுவனம் பற்றியும், அதன் வங்குரோத்துத் தன்மைக்கான காரணிகள் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். இந்த நிதி நிறுவனங்களின் வங்குரோத்து நிலையினால் பொதுமக்களே; மோசடிக்குள்ளாகியிருக்கின்றனர். பொதுமக்கள் சொத்துக்களை இழந்து பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

நான் இன்று, ஊடகங்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காத, பொதுமக்கள் தமது பணத்தை முதலீடு செய்து வங்குரோத்து அடைந்த நிதி நிறுவனம் ஒன்று தொடர்பாக சில தகவல்களை வெளியிட விரும்புகிறேன். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு இன்று நடுத்தெருவில் நிற்கும் நிலை உருவாகியிருக்கிறது.

செலிங்கோ குரூப் நிறுவனத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்ட  செலிங்கோ புரொபிட் செயாரிங் இன்வெஸ்ட்மன் கோபரேஷன் Ceylinco Profit Sharing Investment Corporation என்பதே அந்த நிறுவனத்தின் பெயராகும். 

இந்த நிதி நிறுவனத்தில் பண முதலீடு செய்யும்படியும் மற்றைய நிதி நிறுவங்களை விடவும் கூடுதலான மாதாந்த இலாப பங்கீட்டைப் பெறக் கூடிய வசதி வாய்ப்புக்கள் இந்நிறுவனத்திலே இருப்பதாகவும் ஆசையும் ஆர்வமும் ஊட்டியே  இதில் முதலீட்டாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

2002ம் ஆண்டில் இந்த நிதிநிறுவனத்தில்  600 மில்லியனுக்கும் அதிகமான நிதி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. அன்றாட தொழில் செய்து உழைப்பவர்கள், அரச தொழில் செய்து ஓய்வு பெற்றவர்கள், ஊழியர் சேமலாப நிதியைப் பெற்றவர்கள் அனைவரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தனர். தனது சேவைக் காலத்தில் விவர்வை சிந்தி உழைத்த பணம் 600 மில்லியன் ரூபாய்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் அந்த அப்பாவி மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை தவிடு பொடியாக்கி விட்டு 2009ம் ஆண்டிலே மேற்குறித்த நிறுவனம் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த நிதி நிறுவனத்திற்கு ஊடகங்களில் பாரிய பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. செய்திப் பத்திரிகைகளில் முழுப்பக்க விளம்பரங்களும் பிரசுரிக்கப்பட்டன. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஒலி, ஒளிபரப்பப்பட்டன. இந்த கவர்ச்சியில் சிக்கிய மக்கள் தமது பணத்தை இந்த நிறுவனத்தில் முதலீடாக இட்டனர். 

இந்த நிதிநிறுவன அதிகாரிகள் அப்பாவி மக்களின் மூலம் முதலீடு செய்யப்பட்ட பணத்தை பலருக்கு கடனாக வழங்கியுள்ளனர். மிகவும் கவனயீனமான முறையில் இவர்கள் செயற்பட்டுள்ளனர்;. ஏழை உழைப்பாளிகளிடமிருந்து முதலீடாக பெற்ப்பட்ட பணத்தை தனக்கு தேவையான தனிப்பட்ட நபர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் கடனாக வாரி வழங்கியுள்ளனர். 

இவர்கள் கடன் வழங்கிய இலட்சணத்தைப் பாருங்கள்.
'பினான்ஸ் என்ட கெரண்டி' என்ற பெயருடைய நிறுவனமொன்றுக்கு 220 மில்லியன் ரூபாயும், சசெக்ஸ் என்ற பெயருடைய கல்வி நிறுவனமொன்றிற்கு 140 மில்லியன் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. 
ரமீஸா சஹாப்தீன் என்ற பெண்ணொருவருக்கு தனிப்பட்ட முறையில் 90 மில்லியன் ரூபாய்களை அந்த பெண்ணின் வர்த்தக நடவடிக்கைக்காக கடனாக வழங்கப்பட்டுள்ளது. 

இதிலே முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த ரமீஸா சஹாப்தீன் என்பவருக்கு வழங்கப்பட்ட 90 மில்லியன் ரூபாய் கடனுக்கு பிணையாக  எந்த காணி உறுதிகளோ, எந்தவித ஆவணங்களோ இல்லாமல் இந்த கடன் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. 

ரமீஸா சஹாப்தீன் என்ற பெண்ணுடைய கணவர் வழங்கிய கடிதம் ஒன்றை சான்றாக வைத்தே இந்த மிகப்பெரிய தொகையான 90 மில்லியன் ரூபாய்களை செலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனம் கடனாக வழங்கியுள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் கடந்த ஆட்சியில் சிவில் விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் தலைவராக இருந்திருப்பதோடு, தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தில்  இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார். இவரின் சிபார்சில் இவரது மனைவி பெற்றுக்கொண்ட 90 மில்லியன் ரூபாயில் இதுவரையில் 35 மில்லியன் ரூபாய்கள் மாத்திரமே திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு தமது பணத்தை இழந்தவர்கள் 2010ம் ஆண்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருக்கின்றார்கள். இதில் வருந்தத்தக்க விடயம் யாதெனில் 9 வருடங்களாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையையும் இந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் எடுக்காமல் காலம் கடத்தி வந்திருக்கின்றனர். 

மத்திய வங்கி கூட இந்த பிரச்சினையில் பாராமுகமாகவே இருந்துள்ளது. பணத்தை இழந்து பாதிப்புக்குள்ளான முதலீட்டாளர்களின் கோரிக்கைக்கு பதிலளித்துள்ள மத்திய வங்கி தமது நிறுவனத்தால் பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனமாக குறித்த சிலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனம் இருப்பதால் இந்தப் பிரச்சினையில் தம்மால் தலையிட முடியாது என்றும் அறிவித்துள்ளது. 

ஆகவே இந்த விடயத்தை நிதியமைச்சரின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். மத்திய வங்கியின் அனுமதி இன்றி ஊடகங்களில் விளம்பரப்படுத்தி இந்த நிறுவனம் பொதுமக்களின் பணத்தை எவ்வாறு பெற்றது? மத்திய வங்கிக்குத் தெரியாமல் இவ்விதமான போலி நிதி நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட்டன? பாதிக்கப்பட்ட மக்களின் கேள்விகளுக்கு மத்திய வங்கியின் பதில் என்ன? இந்த விடயத்தில் மத்திய வங்கி கண்மூடித்தனமாகவே செயற்பட்டுள்ளது அம்பலமாகியிருக்கிறது.



இந்த நிதிநிறுவனத்தில் தமது பணத்தை முதலீடு செய்து இன்று நடுத்தெருவில் நிற்பவர்களுக்கு விமோசனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். நிதியமைச்சர் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

Post a Comment

Previous Post Next Post