நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் தொல்பொருட்கள் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசங்களிலெல்லாம் எமது அரசர்கள் காலடி வைத்துள்ளார்கள். இந்தத் தொல்பொருட்கள் இன்று அழிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஏனையமதத்தவர்கள் அழிக்கவில்லை. பௌத்தர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொரு நாளும் புத்த தர்மத்தைப் பேசும், பௌத்த தர்மத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்பவர்களே இதனைச் செய்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்லையில் அண்மையில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது; “இன்று நாட்டில் புதைபொருட்களை அழித்து அப்பிரதேசங்களில் வீடுகள் நிர்மாணிக்கிறார்கள். இதனை நான் கண்ணுற்றேன். 20 வீடுகள் நிர்மாணிப்பதற்கு 10 ஏக்கர் நிலத்தை சுத்திகரிப்பு செய்கிறார்கள். பெகோ இயந்திரத்தினால் டோசர் பண்ணுகிறார்கள். அம்பாறையில் முழுமையாக டோசர் பண்ணியிருக்கிறார்கள். இவற்றை ஏனைய இன மக்கள் செய்யவில்லை. பௌத்தர்கள் என்று கூறிக்கொள்பவர்களே இதனைச் செய்கிறார்கள். இதைப்பற்றி கவனத்தில் கொள்ளாது சிலர் மௌனமாக இருக்கிறார்கள். வலஸ்முல்லைப் பகுதியிலும் தொல்பொருளுக்கு இந்த நிலைமையே ஏற்பட்டுள்ளது. அநுராதபுரத்திலும் இவ்வாறே தொல்பொருட்களை சிதைவுக்குள்ளாக்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இப்போது அறநெறிப் பாடசாலையொன்றினை அமைப்பதற்கு அனுமதி பெறவேண்டும். அனுமதி பெறச் சென்றால், அறநெறிப் பாடசாலைக்கு எத்தனை மாணவர்கள் வருகிறார்கள். பாடசாலை அமைக்கவுள்ள காணியின் அளவு போன்ற விபரங்களை கேட்கிறார்கள். அதன் பின்பு அதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் கமிட்டியிடம் செல்லவேண்டும்.
அந்தக் கமிட்டியில் முஸ்லிம் சமயத் தலைவர்கள், பௌத்த குருமார் கத்தோலிக்க இந்து குருமார் என அப்பிரதேசத்திலுள்ள சமயத் தலைவர்கள் அடங்கியுள்ளார்கள். இவர்களில் எவராவது எதிர்ப்பு தெரிவித்தால் மாவட்ட காரியாலயத்துக்கு செல்ல வேண்டும். அங்கு மாவட்ட ரீதியிலான மதத்தலைவர்கள் அங்கம் பெற்றிருக்கிறார்கள். அங்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டால் அதனைவிட மேலான இடத்துக்குச் செல்லவேண்டும். இதனால் அறநெறிப் பாடசாலையொன்று அமைப்பதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளப் பல வருடங்கள் செல்லலாம்” என்றார்.
Post a Comment