Top News

முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு ஜுலை 21இல்

Image result for முஸ்லிம் மீடியா போரம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மாநாட்டின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மூன்று மேற்படி பதவிகளுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நியமனக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 30 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார். (நு)
– எம்.எஸ்.எம்.ஸாகிர் –

Post a Comment

Previous Post Next Post