ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அகவை 22இல் கால் பதித்துள்ளது. இலங்கை முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு இற்றைக்கு 32 வடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட முதல் முயற்சியும் 22 வருடங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது முயற்சியும் என் நினைவுக்கு வருகின்றது.
1985இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா அலயன்ஸ் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட ஊடக அமைப்பு அன்று தாய் நாடு எதிர்நோக்கியிருந்த நெருக்கடி நிலை காரணமாக சிறிது காலமே இயங்கியது. மர்ஹும் ஏ. சி. ஏ. கபூர் (எக்கொனமிக் டைம்ஸ் ஸ்தாபக ஆசிரியர்) என். எம். அமீன் (தினகரன்), மர்ஹும் ஏ.எல். எம். சனூன் (வீரகேசரி) ஆகியோர் தலைவர், செயலாளர்,பொருளாளர் பதவிகளை வகித்த இந்த அமைப்புக்குப் பதிலாக 1995இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மூத்த ஊடகவியலாளர் மர்ஹும் எஸ்.பி.சி. ஹலால்தீன் தலைமையில் 34 அங்கத்தவர்களுடன் உருவாக்கப்பட்டது. அதன் செயலாளராக என்.எம். அமீனும், மர்ஹும் எம்.பி.எம். அஸ்ஹரும் தெரிவானார். 1995 ஜுன் மாதம் உருவாக்கப்பட்ட அமைப்பு இப்போது அகவை 22இல் கால்வைத்துள்ளது.
34 அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட போரம் இன்று 870 அங்கத்தவர்களால் ஆளப்படும் ஒரு சக்திமிகு அமைப்பாக வளர்ச்சி கண்டுள்ளது.
ஊடகத்துறையில் முஸ்லிம் சமூகத்தின் ஆர்வம் அக்கறை குறைந்திருந்த காலத்தில் இப்போது அரச, இலத்திரனியல், ஊடகங்களில் பணிபுரிந்த வாய்விட்டு எண்ணக் கூடிய முஸ்லிம் ஊடகவியலாளர்கள் சிலராலேயே, இந்த போரம் உருவாக்கப்பட்டது.
அங்கத்தவர்களது நலனுக்காகப் பணிபுரிவதோடு, முஸ்லிம் சமூகத்தின் ஊடகப் பேச்சாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கடந்த 21வருட காலத்தில் இயங்கியிருப்பதனை மீட்டிப் பார்க்கும் போது இந்த அமைப்பினை உருவாக்கிய நோக்கம் நிறைவு பெற்றுள்ளது என்று குறிப்பிடலாம்.
‘ஊடகங்கள் வாயிலான அழைப்புப்பணியே இன்றைய காலத்து ஜிஹாத்’ என்று முதுபெரும் அறிஞர் யூஸுப் அல் - கர்லாவி சொல்லியிருக்கும் கூற்றை முன்னெடுப்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் பணியை சிறப்பாக முன்னெடுத்து வருகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் முஸ்லிம் ஊடகவியலாளர்களைக் கொண்ட அமைப்பாக இருந்த போதும் அதன் பணிகள் ஒருபோதும் முஸ்லிம் சமூகத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதற்கு சிறந்த உதாரணம் எமது அமைப்பின் 20ஆம் ஆண்டு நிறைவு விழாவில் நாம் வெளியிட்ட ‘கூர்(மை)முனை’ மலருக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை விடுத்த இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர், லசந்த ருஹுனகே தெரிவித்திருக்கும் கருத்தாகும்.
“பெயரில் முஸ்லிம் ஊடக அமைப்பாக இருந்தாலும் அது முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்காக பேசும் அல்லது பேசிய அமைப்பல்ல. இலங்கையின் சகல ஊடகவியலாளர்களுக்குமாக பேசிய பேசும் ஓர் அமைப்பாகும்”.
இலங்கையில் ஊடக சமூகம் எதிர்நோக்கிய பலத்த வன்செயல்கள் மற்றும் பயங்கரம் நிறைந்த இருள் சூழ்ந்த காலத்தில் ஊடக அமைப்புக்கள் கூட்டாக எம்முடன் இணைந்து ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மேற்கொண்ட போராட்டங்கள் மற்றும் பணிகளை இச்சந்தர்ப்பத்தில் கௌரவத்துடன் நினைவுபடுத்த வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் நாட்டின் ஏழு பிரதான ஊடக அமைப்புகளில் ஓர் அங்கமாகச் செயற்பட்டு ஊடகவியலாளர்களது நலனுக்கும் ஊடக சுதந்திரத்துக்கும் மட்டுமன்றி சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் கடந்த இரு தசாப்தங்களாக அளப்பரிய பங்களிப்புச் செய்துள்ளது. இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, தமிழ் ஊடகவியலாளர் சங்கம், ஊடக தொழிற்சங்க சம்மேளனம், தெற்காசிய சுதந்திர அமைப்பு என்பனவற்றுடன் கைகோர்த்துக் கொண்டு செயற்பட்டுள்ளது மட்டுமன்றி தொடர்ந்து செயற்பட்டும் வருகின்றது. எமது இந்த செயற்பாடுகள் காரணமாக முஸ்லிம்களுக்காக தனியான ஓர் ஊடக அமைப்பா? என கேள்வி எழுப்பியவர்கள் கூட எமது பணிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். இந்நாட்டில் காலத்துக்கு காலம் இடம்பெற்று வந்த ஊடக அடக்கு முறைகளுக்கு எதிராக எமது அமைப்பு தொடர்ந்து முன்னணியிலே செயற்பட்டு வந்துள்ளது.
ஊடக சமூகத்தின் அறிவுசார் மேம்பாட்டுக்காக எமது அமைப்பு பங்களிப்புகளை மேற்கொண்டு வருகின்றது. கொழும்பு பல்கலைக்கழகம் நடத்தும் ஊடக டிப்ளோமா பாடநெறி சிங்கள மொழியில் மட்டும் நடத்தப்பட்ட போது அமைப்பு கொழும்பு பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு தமிழ் மொழியில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுத்தது. இதன்படி நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு இந்தப் பாட நெறியைப் பயிலும் வாயப்புக் கிடைத்தது என்பது குறித்து அமைப்பு பெருமை கொள்கிறது.
தமிழ் பேசும் இளைய தலைமுறையினருக்கு ஊடக அறிவினை வழங்கும் நோக்கில் அமைப்பு பாடசாலை மட்டத்திலும் பல்கலைக்கழகம், அரபுக் கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் மத்தியிலும் ‘21ஆம் நூற்றாண்டில் ஊடகம்’ என்ற தொனிப் பொருளில் நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் 60 பாடசாலைக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளது. இந்த கருத்தரங்குகளை நடத்துவதற்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தனவந்தர்கள் எமக்கு அனுரசணை வழங்கியதனை நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
1882ஆம் ஆண்டு மர்ஹும் அறிஞர் சித்திலெப்பை ‘முஸ்லிம் நேசன்’ என்ற பத்திரிகையை ஆரம்பித்து முஸ்லிம்களது கண்களைத் திறக்க வைத்தார். அன்று முதல் முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஊடகங்கள் உருவாகாமை பற்றி முஸ்லிம் மீடியா போரம் கடந்த 22 வருடங்களாக உரத்துக் குரல் கொடுத்து வந்துள்ளது. முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் தேசிய ஊடகங்கள் உருவாக வேண்டும் என்ற முஸ்லிம் மீடியா போரத்தின் கோரிக்கை ஓரளவு வெற்றி கண்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தினால் இப்போது பல பத்திரிகைகள் நடத்தப்படுகின்றன. நவமணி, விடிவெள்ளி என்பன நாளிதழாக வெளிவருகின்றமை எமது குரலுக்குக் கிடைத்த வெற்றியாகவே குறிப்பிடலாம். இது தவிர எங்கள் தேசம், மீள்பார்வை போன்ற இரு வார ஏடுகளும் பல வருடங்களாக ஊடகப் பணியிலீடுபட்டு வருகின்றன. ஜப்னா முஸ்லிம், மடவளை எப்.எம்., டெய்லி சிலோன் போன்ற முஸ்லிம்களால் நடத்தப்படும் இணையத்தளங்களும் இக்கால கட்டத்தில் உருவாகி ஊடகப் பணிபுரிந்து வருகின்றன. இது தவிர முதன் முறையாக முஸ்லிம் சமூகத்தின் பங்களிப்புடன் யூரீவி என்ற தொலைக்காட்சி சேவையும் ஆரம்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் முதன் முறையாக ஊடக டயறியை வெளியிட்ட பெருமை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்துக்குரியது. அமைப்பு இதுவரை ஐந்து பதிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆறாவது பதிப்பும் வருடாந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ளது.
மூன்று தசாப்த காலமாக நாட்டில் நீடித்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன்பின் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்குவாதிகள் கடடவிழ்த்துவிட்ட வெறுப்புப் பிரசாரத்தை எதிர் கொள்வதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் முக்கிய வகிபாகத்தை மேற்கொண்டது. இன்றும் மேற்கொண்டு வருகின்றது. முஸ்லிம்களது தரப்பிலுள்ள நியாயத்தை உணர்த்துவதில் மீடியா போரம் நிறைந்த பங்களிப்பினைச் செய்துள்ளது. செய்தும் வருகின்றது. இது தொடர்பாக திரைமறையிலிருந்து முஸ்லிம் மீடியா போரம் நிறைந்த பங்களிப்பினைச் செய்து வந்துள்ளது. பாடசாலைக் கருத்தரங்குகளை நடத்துவதிலே முஸ்லிம் மீடியா போரம் ஈடுபடுகின்றது. என்று வெளிப்பார்வையில் தென்பட்டாலும் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிப்பதில் அமைப்பு ஆற்றிவரும் பணியை பகிரங்கப்படுத்துவதற்கு அமைப்பு அக்கறை காட்டவில்லை.
ஊடக அமைப்பு ஒன்றுக்கு அப்பால் சென்று சமூகத்தின் ஊடகப் பேச்சாளராக, தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் சமூகம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அமைப்பின் பிரதிநிதிகள் அடிக்கடி தோன்றி பதில்களையும் தெளிவுகளையும் வழங்கி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் தற்போதைய பதவிக் காலத்தில் மேற்கொண்ட முக்கிய ஒரு பணி அகில இந்திய முஸ்லிம் லீக்குடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்பாகும். அமைப்பின் அழைப்பில் கடந்தாண்டு இலங்கைக்கு விஜயம் செய்த அகில இந்திய முஸ்லிம் லீக்கின் தலைவரும் முன்னாள் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் முகைதீன் தலைமையிலான தூதுக்குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக இந்த இணைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாகவே இந்த வருட மாநாட்டுக்கு அகில இந்திய முஸ்லிம் லீக்கின் பிரதிநிதியாக அதன் தமிழ் நாட்டின் சட்ட மன்ற உறுப்பினரும் அதன் செயலாளருமான கே. எம்.ஏ. அபூபக்கர் அவர்கள் கலந்து கொள்கிறார்.
இதேநேரம் தமிழ்நாட்டில் மீடியா போரம் ஒன்றை உருவாக்குவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரது சென்னை விஜயத்தின் போது சென்னை ஊடகவியலாளருடன் தொடராக நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பயனாக தமிழ்நாடு மீடியா போரம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டது. எமது அமைப்பின் யாப்பின் அடிப்படையிலேயே இந்த போரம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பின்னணியிலே அமைப்பு இம்மாதம் 21ஆம் திகதி அதன் 22ஆவது வருடாந்த மாநாட்டினை நடத்துகிறது. இந்த மாநாட்டில் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும் முன்னேற்றதுக்கும் அளப்பரிய பங்களிப்புச் செய்த பேராதனைப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் மார்க்க அறிஞருமான மௌலவி ஏ. எல்.எம். இப்றாஹிம் உளவள ஆலோசகரும் முஸ்லிம்களுக்கு எதிராக கடும்போக்கு அமைப்புகள் மேற்கொண்ட வெறுப்பு பிரசாரத்தின் போது சிங்களத்திலே தெளிவான பதில்களை வழங்கிய வழங்கி வரும் சகோதரர் தஹ்லான் மன்சூரும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இது தவிர ஊடகத்துறையில் பல தசாப்தங்களாக அரும்பணி புரிந்த புரிந்துவரும் அல் - இஸ்லாம் ஸ்தாபக ஆசிரியர் ஹம்ஸா ஹனீபா, தயா லங்கா புர, (சிரேஷ்ட ஊடகவியலாளர் தகவல் திணைக்களம்), எம். இஷட் அஹ்மத் முனவ்வர் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர்), கலாநிதி ஞானசேகரன் (ஆசிரியர் ஞானம் சஞ்சிகை), திருமதி ஸக்கியா சித்தீக் பரீத் (ஆசிரியர் பீடம் நவமணி), மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்) எம். ஐ. சம்சுதீன் (பிராந்திய ஊடகவியலாளர்) ஆகியோரும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
கொழும்பு - 05 நாரஹேன்பிட்டிய அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் விழா நடைபெறுகிறது.
இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்ஜா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
மாநாட்டின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் மேற்படி பதவிகள் மூன்றுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நியமனக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 32 பேர் வேட்பு மனுக்களைத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளது.
இதன்போது Media Directory இன் 6ஆவது பதிப்பு வெளியிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தலைவர்
என்.எம். அமீன்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
Post a Comment